Saturday, July 13, 2013



எத்துணைப் பழைமைக்கும்
நீள்கின்ற இனமரபு – மொழிமரபு
நம் தமிழ்மரபு

      எனவே, இப்படி எத்துணைப் பழையதொரு காலத்தை எடுத்துக்கொண்டாலும், அத்துணைப் பழைமைக்கும் உடன்நிற்கின்ற – அங்கிருந்து இன்னும் இன்னும் நீள்கீன்ற நெட்டநெடிய வரலாற்றினைப் படைத்துள்ள இனமரபு – மொழிமரபு தமிழ்மரபே என்பது எத்திறத்தானும் நிறுவப்பெற்றதாகிவிட்டது.

      இதுதான் – இந்தப் பண்புதான் அவரை, ஓர் எல்லையறு பரம்பொருளின் அனாதித் தொன்மைக்கு அல்லது இயற்கைத் தொன்மையுடைய இறைவனின் படைத்து – காத்து – அழிக்கும் படைப்பினப் புடைப்பியக்கப் பெருமைக்கு நிகராக வைத்துத் தமிழுக்கு உவமை கூறச் செய்தது.

எந்தநிலை சார்ந்த மாறுதல்களும் வேறுதல்களும் நடந்தவண்ணமாக இருந்தாலும், இறைவனின் இயல்பினிலே எந்தவொரு மாறுதலும் வேறுதலும் இல்லாமல், அவன் முன் இருந்த நிலையிலேயே தொடர்ந்து இருந்துவருவதைப் போலத் தமிழும் தான் முன் இருந்த அதே மூலநிலையில் தொடர்ந்து நீடித்து வருகின்றது என்ற ஒரு வரலாற்றுத் திறவினை – திருப்பத்தினைச் மெய்த்தமிழ் மீட்பறிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் நம் கண்முன்னே தமது ஆராய்ச்சி வல்லைமையினால் சான்றுதந்து கண்ணுக்குக் கண்ணாகக் காட்டுகின்றார்.

இந்த உண்மையினை ஏற்க மனமில்லாமல், அதனை அப்படியே திரித்து மறைத்துக்கொண்டு; தமிழுக்கும் தமிழ்மரபியத்துக்கும் மாறான திரிப்புரைகள் – திருப்புரைகள் கூறி வருவதோடு, எல்லாவற்றுக்கும் சமற்கிருத மொழிமரபே மூலம் என்று வலிந்து வலிந்து கூறுகின்ற போக்கு மூன்றாம் தமிழ்க்கழகம் அழிந்து போயிருந்த இடைக்காலம் முதல் பெருகலாயிற்று. மாட்சி – வீழ்ச்சி – மீட்சி என்று நிகழ்ந்துகொண்டுள்ள நிலவரம் எதுவுமே தெரியாதவர்களாகத்தான் பெரும்பான்மைத் தமிழமாந்தர் இருந்துவருகின்றனர். இது நெஞ்சத்தை அறுப்பதாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் சமற்கிருதச் சார்பு கூறுதல்
ஒரு போலிப் பெருமையுணர்வு

எல்லாவற்றுக்கும் சமற்கிருதச் சார்பு கூறிக் கொள்ளவும் – செயற்கையாக கற்பித்துக் காட்டிக் கொள்ளவுமான ஒரு போலிப் பெருமையுணர்வு மூன்றாம் தமிழ்க் கழகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் வந்துள்ளது.

மூவேந்தர் பெருமக்களும் வீழ்ச்சியுற்ற நிலையில், முத்தமிழ்க் கலையறிவு மரபியத்தை வளர்த்து வந்த முக்கழகம் எனும் முச்சங்கத் தமிழ்ச்சான்றோர் வழிநடத்திவந்த தொல்லாணை மரபாட்சித் தலைமைத் தமிழ்நிறுவனமும் மெல்லமெல்ல உள்ளொடுக்கமுற்றது.

தமிழ்மண்ணிலே தமிழர் தமது அரசியல் தலைமையும் ஆளுமையும் தளர்ந்து இழந்துநின்ற இந்தக் காலக் கட்டத்தில்தான், தமிழரிலிருந்து பல்வேறு காலங்களில் முன்பு பிரிந்துபோனவர்களின் வழிவந்த திரிபினத்தவர்களின் ஆட்சிக்குள் தமிழும் தமிழரும் சிக்கி நிலைத்திரிபு அடையலாயினர்.

சுருங்கச் சொல்வதானால், மூன்னைத் தமிழ் மரபியத்தைப் பின்னைத் தமிழ்த்திரிபியம் சிதைக்கத் தலைப்பட்டுவிட்டது. இது வடுக நிலை, ஆரிய நிலை என இரண்டு நிலையுடையது.

