Thursday, July 18, 2013



ஓங்கார விரிபு                                                                                ஓங்கார ஒடுக்கம்

      ஒலியிலிருந்து உருவம் வருகிறது என்பது தமிழ அறிவியல் உண்மை. ஒலிநிலையிலிருந்து உருநிலை ஆக்கமுறுகிறது என்பது செய்தி. இதனைத் திருமந்திரம் மிகத் தெளிவாக “ ஓமெனும் ஓங்காரத்துள்ளே உரு-அரு” என்று உரைக்கின்றது. ஓங்காரத்திலிருந்தே ஐம்பூதங்கள் தோன்றியுள்ளன; ஓங்காரத்திலிருந்தே நிலைத்திணை, இயங்குதிணைப் பொருள்கள் அனைத்தும் தோன்றியுள்ளன. ஒலியிலிருந்தே ஒளி வருகிறது என்பது அறிவியல். இவற்றை முறையே நாதம், விந்து என்பது தமிழ்மெய்யியல் முறை. இவற்றின் ஒருங்கியைந்த முதலுக்கு ஓம் – ஓங்காரம் என்று பெயர்.
ஓமெனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி                                                                       ஓமெனும் ஓங்காரத் துள்ளே உருஅரு                                                                    ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்                                                                ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே 
                         – திருமந்திரம் 2627

 ஓங்காரத் துள்ளே உதித்த-ஐம் பூதங்கள்   
  ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்                                                              
  ஓங்காரா தீதத்து உயிர்மூன்றும் உற்றன                                                                       
  ஓங்கார சீவ பரசிவ ரூபமே                                                                திருமந்திரம் 2628                                                                                                  1. உதித்த = உதித்தன, தோன்றின; 2. ஓங்காராதீதம் = மாகாரண ஓங்காரம், அப்பால் ஓங்காரம்; 3. உயிர்மூன்று = மூவகை உயிர், மும்மலத்தால் மூவகையாயுள்ள உயிர்கள்.
இனி, ஓங்காரம் என்பது எல்லா ஒலிகளையும் தனக்குள் அடக்கியிருக்கிறது. அதே வேளையில், எல்லா ஒலிகளுக்கும் அப்பாலேயும் அஃது எஞ்சியிருக்கிறது. ஆகவே, எல்லாம் தோன்றுவதற்கு முன்னும் ஓங்காரம் இருக்கவேண்டும். எல்லாம் அழிந்த பின்னும் அஃது இருக்கவேண்டும். எல்லாவற்றையும் தன்னுள் அடங்கச்செய்கிறது என்றால், அஃது ஆதியிலேயும் இருக்கவேண்டும். அந்தத்திலேயும் இருக்கவேண்டும். எல்லாவற்றின் ஊடேயும் இருக்கவேண்டும்; எல்லாவற்றின் வெளியேயும் இருக்க வேண்டும்.
எங்கேயும் இருப்பது வியைபு நிலை (வட. வியாபகம்); எல்லாவற்றுள்ளும் கலந்திருப்பது இயைபு நிலை (வட. வியாப்பதம்). தனக்கு ஒரு முதல் இல்லாது, அனைத்துக்கும் தான் முதலாக இருந்துகொண்டு; தானொரு தானாய் நிற்கும் பொருள் எதுவோ, அஃது இறை என்பது தமிழ் மெய்யியல் விளக்கம். [ அதன் எப்பொருட்கும் உள்ளார்ந்த ஒலியின் கேட்டல் ‘அகத்தியம்’ (அகத்து + இயம் (ஓசை)) எனத் தமிழிலும், ‘உத்கீதை’ என சமற்கிருதத்திலும் கூறப்படும்.]
மானாகி மோகினியாய் விந்து வாகி                                     மற்றைவையால் காணாத வான மாகி                                                                                                                             நானாகி நானல்ல னாகி நானே                                       நானாகும் பதமாகி நான்தான் கண்ட 
                                                                                                    தானாகித் தானல்ல னாகித் தானே                                தானாகும் பதமாகிச் சகச ஞான 
                                                                                     வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற                                     மவுனநிலை யாகிஎங்கும் வளருந் தேவே                                                                       - மகாதேவ மாலை 19.
