அறிவியலும்
மெய்யறிவியலும் சொல்லவருவது
என்ன?
பொருள் ஒன்றிலிருந்து (ஒரு பொருளிலிருந்து)
ஒன்றும் பலவுமாய்ப் பொருள் அல்லது பொருள்நிலைகள் புடைபெயர்வதுதான் புடைப்பு
அல்லது படைப்பு. புடைத்தல் காரணமாகத்தான் புடைக்கும் பொருளியக்கம் புடைவி > புடவி ( வட. பிரபஞ்சம்) எனப் பெயர் பெற்றிருக்கிறது.
இந்தப் புடைப்பியக்கம் ஆகிய
படைப்பியக்கம், தானே நிகழ்கிறது எனும் பார்வை பொருள்முதல் கொள்கை எனப்படுகிறது.
பொருள்முதல் கொள்கைப்படி,
“ முதலாவது, ஒரு பொருளாயதப் பண்டம், மற்றொரு பொருளாயதப் பண்டத்திலிருந்து மட்டுமே
தோன்ற முடியும். இரண்டாவது, ஒரு பொருளாயதப் பண்டத்தின் மறைவு அல்லது அழிவு
என்பதற்கு மற்றொரு பொருளாயதப் பண்டம் உருவாகிறது என்பதே பொருள். மூன்றாவது, சிந்தனை எனும் வினையின் மூலம் மட்டுமே ஒரு பொருளாயதப் பண்டத்தைப்
படைக்கவோ, அழிக்கவோ முடியாது. வேறு வகையில் சொன்னால், கருத்துகள், எண்ணங்கள், புலன்
உணர்வுகள் என்பவற்றிலிருந்து
எந்தப் பொருளாயதப் பண்டத்தையும் படைக்க முடியாது. நான்காவது, பொருளாயதப் பண்டங்கள் உருவாவதும்,
அழிக்கப்படுவதும், அவற்றினுடைய மாற்றங்களின் உருமாற்றங்களளின் கட்டங்களே அன்றி
வேறு ஒன்றுமில்லை.
மற்றொரு பொருளாயதப் பண்டமாக மாற்றப்படும் போது,
ஒரு பொருளாயதப் பண்டம், அதனுடைய முந்திய உருவில் இருப்பது முடிவடைந்துவிடுகிறது.
அது ஒரு புதிய பண்டமாகும். மாற்றம் அல்லது உருமாற்றம் எனும் வினையின் போது, ஒரு
பொருளாயதப் பண்டம் இருப்பு, இருப்பின்மை எனும் இரண்டையுமே கொண்டுள்ளது. பொருளாயதப்
பண்டங்களின் உருமாற்றம், மாற்றம், வளர்ச்சி ஆகிய வினைகளில், அழிவு, உருவாதல் இரண்டுமே உள்ளடங்கியுள்ளன”. பொருள்முதல் கொள்கை,
புடைப்பியக்கம் பற்றி இவ்வாறு கருத்துகொள்கிறது. – நன்றி:
விந்தையான பிரபஞ்சம், பக். 72-73, வி. கோத் – தமிழாக்கம் பாக்கியம் சுந்தரம், ஆகத்து 1982.
இஃது “உற்பத்திக்கு முன்னும் காரியப்பொருள் காரணப் பொருளில்
உள்ளது” என்னும் கொள்கையாகிய ‘சற்காரியவாதம்’ என்ற சாங்கிய வாதத்தோடு ஒத்துப்போகிறது.
புடைப்பியக்கம் அல்லது படைப்பியக்கம் என்பது தானே நிகழாது, அதனை நெறியின் இயவுவதற்கு
ஓர் அறிவுமுதல்
வேண்டும் எனும் பார்வைதான், ‘கருத்துமுதல் கொள்கை’ எனப்படுகிறது. அதாவது, “பஞ்சபூதங்களும் தம்மில் கூடிச் சிருஷ்டியை விருத்திபண்ணும் ஆற்றல்
இல்லாதனவாக ‘ஈசுரசத்தி’ அவற்றுள் கலந்துநின்று ஊக்கும். ஊக்கவே,
அவை பஞ்சீகரணப்பட்டுப் பிரம்மாண்டத்தைத் தோற்றுவிக்கும்.” என்பது அது.
