Saturday, July 13, 2013



உனக்காகத்
தொல்காப்பிய பெருமானார்
என்ன சொல்கிறார்?




இலக்கியம் – இலக்கணம்
எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?


அறக்கழிவு உடைய, பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தது என்ப
                                                                      - தொல்காப்பியர்

       அறநிலையிலிருந்து கழிந்து நீங்கிப்போன நிலையில் உள்ள ஒரு பண்பு நிலையோ, செயல் நிலையோ, ஒழுக்க நிலையோ என எதுவாக இருந்தாலும் கூட, அஃது ஏதோ ஒன்றை எடுத்துக் காட்டுவதற்கு மிகமிக இன்றியமையாததாக இருந்தாலுங் கூட, அத்தகைய அறக்கழிவான தன்மைபெற்ற ஒன்றினை வாழ்க்கை நிகழ்ச்சியாகத் திறம்பட எடுத்துக்காட்டி; இலக்கியம் செய்வது என்பது பழியுடையது. அதனால், படைப்பவர்க்கோ படிப்பவர்க்கோ புகழத்தக்கதான உயர்நிலை எதுவுமே  உண்டாகமாட்டாது.
இந்த அடிப்படையான வாழ்க்கை இலக்கிய உண்மையினைச் சான்றோர் பெருமக்கள் காலங் காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

மிக்க பொருளினுள், பொருள்வகை புணர்க்க,
நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே
                                                                - தொல்காப்பியர்

      ஆகையாலே, எதுவாக இருந்தாலும் அது சிறந்தனவற்றுள்ளும் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் நிலையில் இருக்கவேண்டும். அப்படி இருக்குமானால், அதனைக் கொண்டு இலக்கியம் செய்ய (புணர்க்க) வேண்டும். அதுவும் நாண் (வெட்கமுறும் தன்மை – பழிக்கு நாணுகின்ற பண்பு) என்னும் பண்புக்கு உட்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.

      நாண் என்பது பெண்மைக்கு உரிய நிலையில், பண்பியல் அல்லது குணநிலை சார்ந்த வெட்கப்படும் தன்மை. அதே நாண் என்பது ஆணுக்கு உரிய நிலையில் கருமத்தால் நாணுதல் அதாவது செயலால் நாணுதல் (வெட்கப்படுதல்) என்று பொருள்படும். எனவே, இருபாலருக்கும் நாணுப் பண்பு உண்டு. அதன் வெளிப்பாட்டு நிலையில்தான் சிறிது வேறுபாடு உள்ளது.
     
      ஆணும் பெண்ணும் என கூடி அமையப்பெறுகின்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளை இலக்கியம் ஆக்கும்போது, மேற்சொன்ன நாணுத் தன்மையிலிருந்து பிரிந்த – விலகிய நிலையில் செய்யக்கூடாது. நாணுத் தன்மையோடு ஒத்துச் செய்யப்படுகின்ற இலக்கியத்திலிருந்தே மக்களுக்கு நல்வழிப்படுதற்கான திறவு கிடைக்கின்றது.


தலைமக்கள்
என்போர் யாவர்?


  தலைநிற்றல் என்றால், ஒரு நிலையில் சிறந்து மேம்பட்டு இருத்தல் எனப் பொருள்படும். தலைமை என்பது ஒரு நிலையில் அல்லது துறையில் அதற்குரிய அறிவுத் திறம், ஆற்றல், நுணுக்கம், செப்பம், செயல்வன்மை, ... போன்ற பண்புகளால் வளம்பட்டிருக்கும் தகுதி அல்லது தன்மையினைக் குறிக்கும்.

ஆகவே, தலைமக்கள் என்போர் உலக வாழ்க்கையில் மற்ற எவரினும் மேம்பட்ட நற்பண்பு, நல்லாளுமை, நற்செய்கை, நல்லொழுக்கம் பொருந்திய உயர்ந்த பண்பாளர்கள் ஆவர்.

      தலைமைப்பாடு என்பது ஒருவரிடத்தில் மற்றவர்களைவிட மேந்தோன்றித் தெரியும் திருவார்ந்த தகைமை. இதனையே திருவள்ளுவர், தோன்றிற் புகழொடு தோன்றும் பண்பு என்பதாக விளக்கியுள்ளார்.

தலைமைப்பாடு என்பது அடிப்படையில், ஆண்மை, பெண்மை என்னும் இரண்டு வகையான தன்மைகளைச் சார்ந்து நிற்பதால் ஆண்மை நிலையில் தலைமைப்பாடு உடையவர் தலைமகன் எனப்படுவார். அதே போல, பெண்மை நிலையில் தலைமைப்பாடு உடையவர் தலைமகள் எனப்படுவார்.