அடுத்து, இதன் தொடர்நிலைக் கட்டங்கள் அல்லது செயற் படிநிலைகளை முறையே, இறைக் கூறு, உயிர்க் கூறு, சடக் கூறு எனும் மூவகைக் கூறுபாட்டில் வைத்துச் சிந்திப்பது முப்பொருள் கொள்கை.
இறைக் கூறு, உயிர்க் கூறு என இரண்டாய்ச் சிந்திப்பது இருபொருள் கொள்கை. இறைக் கூறு ஒன்று மட்டுமே உள்ளதென ஒன்றாய்ச் சிந்திப்பது ஒருபொருள் கொள்கை. இவையே முறையே விசிட்டாத்துவைதம், துவைதம், அத்துவைதம் என்று பின்னைய வடநூல்களில் விளக்கப்படுகின்றன.
இனி, அந்த ஒட்டுமொத்தப் புடைப்பிலிருந்து, புறத்தில் வருவதுபற்றித் தனித்தனிப் புடைப்பெயர்வு புறப்பு அதாவது பிறப்பு எனப்படுகிறது. அப் புறப்பு என்பது அறிவுநிலை சார்ந்த படிநிலைகளை உடையதாக இருக்கிறது. அந்த அறிவியக்கம் என்பதும் ஐந்து நிலையில் உள்ளது.
நனவு (நனா), கனவு (கனா), உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்று ஐந்து வகையான பாடுகளை (அவத்தை) உடையதாக இருப்பதுபற்றி அஃது ஐம்பாடு எனப்படுகிறது. இதனால் அறியப்படுவது யாது? ‘தான்’ என்றொரு நினைவுடைய பொருள் இருக்கிறது; அதற்கு உணர்வு என்ற ஒன்றும் அவ்வறிவுடன் இயைந்திருக்கிறது என்பது மெய்யியல்.
அப்படி ஒன்றும் கிடையாது (ஆன்மா அல்லது உயிர் என ஒன்று இல்லை) என்பது பொருளாயதக் கொள்கை. இந்தப் பொருளாயதக் கொள்கைதான் பண்டைக் காலத்தில் உலகாயதம், சார்வாகம் என்று கூறப்பட்டுள்ளது. அது கடவுள் மறுப்புக் கொள்கையாக இருப்பதற்குக் காலப்போக்கில் கடவுள் இருப்புக் கொள்கை கூறியவர்களின் உலகியற் பொல்லாங்குப் போக்குகளும் காரணமாக இருந்தன என்பதும் எண்ணத்தக்கது. இஃது இம்மட்டில் நிற்க. [ குறிப்பு: இறை எனப்படுவது எவருடைய அறிவின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உட்பட்டதன்று.]
அடுத்து, சடப்பொருள் ஆகிய அறிவில்லாத பொருள்களின் இயக்க நிலையில், ஒன்றிற்கு ஒன்று சார்புத் தன்மை உண்டெனக் கண்டதுபோல, அறிவுப் பொருள்களின் இயக்க நிலையிலும் ஒன்றிற்கு ஒன்று சார்புத் தன்மை (அன்புத் தன்மை) காணப்படுகின்றது. அந்த அன்பிடை அன்பாய், அமர்ந்த தன்மையாய் (ஆசையினால் அன்றி; மாசற்ற அன்பினால் விரும்பும் தகையதுவாய்) அமைந்திருப்பது – விரும்பிப் பேணும் தன்மையாய் இருப்பது பற்றி அவற்றின் முதல்மூலம் ‘அன்பே சிவம்’ என்று பொதுமையிற் கொண்டுணரப் பட்டது – படுகிறது - படும்.
இவ் வுண்மையினை,
உறவினில் உறவும் உறவினில் பகையும்                                         அறன்உற வகுத்த அருட்பெருஞ் சோதி 
பகையினில் பகையும் பகையினில் உறவும்                                     அகைவுற வகுத்த அருட்பெருஞ் சோதி                                                       - திருவருட்பா : அகவல் வரி 651-654
என்று வள்ளற்பெருமானார் குறிப்பிடுகின்றார்.