ஈசன் என்போன் இயக்குவோன், செலுத்துவோன், நடத்துவோன்
என்று பொருள்படும். அதன் அடிப்படையிலான சொற்களே இயவுள், கடவுள் என்பவை. தமிழர்தம் படைப்பியல் கோட்பாடும்
மேற்சொன்ன பொருள்முதல் கொள்கையோடு ஒத்தும், வினைநிகழ்வுகள் ஒரு வினைமுதலைக் கொண்டே
நிகழ்கின்றன என்னும் ஒரே ஒரு கருத்தால் மட்டுமே வேறுபடுகின்றது.
பொருள்முதல் கொள்கைப்படி, “ஏதுமற்றதிலிருந்து
ஏதும் தோன்றுவதில்லை” எனும்
கருத்துக்கு ஒப்ப, மாயை
எனும் உள்பொருளினின்றே யாவும் பொருண்மையுறுகின்றன என்பதை முப்பொருள்
உண்மை என்ற கோட்பாடு நன்கு
நிறுவிக்காட்டியுள்ளது. அறிவியல் கூறுகின்ற பொருள்முதல் என்பது பண்டைத் தமிழில் மாயை
எனப்படுகிறது. ஆயின் அம் மாயை,
தானே இயங்காது என்பதே இங்குள்ள வேறுபாடு.
“ பொருள், அதன் வகைகள் இவற்றின் அழிக்க (இல்லாமல் ஆக்க) முடியாமையையும், (முன்பில்லாது
புதிதாகப்) படைக்கப்படாமையையும் ஏற்றுக் கொள்வது, முடிவின்மை மெய்மத்தை (வட. தத்துவத்தை) ஏற்றுக்கொள்வதற்கு
இட்டுச்செல்கிறது. இயங்கும் பொருளின் முடிவின்மை என்பதற்கு, அதன் இருப்பு எந்த
வழியிலும் முடிவடையாது என்பதும், அது இல்லாதிருந்த ஒரு காலமோ, அது இல்லாது
இருக்கப்போகிற ஒரு காலமோ கிடையாது என்பதுமே கருத்தாகும். இயங்கும் பொருளின்
வடிவங்களும், நிலைகளும் முடிவுள்ளவையாக அதாவது தோன்றி மறைவனவாக இருந்தாலும், இயங்கும்
பொருள் முடிவற்றது. அது ஒரு
முடிவான நிலையிலிருந்து; மற்றொன்றிற்குச் செல்வது எப்போதும் முடிவடைவதில்லை
என்பதிலேயே அதன் முடிவின்மை அடங்கியுள்ளது.
அது போலவே, இயங்கும் பொருள் ஒரு நிலையிலிருந்து
மற்றொன்றிற்கு மாறுவது, இருப்பின் இட-கால
வடிவங்களிலிருந்து அதன் வெளியேற்றத்திற்கு இட்டுச்செல்லாது, (எனினும் அம் மாற்றம்,
வேறுபட்ட பரிமாணத்துடனும், உருவத்துடனும், ஒரு இட-காலப் பைதிரத்திலிருந்து (வட. பிரதேசத்திலிருந்து) மற்றொன்றிற்கு
மாறுவதுடன் இணைந்திருக்கலாம்) என்பதில்தான் இடம் மற்றும் காலம் என்பவற்றின் முடிவின்மை
அடங்கியுள்ளது. ஒரு இட-காலப்
பைதிரத்திலிருந்து (வட. பிரதேசத்திலிருந்து) மற்றொன்றிற்குப் பொருள் மாறுவதற்கு (இவை
இரண்டும் தம்மைப் பொருத்து முடிவுள்ளவை) தொடர்ந்து நிலவும் மறைதிறனாக இருப்பது இடம்,
காலம் என்பவற்றின்
முடிவின்மைதான்.