      தலைமகனைத் தலைவன், கிழவன் எனவும்; தலைமகளைத் தலைவி, கிழத்தி, கிழவி எனவும் சிறப்பித்துக் கூறும் மரபு பழந்தமிழ மரபு. அறிவிலும் செயலிலும் உரன் என்னும் பண்பிற் சிறந்து நிற்பவருக்குத்தான் பெருமை என்பது தானே உண்டாகின்றது. இதனையே இல்லற வாழக்கைக்கு அடிப்படையான தலைமகன் இலக்கணம் என்கிறார் தொல்காப்பிய பெருமானார்.

            பெருமையும் உரனும் ஆடூஉ மேன

இயற்கையாகவே நாணும் தன்மை சிறந்துள்ள காரணத்தால், பெண்கள் இடத்தில் அடக்கம் என்னும் பண்பு நன்கு மிளிர்ந்து அவர்களுக்குப் பெருமையளிக்கின்றது. அவ்வழியிற் சார்ந்துவரும் பண்புகளாக அச்சமும் நாணமும் மடமும் அவர்களிடத்தில் விளங்கிநிற்கின்றன.

            அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
                நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப   

அச்சம் என்பது பழிபாவத்துக்கு அஞ்சிநடக்கும் அகத்தூய்மை. மடம் என்பது அறிவறிய வேண்டியவற்றை நன்றாக அறிந்திருந்தும்கூட, அதனை முந்துரித்து அல்லது முந்துறுத்திக் காட்டிக்கொள்ளாத அடக்கமுடைமை – யாவையும் கற்றறிந்தும் அறியாதவர்போல் இருத்தல். நாணம் என்பது தன் உள்ளங்கவர்ந்த தலைவனிடத்தில் இரண்டற உயிர்பொருந்திக் கொள்ளும் அகவின்பத்திலே உடன் தோன்றுகின்ற கூச்சவுணர்வு. இம் மூன்று பண்புகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பவை. இவற்றையே குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படையான தலைமகள் இலக்கணம் என ஓதியருளுகின்றார் தொல்காப்பியனார்.

           உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
                செயிர்தீர்க் காட்சிக் கற்புச் சிறந்தன்று ...


தலைமக்கள்
தாங்கி வளர்த்த தமிழ்ப்பண்பாடு

      உயர்ந்த தன்மைகளால் தம்மை அறம்பிறழாத நிலையில் நிலைசெய்துகொண்ட வண்ணமாக வாழ்ந்து; தலைமைப்பாடு பெற்றவர்களையே உயர்ந்தோர் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

      உயர்ந்தோர் என்னும் உயர்ந்த பண்பார்ந்த வாழ்க்கையினை உடையவர்களிடத்திலிருந்துதான் – அவர்களின் தூய வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்துதான்  வாழ்க்கை நெறிகள் யாவும் கற்றுப் பெறப்பட்டு வாழ்வியல் மரபுகளாக ஆக்கப்பெற்றுள்ளன.

வழிவழியாகத் துறைதோறும் உயர்ந்த பண்பாளர்களால் தலைமை தாங்கப்பட்டு வழிநடத்தப்பெற்ற தமிழ மாந்தர்தம் வாழ்க்கை, புகழ் பூத்துப் பொலிந்துநின்றது என்றால் அதில் வியப்பொன்றும் இல்லை.

தமிழ்மரபு ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையினை நோக்கியே அனைவரையும் ஆற்றுப்படுத்துகின்றது. ஒரோவிடத்து, உயர்ந்தோர்கூட வழுவும் நிலைமைகள் வாழ்க்கை ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. அன்றாட வாழ்க்கையின் இந்த இயல்பு நிலையினையும் (எதார்த்தத்தையும்) பண்புகெடாமல் அவர்களை மீட்டெடுத்து நல்ல வாழ்க்கையில் சேர்க்கின்ற பாங்கில்தான் இலக்கிய ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.

பொருந்தாக் காம ஒழுக்கம் ஆகிய பரத்தையர் ஒழுக்கம், பெருந்திணை, கைக்கிளை என்ற பாங்கில் கடியப்பட்டுள்ளது. இருவழியும் பருவத்தாலும் உருவத்தாலும் திருவத்தாலும் ஒத்து நிகழ்கின்ற அன்புடைக் காம ஒழுக்கமே ஏற்கப் பெற்றுள்ளது.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்னும் தொடர் காமம் என்ற சொல்லின் அகப்பொருளை நன்கு புலப்படுத்த வல்லதாக இருக்கின்றது. காமத்திற் சிறந்தது காதற் காமம் என்று விளக்கமளிக்கின்றது பரிபாடல். காமுறுதல் என்பது வஞ்சகம் இல்லாத தூய விருப்புணர்வால் ஒருவரை ஒருவர் இன்றி அமையப்பெறாத உள்ளார்ந்த ஆழ்ந்த விருப்பம் கொள்ளுதலைக் குறிக்கின்றது.