ஆரிய நிலைக்கு அடங்கிநின்று; வடுக நிலையினரே மூலத் தமிழ மரபியத்தை உருச்சிதைத்து வீழ்த்துவதில் பெரிதும் தலைப்பட்டு நின்றவர்களாவர். ஆரியர் செய்தெல்லாம் ஒரு சின்னத் தொடக்கம்தான், வடுகர்களே அதன் ஓயாத தொடர்ச்சியான பெருந்தாக்க மூலவர்கள். கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியர், இராட்டிரகூடர், பல்லவர், நாயக்கர், கேரளர் என்று அதன் உள்ளுறுப்பியப் பட்டியல் காலநிரல்படி உருப்பெற்றுவந்து நீள்கிறது.

இவர்கள் அனைவரும் ஆதியில் தமிழர்களாக இருந்து தமிழ்மை இழந்து மாறிப் போனவர்களே. வடபுலத்தவர் தொல்லையைவிட இந்த நடுப்புலத்தவர்தம் தொல்லைகளே தமிழையும் தமிழ மரபியத்தையும் அடிமுதலாகக் கொண்டிருந்த தமிழர்களை நிலைகுலையச் செய்து வந்துள்ளன. இனமே இனத்துக்குப் பகையான கதை இதுதான். அதற்குக் இடமுண்டாக்கி வந்தது மூலத்தமிழ்மொழிக் கட்டமைப்புத் திரிபுதான்.

மொழிகெட்டு மொழிகெட்டு இனங்கெட்டு வந்துள்ள உண்மையை வரலாறு படித்துப்படித்து பலமுறை நமக்கு உணர்த்தி வந்திருக்கின்றது. நாம்தான் – நம் இடைக்காலத்து முன்னோர்கள்தான் இதனைக் கருதவே இல்லை. நாவலந்தேயம் முழுவதும் உள்ள அனைத்து மொழிக்கும் மூல முதலான ஒற்றைப் பெருந்தமிழ், ஐம்பத்தாறு தேசமாய், அத் தேசங்களின் மொழிகளுக்குள் சிறந்த மொழிகள் எனப் பதினெண் (18) மொழியாய்ப் பதங்கெட்டுப் ஒருமைத்திறம் பிரிவுற்று – பிளவுபட்டுக் கேடுற்றது.

அன்று இந்தப் பெருஞ்சிதைவினைத் தவிர்க்க முடிந்திருந்தால் இன்று உலகப் பேராற்றல் அல்லது வல்லரசுகளில் ஒன்றாகத் பெருந்தமிழப் பேரரசும் திகழ்ந்து கொண்டிருக்கும்.

      இப்படியாக ஏற்பட்டுவிட்ட இந்தக் இனமொழிக் கேட்டுநிலை தமிழகத்தின் பக்கமாகப் புதிய கலப்பினப் பண்பாட்டுத் தாக்கமாகத் திரும்பிய நிலையில், அதன் தொடர்ந்த கடுந்தாக்கத்தால் மூலத் தமிழர் வகுத்து வைத்திருந்த வாழ்வியல் கட்டமைப்புகள் யாவும் தடுமாற்றம் பெற்றன.

அவ் வகையில், வானியல் நெறிகளும், அவைசார்ந்த கலைமுறைகளும், வாழ்க்கை வழக்காறுகளும் வடுக ஆரியங்களால் சமற்கிருத மயமாக்கப்பட்டன. இதனைத் தமிழ் வழக்கத்தில் வலிந்து புகுத்திக்கொண்டு வந்தவர்கள், ஆசையாலும் அச்சத்தாலும் அறிவு மயங்கிப்போய், அன்னியரான திரிபினத்தார்க்கு அடிமைப்பட்டு ஆதாயம் தேடிக்கொள்ள முயன்ற தமிழினத்து அறிவாளிக் கூட்டங்களேயாவர்.

அதற்கு ஏற்ப, வழிவழியாக இருந்துவந்த தமிழ மரபுடைய வரலாற்று மாட்சிமைகளையெல்லாம் ஆரியச் சாயலேற்றித் – ஆரிய முனிமரபு மூலமும் சார்பும் கற்பித்துத் திரித்துப் போலி வரலாறுகளும் இயற்கைக்குப் பொருந்தாத தொன்ம முறைப் புனைவுகளும் (புராணமுறைப் புனைவுகளும்) கூறினர் - எழுதினர்.