எனவே, பொருளின் ஒரு முடிவுள்ள நிலையிலிருந்து;
மற்றொரு முடிவுள்ள நிலைக்கும், ஒரு முடிவுள்ள இட-காலப் பைதிரத்திலிருந்து; மற்றொரு
முடிவுள்ள இட-காலப் பைதிரத்திற்கும் மாறுவதன் மூலம், இயங்கும் பொருள் மற்றும் அதன்
வகைகள் இவற்றின் முடிவின்மை வெளிக்காட்டப்படுகிறது.” – நன்றி:- விந்தையான பிரபஞ்சம், பக். 80-81, வி.கோத் - தமிழாக்கம்
பாக்கியம் சுந்தரம், ஆகத்து 1982.
[ பொருள் தோற்றமுறுதல் படைப்பு எனவும், பொருள்
அத்தோற்றத்தில் இருந்து இயங்குவது காத்தல் எனவும், பொருள் அத்தோற்றத்திலிருந்து
மாற்றம்பெறுவது – மாறிப்போவது அழித்தல் எனவும் தமிழ மெய்யியலில் கூறப்படுகிறது.
அந்த வினைநிலைகளில் இயங்குகின்ற-உந்துகின்ற-ஊக்குகின்ற ஆற்றல் வடிவங்களே அயன்,
மால், உருத்திரன் எனப்படும்
இயங்கியல் நிலைகள். ]
இதுவரையிலும்
பொருள்முதல் கொள்கையின் மூலக் கருத்தியல் கோட்பாட்டினைக் கண்டோம். பொருள் அழியாது,
அதனால் அது முடிவின்மை உடையது, அழியாது ஆனாலும் மாறும் இயல்புடையது, ... போன்ற
கருத்துகள், மெய்யியல் துறையில் முப்பொருள் உண்மை – அவை என்றுமுள்ளவை-நித்தியம், அவற்றின் இயக்கம் (தோற்றமாற்றம்) பிறப்பு-இறப்பு, ... போன்றவற்றுக்கு
ஒத்தமைகின்றன. இவற்றைப் பொறுத்து ஒப்பிட்டு நோக்க வல்லார்க்கு, இவற்றின் ஒற்றுமை –
ஒன்றான தன்மை நன்கு விளக்கமாகும்.
அடியோடு
அற்றுப்போதல் அல்லது முற்றழிவு என்பதாகத் தமிழ மெய்யியல் கூறவில்லை. அது
அணுமுதல் அண்டபேரண்டப் புடவியனைத்தையும் உருவக முறையில் குறிக்கின்றது. கதைவடிவிலான
தொன்மக் குறியீடுகளும் உடன்சேர்ந்திருப்பதால், அதன் இயல்பார்ந்த
நேர்நிலை உண்மை நேரடியாகச் சில
இடங்களில் புலப்படுவதில்லை. துலக்கிக் காண்பார்க்கு அவை விளங்கவே செய்கின்றன.
அடுத்து, புடைப்பு நிலை அல்லது வகை குறித்த
கருத்தாகத்தான் பெரும்பொருதல் கோட்பாடு (Big Bang
Theory) பேசப்படுகிறது. பொருதல், பொருந்தல் என்னும் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்த
வினைநிலைகளே. பொருதல் என்பது ஒன்றோடு ஒன்று வலிதாய்ச் சேர்தல் – மோதிச் சிதர்தல், பொருந்தல் என்பது ஒன்றோடு ஒன்று மெல்லிதமாய்
சேர்ந்துகொள்ளுதல்.
வலிதாய்ச் சேர்கையில் பொருள்நிலையில் சிதைவு உண்டாகும். மெல்லிதமாய்ச் சேர்ந்துகொள்கையில்;
பொருள்நிலையில் திணிவு அல்லது திணுக்கம் உண்டாகும். இதனையும் தமிழ மெய்யியல் ஓங்காரப் படைப்பியல் என்று விளக்குகிறது. அதாவது ஒலியிலிருந்து
ஒளியாகப் புடைபெயர்ந்திடும் பாங்கினைக் காட்டுகின்றது.