தொடர்ந்து, ஒன்றை ஒன்று ஈர்த்தலும் விலக்கலும் பொருளியக்கமாகும். ஈர்த்தலில் பொருதலும் பொருந்தலும் அமையும். விலக்கலில் தனித்தலும் பல்கிப் பெருகலும் அமையும். இந்த இயங்கியல் முரண்மை (முரண் தன்மை) எப் பொருளிடத்தும் எவ்விடத்தும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆண்மைபெண்மை, வெம்மைதண்மை, புடைப்புஒடுக்கம், ஆக்கம்கேடு, ஒன்றல்பிரிதல், கூடல்ஊடல், இறுகுதல்நெகிழுதல், விரிதல்சுருங்கல், எழுதல்விழுதல், கட்டுதல்குலைதல், இருளுதல்ஒளிர்தல், கலங்கல்தெளிதல், ஏற்றல்விலக்கல், இயல்புதிரிபு, அகம்புபுறம்பு, வன்மைமென்மை, பருமைநுண்மை, ... எனப் பலபலவாக அடுக்கிக்கூறலாம்.
இந்த முரண்மை ஒரே பொருளிலும் உள்ளது, இருவேறுபட்ட பொருள்களிடத்திலும் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆண்பிறப்பில் ஆண்மைக்கூறு மட்டுமன்று, பெண்மைக்கூறும் இயைந்திருக்கிறது. அதேபோல, பெண்பிறப்பில் பெண்மைக்கூறு மட்டுமன்று, ஆண்மைக்கூறும் இயைந்திருக்கிறது. ஆண்மை நிலைக்குப் பெண்மைநிலை நேர்முரண்தான், ஆனால், முற்றிலும் முரணாக இல்லை. அதுபோலத்தான் பெண்மை நிலைக்கு ஆண்மைநிலையும் என்று உணர்ந்துகொள்க. இந்த முரண்நிலையில் இருக்கும் இவற்றினிடையே ஈர்ப்பும் உள்ளது, விலக்கலும் உள்ளது அல்லவா?
இதன் தொடர்பில் இருமைநிலை மட்டுமன்று, மும்மைநிலையும் கூறப்படும். அதாவது, பொருளின் இயக்கநிலை, இருப்புநிலை என இரண்டு நிலையிலும் இவ்வாறு கூறப்படும். எடுத்துக்காட்டாக, நேர்-நடு-மாறு, ஆண்-அலி-பெண், உறவு-நொதுமல்-பகை, சத்து-சதசத்து-அசத்து, தனி-இணை-பல, தோன்றல்-இருத்தல்-மறைதல், தோன்றல்-திரிதல்-கெடுதல், அடி-நடு-முடி (தலை-இடை-கடை). பொதுவாக இவற்றை, இரண்டாய் அடக்கி இருமைவகை எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். இருமைவகை தெரிதல் என ஒன்றையும், அதற்கடுத்து அதன் பயனாக இருமைவகை தெரிந்து ஈண்டுஆறம் பூண்டார் ஆதல் பற்றியும் சுருக்கமாக விளக்கியுள்ளார்.
இப் புடவி, இக்கால் புடைக்கும் தசையில் இயங்குகிறது என்று மேலைநாட்டு அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதனை “ The Ever Expanding Universe” என்று குறிப்பிடுகின்றனர். மூன்று நிலைசார்ந்த மாயையுள் இவர்கள் கண்டுரைப்பது மூன்றாவதான ‘மான்’ என்னும் மூலப்பகுதி (மூலப்பிரகிருதி) மாயையாகும்.
தொடர்ந்து, பிறப்புக்கு வினைதான் காரணம் என்பது பாதி கருத்து. பிறப்புக்கு ஆசைதான் காரணம் என்பதே முழுக்கருத்து. “அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து” என்பது திருவள்ளுவம். இந்த ‘அவா’ என்பதன் முதல்நிலை, ‘தான்’ என்னும் நினைவினால் கொள்ளப்படுகின்ற எதிர்பார்ப்புத் தன்மையுள்ள அன்புநிலை. அதன் பண்பட்ட பெருநிலை என்பது ‘தான் – தனது’ என்னும் தன்மையிலிருந்து நீங்கி, ஒத்து - ஒருதன்மை அதாவது எல்லாவற்றையும் சமத்திற்கொண்ட தன்மையுள்ள அருள்நிலை.