இக் காலத்தில் எதிலும் அறிவியல் சார்பு ஓங்கி நிற்பதைப் போல, அக் காலத்திலே (இடைக்காலத்திலே) எதற்குமே ஒரு தெய்வச் சார்பு காட்டிக்கொள்ளும் தொன்ம மயக்கம் மிக்கிருந்துள்ளது. அந்தத் தெய்வச் சார்புக்கு உரிய மொழி எது என்ற ஒரு கேள்வியும் கூடவே முளைத்துநின்ற நிலையில்தான், சமற்கிருதம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைத்துவிட்டது. அந்தப் புதிய அலைக்கு ஈடுதர மாட்டாமல் எல்லாக் கலைமுறைகளும் நிலைமாற்றம் பெற்றுவிட்டன.

      இற்றைக்கு, என்னதான் வழிவழியாக வந்த பழைய தமிழ் அளவை முறைகள் எனத் தனியாக ஓர் அளவைமுறை நமக்கு இருந்தாலும் கூட, உலகப் பெரும்பான்மை ஆளுமைப் போக்குகளுக்கு ஒத்துப்போய்; அடங்கிக்கொண்டு எல்லோருமே மாத்திரி (Metric System) முறையை பயன்படுத்துவதைப் போலத்தான், அற்றைக்கு ஆட்சியாளர்களாக இருந்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக – கருவியாக அவர்கள் நம்பிக்கொண்டிருந்த ‘வடமொழி தேவமொழி’ – ‘வடமொழியாளர்கள் மண்ணுலகத் தேவர்கள் - பூசுரர்கள்’ என்னும் புதிய கொள்கைக்கு ஏற்ப, எல்லாவற்றையும் இப்படித் தமிழர்களே மாற்றியும் திரித்தும் உருச்சிதைத்தும் – கருச்சிதைத்தும் கொண்டனர் என்று அறிக. நடுநிலையான வரலாற்றுப் பார்வையில் பார்க்கும்போது, பிறர் நம்மைக் கெடுத்தார்கள் என்பதைவிட நம்மை நாமே கெடுத்துவிட்டோம் என்பதே விழுக்காட்டளவில் விஞ்சிநிற்கின்றது.

      ஆகவே, முற்றிலுமாக ஏற்கவும் முடியவில்லை, முற்றிலுமாக மறுகக்கவும் முடியவில்லை என்ற நிலைமையில்தான் தமிழோடு வடமொழியையும் கலந்து எழுதும் மொழியடையும் உருவானது. அதற்கு முன்பு வரை இருந்துவந்த தமிழின் தூயநிலை இங்கேதான் வலிந்த மாற்றத்துக்கு ஆளானது. இதற்கும் சற்று முற்பட்ட பாவியக் (காப்பியக்) காலத்தில்கூட அதாவது சிலப்பதிகார மணிமேகலைப் பாவியக் காலத்தில் கூட, வடமொழிக் கலப்பு இருந்தது என்றாலும் அது தமிழை எந்த வகையிலும் அழுத்தவில்லை, கெடுக்கவில்லை, மதிப்பழிக்கவில்லை. அங்கே – அந்த இருவழி நட்பில் ஓரளவு நேர்ந்திருந்த மொழியினக் கலப்பில்கூட, தமிழ்நிலை தன்னிலை – தன்னாட்சி நிலையில்தான் செம்மாந்து தலைநிமிர்ந்து இருந்தது.

ஆனால், அதற்குப் பிற்பட்டக் காலத்திலே தொடங்கி, வடமொழி தமிழுக்கு மிகுந்த அழுத்தநிலையை உண்டாக்கிவரத் தொடங்கியது. அதற்கு நடுப்புலத்து அன்னியர்களின் ஆட்சி மரபுகள் பெருந்துணையாக இருந்தன. ஏனெனில், அவர்கள் தமிழர்கள் அல்லர் – தமிழர்களாக இல்லை. அதனால், அது அவர்களுக்குக் கவலையளிக்கும் ஒன்றாக இல்லை. மேலும், அவர்களின் மொழிகளும் அந்த வடபுலத்து மொழிகளின் குறிப்பாக வடமொழியின் கலப்பினில் மூழ்கிக்கிடப்பவை. பின்னர் எங்கிருந்து எப்படி எதற்குக் கவலை வரமுடியும்?

மொழியின் போக்கு இனத்தின் போக்கினோடு ஒத்து அமையும். அதுபோல இனத்தின் போக்கும் மொழியின் போக்குக்கு மாற்றம், ஏற்றம், வீழ்ச்சி, தாழ்ச்சி, ... என எதை வேண்டுமானாலும் தந்துவிடும் தன்மையுள்ளது. இந்த உண்மையை மேற்சொன்ன தமிழ்மொழி – வடமொழி உறவுபற்றிய இரண்டு நிலையினிலும் அறிந்துகொள்ளலாம்.


No comments:

Post a Comment