ஓங்காரத்திற்கு மூன்று நிலை உள்ளது. மெய்கள்
(தத்துவங்கள்) எல்லாம் தோன்றுவதற்கு
முன்னாலும் அஃது இருக்கிறது. மெய்கள் (தத்துவங்கள்) தோன்றிய பிறகு அவற்றோடு
கலந்தும் இருக்கிறது. மெய்கள் (தத்துவங்கள்) எல்லாம் அழிந்த பிறகும் அது தனியாக
இருக்கிற நிலை உண்டு.
தோன்றல்
– இருத்தல் - மறைதல் என்னும்
மூன்றையும் அ – உ - ம் எனும் மூன்றும் குறிக்கின்றன. இவற்றோடு இயைந்தளாவிய பொருண்மையும்
இயக்கமும்தான் நாதம், விந்து என்பன. நாதத்தைச் சிவம் என்றும், விந்துவைச் சத்தி என்றும் சொல்வர். அகரம் விருப்பாற்றல், உகரம்
செயலாற்றல், மகரம் அறிவாற்றல் எனப்பெறும்.
எனவே, ஓங்காரம் என்பதிலே அனைத்துநிலை சார்ந்த
உலகத் தோற்றமும் இயக்கமும் ஒடுக்கமும் என்பவற்றோடு, அவற்றுக்கு மூலமாக விளங்கும்
ஒலியும் ஒளியும் இயைந்து ஒன்றில் ஐந்தாக உள்ளதைத் தமிழ் மெய்யியல் கூறுகின்றது.
அதனைச்
செவ்விதின் உள்வாங்கிக் கொண்ட தமிழ்முனிவர் திரு.வி.க. அவர்கள் கூறுவதாவது
வருமாறு:-
“ தத்துவங்கள்
அணு அணுவாய் நுணுகி நுணுகி ஒளியாய் ஒலியாகும். ஒலியை முடிவாகக் கொள்ளலாமோ?
கொள்ளலாகாது. ஏன்? ஒலியும் வடிவுடையதென்பது ஆராய்ச்சியால் நிறுவப்பட்ட உண்மை. அவ் வடிவு
யோகியர்க்குப் புலனாகியது; இனி வரும் விஞ்ஞானியர்க்கும் நன்கு புலனாகும்.
புலனாகும் ஒன்று வடிவுடையது; மாறுந் தன்மையது.
அமைதியில் நின்று ஒலியை
ஆய்ந்தால், அதன் மூலம் புலப்படும். அம் மூலம் மாயை என்று கருதப்படுகிறது. (மாயை மூவகை. அவை பிரகிருதி, அசுத்தம், சுத்தம் என்பன. சுத்த மாயை நுண்ணியது. அதன் தடிப்பு அசுத்த மாயை. இதன் தடிப்பு பிரகிருதி
மாயை. மாயையின் தோற்றுவாய் ஒலி
அல்லது நாதம். இங்கே ஒலியின் மூலம்
பொதுவாக மாயை என்று கூறப்பட்டது.)...
... அம் மாயை முதல் முதல்
ஒலியாகிறது. ஒலி ஒளியாகிறது. ஒளியினின்றும் பலதிறத் தத்துவங்கள் தோன்றுகின்றன. இத்
தத்துவங்கள் கலைகளாகவும் புவனங்களாகவும் உருவெடுக்கின்றன. உருவெடுத்த கலைகள்
எத்துணை! புவனங்கள் எத்துணை! இவை யாவும் படிப்படியே சேர்க்கைபெற்ற திறங்கள்
சிந்தனைக்குரியன. -
பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி: பக். 78-80”
மேலும், மற்றுமோர் இடத்தில்
இவ்வாறு குறிப்பிடுகின்றார். அதாவது:-
“ கடவுள், உயிர், உலகம் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்று வாழ்க்கை என்று சில அறிஞர் கூறுகின்றனர். இக் கூற்று
விழுமியது. இதன் நுட்பத்தை உணர அநுபூதி தேவை. உலக வாழ்க்கை, உயிர் வாழ்க்கை இரண்டும் சேர்ந்து கடவுள் வாழ்க்கையாகும். கடவுள்
வாழ்க்கையில் உலக வாழ்க்கையும், உயிர் வாழ்க்கையும் அவற்றின் கூறுகளும்,
திறங்களும், பிறவும் அடங்கும். அங்கே வாழ்க்கையின் குறிக்கோளும், அதன் முழுமையும்
தெளிவாகும். ... - பக்.98 பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி.