காதல் நிலையில்
தலைவியின் இயல்புநிலை

     
காம ஒழுக்கம் ஆகிய விடுவதற்கு இயலாத ஆழ்ந்த அன்புநாட்டம் என்பது தலைவியினிடத்துத் தோன்றி நிகழ்ந்திடும் நிலையில்கூட, அவள் நாணம், மடம் என்னும் பெண்மை இயல்புகளிலிருந்து விலகியிருக்க மாட்டாள். மாறாக, தன் அன்புநாட்டத்தை அவள் குறிப்பினாலும், இடமறிந்து புரிந்துகொள்ளத்தக்க நிலையிலுமாகத்தான் வெளிப்படுத்துவாளே அன்றி, அப்படியே வெளிப்படையாகப் புலப்படுத்த மாட்டாள்.

            காமத் திணையில் கண்நின்று வரூஉம்
                நாணும் மடனும் பெண்மைய! ஆகலின்,
                குறிப்பினும் இடத்தினும் அல்லது, வேட்கை
                நெறிப்பட வாரா அவள்வயின் ஆன.

      தலைவியின் இடத்தில் காமத்தைக் குறிப்பாக வெளிப்படுத்திக் காட்டுபவற்றுள், அவளது கண்களே தலைசிறந்தவை.

            காமம் சொல்லா நாட்டம் இன்மையின்,
                ஏமுற இரண்டும் உளவென மொழிப

      ஆண், பெண் எனும் இருபால் சார்ந்த மக்களுள் அவர்களின் உள்ளத்துக்குள் உள்ள ஆழ்ந்த விருப்பினை உணர்த்தாத கண் உலகத்தில் இல்லை. தலைவிக்கு அறம்பிறழ்ந்து போகாத வகையிலே, அக் கண்ணிரண்டும் நாணும் மடனும் ஆகிய இரண்டு இயல்புகளுடன் கூடியனவாக அவளுக்குப் பழி உண்டாகா வண்ணமாகப் பாதுகாவலாக இருக்கின்றன.

களவு வாழ்க்கையில் வரம்பு மீறாத எல்லைக் காவல்பொருள்களாக – காவல் உணர்வுகளாக அவை திகழ்கின்றன. எத்துணை அரிய இயற்கை அமைப்பு! அன்பும் உண்டு; அது நிகழ்வதற்கு உரிய நிலையிலே காவலாகப் பண்பும் உண்டு! அன்பு பண்போடு இழைந்து நிகழ்ந்கின்றது. இதுதான் உயிர்வாழ்க்கையின் இயற்கை நுட்பம்.

      நாண மிகுதியினால், தலைவி தலைவனுக்கு மறுமொழியாக அதிகம் பேச மாட்டாள். அப்படியே பேசினாலுங் கூட, அஃது அரிதாக இருக்கும். அதுவும் வெளிப்படையாக இல்லாமல், உள்மறைவான தன்மையிலே இருக்கும். குறிப்பாக உணர்த்தும் தன்மை அவள் பேச்சிலும் செயலிலும் இழைந்தோடி வரும்.

தலைவன் தன் விருப்ப மிகுதியால் காதல்மொழி பொழியும்போது கூட, அவள் அதனை அறிந்தும் அறியாதவள் போல, வேறு எதையோ கூறி, அவன் சொல்லுக்குள் அமிழ்ந்துவிடாமல் நாணத்திலும் காமத்திலும் நிலைகொள்ள முடியாமல் தவிதவித்து ஒருவாறு தன்னை அடக்கிக்கொள்வாள். ஆனால், உண்மையில் அவள் அவனது அன்பு மொழியில் நனைந்துபோவாள்.

அந்த நனைதலிலும் பண்பு வழுவுதலுக்கு இடமளிக்க மாட்டாள். அதற்கு அவளிடத்துள்ள நாணம் காரணமாகவும் காவலாகவும் இருக்கின்றது. அஃது அவளுக்கு மட்டுமன்று, அவள் அன்புகொண்டு உயிருக்கு உயிராக மதிக்கின்ற அந்தத் தலைவனுக்கும் அறம்பிறழாது இருப்பதற்கு அரணாக நிற்கிறது.

            சொல்எதிர் மொழிதல் அருமைத்து! ஆகலின்,
                அல்ல கூற்றுமொழி அவள்வயின் ஆன

No comments:

Post a Comment