இவற்றில், உயிரின் நிலை அன்பு என்னும் முதல்வகை, இறையின் நிலை அருள் என்னும் இரண்டாம் வகை. உயிர்களிடத்துக் காணும் அவா அதாவது இச்சை ஆசைவழிப்பட்டது. ஆசை (ஆசு + ஐ) என்பது பற்று. ஆசு என்பதற்குப் பற்று, பற்றுக்கோடு என்று பொருள். பற்றி இயங்கும் பண்புடையது உயிர் -உயிர்கள். அதனால், அங்கே ‘விருப்புவெறுப்பு எல்லைகள் - வரம்புகள்’ உண்டு. 
இறையினிடத்துக் காணும் அருள் என்பது கருணை வடிவானது. அங்குள்ள இச்சை என்பது கருணை; ஆசை அன்று. உயிரின் நிலை எல்லைப்பட்டு நிற்கிறது. இறையின் நிலை வேண்டுதல் வேண்டாமை இல்லாதது. அதனால் அஃது யாங்கும் தடைபட்டு இல்லை, கட்டுப்பட்டு இல்லை, எல்லைப்பட்டதாக இல்லை. வியன்மை உடையதாக உள்ளது இறை. யாதானும் ஒன்றன் அல்லது ஒருசிலவற்றின் வயன்மைக்கு (வயப்பட்டுநிற்கும் தன்மைக்கு) உட்பட்டவை உயிர்கள்.
கட்டுண்ட நிலையுள்ள உயிர்நிலை அறிவெல்லாம் கண்டநிலை எனப்படும் எல்லைபடுத்திக் கொண்டுள்ள தன்மையில் உள்ளவை, அதாவது அறிவும் உணர்வும் சிற்றியல்பினதாகப் பலவாகப் பிளவுபட்டது - துண்டுபட்டது. கட்டற்றதாய் விளங்கும் இறைநிலை அறிவெல்லாம் அகண்டநிலை (எல்லை படுத்தப்படாத தன்மை), அதாவது சிற்றியல்பினதாகப் பலவாக பிளவுபடாடது -துண்டுபடாதது. இந்த இரண்டு நிலைகளைக் கண்டதால்தான், இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) என்ற முப்பொருள் உண்மை என்ற பொருள் இருப்பியல் அல்லது பொருள் இயங்கியல் கோட்பாடு கூறப்படுகிறது.
அறியும் தன்மையுடைய பொருள்களிடத்து விருப்பு – செயல் – அறிவு (வட. இச்சை – கிரியை - ஞானம்) என மூவகையான ஆற்றல்கள் உள்ளன. அவற்றுள் விருப்பாற்றல் என்னும் ஒன்று அதன்பாற்பட்டது. அவற்றை விரித்துச் சொன்னால் விருப்பாற்றல், செயலாற்றல், அறிவாற்றல் என வரும். உயிர், இறை எனும் அறிவுப் பொருள்களே இவ்வாற்றல்களைக் கொண்டுள்ள.
இறையினிடத்து இவை எல்லையற்ற நிலையில் இயல்பாக முற்றுரிமையாக இருக்கின்றன. உயிர்களிடத்திலோ இவை ‘தான்’ என்றதோர் எல்லைப்பட்ட நிலையில் - சிறைபட்ட நிலையில் – சிறுக்கமுள்ள நிலையில் இருக்கின்றன. இப்படியாக உள்ள உயிரையும் உயிரின் அறிவுணர்வு நிலையினையும் பொருள்முதல் கொள்கை கருதவில்லை; கருத்துமுதல் கொள்கை கருதுகின்றது.