... வாழ்க்கைக்குத் தொடக்கம் உண்டா இல்லையா?
முடிவு உண்டா? இல்லையா? அஃது இடையீடின்றித் தொடர்ந்து செல்வதா? அன்றா? இவ்
வினாக்களைச் சிந்திக்கச் சிந்திக்க விடைகள் தாமே பிறக்கும். விடைகள் சிந்தனையின் அளவை நிலைகளைப் பொருத்துப்
பிறப்பன. ஆழ்ந்த சிந்தனையில், வானிற் பதிந்துள்ள பல பேரறிஞர்களின் எண்ணங்களும்
துணைசெய்யும். எனது ஆராய்ச்சியிலும் சிந்தனையிலும் வாழ்க்கை, தொடக்கமும் முடிவும்
இல்லாதது என்பதும், அது தொடர்ந்து தொடர்ந்து செல்லும் என்பதும் படிப்படியே
விளங்கின.
கடவுள், உயிர், உலகம் ஆகிய இம் மூன்றும் தொடக்கம் முடிவு இல்லாதன. இவற்றால் மலரும் வாழ்க்கையும் தொடக்கம்
முடிவு இல்லாததென்று கூறுவதற்கு இடமுண்டு. ‘கடவுளுக்கும் உயிருக்கும் தொடக்க
முடிவு இல்லை என்று சொல்லலாம். உலகுக்குக் கூடவா தொடக்க முடிவு இல்லை என்று
கூறுவது? என்று சிலர் கருதலாம்.
‘ உலகம் சடம். அது
மாறுந்தன்மையது. ஆனால், அழியுந் தகையதன்று. (மாறுதலை அழிவென்று சொல்வதும் உண்டு.
இஃது உபசாரம்.) மாறுங் காரிய உலகத்தைக் கண்டு, அதற்குக் காரணமாயுள்ள ஒன்றை அழியுந்
தகையதென்று எண்ணுதல் கூடாது. நன்றி:– பக்.
99 – 100, பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி.
இதுகாறும் திரு.வி.க.
கூறியவற்றைக் கொண்டு, படைப்பியக்கம் என்பதை
ஒட்டுமொத்தமாக ‘வாழ்க்கை’ என்றொரு
சொல்லால் ஒருங்கியைத்துக் கூறலாம்.
அந்த வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பம் அல்லது
நன்மைதீமைகள் ஏன் வருகின்றன? என்றொரு கேள்விக்கும் மிக அறிவார்ந்த ஒரு விடையைத் திரு.வி.க. அருளிச்செய்துள்ளார். அதாவது:
“வாழ்க்கை சிறந்ததே. ஆனால், அதில் நலமும் தீங்கும்
ஏன் கலந்து நிற்றல் வேண்டும்? இக் கலப்பு இயற்கையன்று; செயற்கை. இதற்குக் காரணம், மனிதன்
பகுத்தறிவால் பெற்ற உரிமை உணர்வேயாகும்.” என்கிறார்.
எனவே, படைப்பியக்கத்தை வெறும் பொருள்களின்
இயக்கமாகப் பார்ப்பது ஒன்று. அதனை, அறிவும் உணர்வும் கலந்தமைந்த ஒன்றாக உணர்ந்து
தெளிவது மற்றொன்று. இதனைத் தெளிவதற்கு அவரவர் உள்ளமே தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
போல, வாழ்க்கைப் பட்டறிவால் கற்றனைத்து ஊறும் என்க.
No comments:
Post a Comment