இம் மூன்றில் முதலாவதாக உள்ள விருப்பாற்றல்தான், அவாவுகின்ற அவா நிலையில் உயிரினை இயைத்துவைத்திருக்கிறது. அந்த அவாவிய தன்மையினால் அவ்வுயிரானது, தான் அவாவுற்றதனிடத்துப் பொருந்தித் துய்ப்பதற்கு - நுகர்வதற்குச் செயல்கொள்கிறது. அவாவுற்றுப் பொருந்தி நூகர்ந்ததில் உண்டான பயனிலையில் இன்பம்துன்பம் என்றும், நன்றுதீது என்றும், பெருமைசிறுமை என்றும், ஆக்கம்கேடு என்றும், ஊக்கம்உளைச்சல் என்றும், உறவுபகை என்றும், ... பலபலவும் பற்றிக்கொள்கின்றதன் வாயிலாக உயிர்களுக்குப் பலதிறப்பட்ட பட்டறிவு உண்டாகிறது.
உண்டான பட்டறிவிலிருந்து அடுத்தடுத்த நிலைசார்ந்திடும் தன்மைக்கு ஏற்ப ஒவ்வோர் உயிருக்கும் அறிவுவிளக்கம் உண்டாகிறது; அறிவுப்பதிவு ஏற்படுகின்றது.
அந்த அறிவு விளக்கமுறுகின்ற நிலையில், அறிதோறும் அறியாமை கண்டுகொள்ளப்பட்டு வந்ததன் பயனாகவே, அறிவிலே திட்பம், ஒட்பம், நுட்பம், ... எனப் பல்வகைப் பண்புநலங்கள் புலர்ந்து பதிவுறுகின்றன. இதனைக் குறித்த இயங்கியல் விளக்கமாகத்தான் தமிழர்தம் படைப்பியல் கொள்கை அமைந்திருக்கிறது.
இதனைச் சுருக்கமாக விளக்குகின்ற அருட்குறியீடுதான், ‘சின்முத்திரை’ என்னும் ‘அறிவு முத்திரை’ ஆகிய கைமுத்திரை. உயிருக்கு இரண்டு சார்பு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாயைச் சார்பு, மற்றது இறைச்சார்பு. அவற்றைத் தெரிவுசெய்துகொள்ளும் உரிமையும் வாய்ப்பும் உயிருக்கு உள்ளது.
இதனையே, திருவள்ளுவர்,
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், மற்றழித்துச்                                 சார்தரா சார்தரு நோய்  - தமிழ்மறை: அதி. 36:  
                                                 
என்று குறிப்பிடுகின்றார். சார்புத் தன்மையினால்தான், அதாவது அதன்கண் பொருந்தியுள்ள விருப்புவெறுப்புத் தன்மையினையுடைய அவாவின் காரணமாகத்தான் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் உயிரினிடத்து உண்டாகின்றன. அதனையும் திருவள்ளுவர்,
        காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
        நாமங் கெடக்கெடும் நோய்        - தமிழ்மறை: அதி. 36: குறள் 360
என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
இவை யாரிடத்தில் இல்லை? இவை எல்லாரிடத்திலும், எல்லா வகையான உயிர்களிடத்தும் இருக்கின்றன அல்லவா? இம் மூன்றால் உயிர்களிடையே ஒன்றுக்கு ஒன்று இனிய செய்தல், இன்னா செய்தல்,... முதலான இருமைத்திறம் கொண்ட அகக் குற்றங்கள் உண்டாகின்றன தானே? இதனையே உயிருக்கு உற்றுள்ள நோய் என்று மேற்கண்ட இரண்டு குறட்பாக்களிலும் வெளிப்படையாக உணர்த்துகின்றார் இல்லையா? அது என்ன நோய்? சார்தரு நோய்’ அதாவது விருப்புவெறுப்புத் தன்மையினையுடைய அவற்றை உண்டாக்குகின்ற அவா – இச்சை – ஆசை - வேட்கை.
அஃது ஏதாவது ஒன்றனிடத்து அல்லது அதற்கு மேற்படப் பலவற்றினிடத்துச் சார்ந்துகொள்ளும் சார்புத் தன்மையினைத் தருகின்ற நோய்.
அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை                                         அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை                                                அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு                                               அறைகின் றனமறை யீறுகள் தாமே                                     –திருமந்திரம்                                                                               
இந்தக் கருத்தினை ஆராய வல்லார்க்குத், தம் ஆயுள் காலத்தில் ஒருவாறு தெளிவு பிறக்கும். ஆனால், முற்றுமாக அதனை அறிந்து முடிப்பது என்பது வாய்க்காது – வாய்த்ததாக எவரும் இதுவரையும் கூறியது இல்லை. அதனையே கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்னும் செந்தொடர்மொழி அதனை முடித்துக்கூறாமல் குறிப்பினுள் குறிப்பாகக் கூறுகின்றது.
அப்படி என்ன அறிவு அது? அறியும் பொருளும் அறியப்படும் அறிவும் என்ன நிலையில் உள்ளன? ஏன் அப்படி இருக்கின்றன?... என்றெல்லாம் அறிவுக்குள் அறிவுதேடிச் சென்றிருப்பவர்களின் கருத்துத் திட்பங்களே திரண்டுவந்து கொள்கை, கோட்பாடு, மெய்யியல் என்றோர் உருவில், உலகத்தில் மக்களிடையே ஆளுமைபெற்று நிற்கின்றன. அவற்றையும் கடந்து செல்லும் வல்லமையுள்ளவர்கள் அவற்றை அறிவார்ந்த நிலையில் திறங்கூறலாம்.
தமிழ்கூறு நல்லுலகில் மிக அண்மைக் காலத்து அறிவராக நாம் அறிய வாய்த்திருப்பவர் திருவருட்பேரொளி வள்ளற்பெருமானாரேயாவார். அவர் அருளிச் செய்துள்ள திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் விளங்குகின்ற மகாதேவ மாலை என்னும் அருட்பேழையிலிருந்து ஓரிரு ஒண்மணிச் சரங்களை உங்கள் முன் காட்டுகின்றேன் காணவல்லாங்குக் காண்க.
முழுமையைத் தன்னைவிட்டு வேறாகக் கொண்டு ஆய்வதும், ஒட்டுமொத்த முழுமையில் தானுமொரு கூறாக நினைந்துணர்ந்து ஆய்வதும் வெவ்வேறான அணுகுமுறைகளாகும்.
அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்று பொருள்களின் இருப்புநிலை காணப்படுகின்றது. இந்த நான்கு நிலைகளும் ஒன்றோடு ஒன்று பொருந்தியே உள்ளன, தனித்தனியாக இல்லை. இந்நான்கையும் ஒருசேர அறிகின்றவர்களுக்குத்தான் உண்மை தெரியும். ஏனையோர்க்குப் புரிவதற்கு வாய்ப்பில்லை. இதனையே அறிவறிதல் என்பர்.
அறிவறிதலின் வழி மெய்யறிதல் - மெய்யுணர்தல் என்பவை வாய்க்கும். அதனைத் திருவள்ளுவர் இரண்டு நிலையில் அல்லது கட்டங்களில் வைத்துக் குறிப்பிடுகின்றார். ஒன்று பிறரைச் சார்ந்து அறிதல், மற்றொன்று தானே தனக்குத் தன் உள்ளத்தால் பொய்யாது ஒழுகிச் சான்றாகி அறிதல். இவற்றை,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்                   மெய்ப்பொருள் காண்பது அறிவு     - தமிழ்மறை:அதி. 43 :குறள் 433
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்                             மெய்ப்பொருள் காண்பது அறிவு     - தமிழ்மறை: அதி.36: குறள் 355
என்று தெளிவாகக் குறிப்பிட்டு வழிகாட்டியுள்ளார். அதன் இன்றியமையாத மாட்சியினை வலியுறுத்திக் காட்டுமுகத்தான்
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே                                 மெய்யுணர்வு இல்லா தவர்க்கு       - தமிழ்மறை: அதி.36 :குறள் 354
என்று ஒளிவுமறைவு இல்லாமல் எல்லார்க்கும் பொதுப்பட அருளிச்செய்துள்ளார்.
இனி, அறிவறிதலில் ‘தான்’ என்பதற்கு, நிலைக்களமாக நின்று உதவுகின்ற உடம்பும் உள்ளமும்தாம் கருவிகளாக உள்ளன. கருவியைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால்தான் அதனைச் சரியாகப் பயன்படுத்த முடியும்.
எனவே, முதலில் இந்தக் கருவிகளை வகைதொகையாக ஆய்ந்து கண்டவர்கள் அவற்றை இருபத்துநான்கு (24) உடல்மெய் அல்லது ஆன்ம மெய்கள் (ஆன்ம தத்துவங்கள்) எனவும், ஏழு (7) உணர்தற்கு உறுதுணை மெய்கள் அல்லது அறிவு மெய்கள்(வித்தியா தத்துவங்கள்) எனவும், ஐந்து (5) உணர்த்து மெய்கள் அல்லது சிவமெய்கள்(சிவதத்துவங்கள்) என்று முப்பத்தாறாக விளக்கியுள்ளனர்.   
அந்தரம்இங்கு அறிவோம்மற்று அதனில் அண்டம்                                                        அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே                  
உந்துறும்பல் பிண்டநிலை அறிவோம் சீவன்                                                                உற்றநிலை அறிவோம்மற்று அனைத்து நாட்டும்                           
எந்தைநினது அருள்விளையாட் டந்தோ அந்தோ                                                         எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று                                   
முந்தனந்த மறைகளெலாம் வழித்த நின்ற                                                                   முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே                                                              – மகாதேவ மாலை 62

தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச்                                                    சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம்                  
ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால்                                                அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்                               
ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்                                                இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று                         
சான்றஉப நிடங்களெல்லாம் வழுத்த நின்ற                                                      தன்மயமே சின்மயமே சகசத் தேவே
                            – மகாதேவ மாலை 63
 பரிக்கிரக நிலைமுழுதும் தொடர்ந்தோம் மேலைப்                                              பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்      
எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல                                                   எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்                     
தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்                                               சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்                       
தரிக்கரிதென்று ஆகமங்க ளெல்லாம் போற்றத்                                                  தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே
                           – மகாதேவ மாலை 64

மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல                                                      வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்                        
இணக்கமுறக் கலந்துகலந்து அதீதம் ஆதற்கு                                 இயற்கைநிலை யாதுஅதுதான் எம்மாற் கூறும்                       
கணக்குவழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ                          காண்பரிதுஇங்கு எவர்க்கும்எனக் கலைகள் எல்லாம்              
பிணக்கறநின்று ஓலமிடத் தனித்து நின்ற                                                             பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே                                             – மகாதேவ மாலை 65
பொருள்முதல் கொள்கையினை விதந்தெடுத்துரைத்துவரும் அறிவியல், மூவகை மாயையுள் மூன்றாவதான மூலப்பகுதி (மூலப்பிரகிருதி) மாயையளவில் மட்டுமே செல்கிறது அல்லது ஏற்கிறது. அதற்கும் மேற்பட உள்ள தூவா மாயை (அசுத்த மாயை), தூய மாயை (சுத்த மாயை) என்னும் நிலைகளின்கண் அஃது சென்றிலது.
மேற்படி அறிவுக்குள் அறிவாக, அறமாகத் திகழ்ந்திருக்கும் தெரிவரிய செம்பொருளைக் குறித்து அவர்கள் ஒன்றும் கருதுகின்றிலர். அவர்கள் தமிழ் மெய்யியல் பக்கமாக வந்தாலொழிய அதுகுறித்த உண்மையினை கனவிலும் காணமுடியாது. முத்தாய்ப்பாக இந்த அறிவறிதல் குறித்துத் திருமூலர் சொன்னதை மறுப்பார் யாருமில்லை; இருக்க முடியாது. இதோ அவர்தம் செவியறிவுறூஉ:-
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை                                                              தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்                                                           தன்னை அறியும் அறிவை அறிந்தபின்                                                                     தன்னை அருச்சிக்கத் தான்இரு தானே                                                                     – திருமந்திரம் 2315

No comments:

Post a Comment