உண்டு இல்லை
உண்டில்லை
என்னும் உலகத்து இயலிது
பண்டில்லை
என்னும் பரங்கதி உண்டுகொல்
கண்டில்லை
மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை
உள்ளே விளக்கொளி யாமே!
- திருமந்திரம்
: 2656
ஒரு பொருளை உள்ளது உள்ளபடிக் கண்டு ஆராய்ந்து உணராமலே,
சும்மாவே அது இன்னதாக இருக்கிறது என ஒரு சிலரும், இன்னதாக இல்லை என்று வேறு
சிலரும் ஏதோ ஒரு தற்சார்புக் காரணத்தால் ஒப்பியோ மறுத்தோ கூறுதல் உலகத்து இயற்கை. இத்தகையவரான
உலகமாந்தர், இவ்வுலகத்தின் பழைமையாகிய தொன்மையைத் தேறாமல்; அதனுடைய புதுமையாகிய
தொடர்ச்சியையும் தெளியாமல், எத்துணைத் தொன்மையிலும் இயற்கைத் தொன்மையாக
அறியப்படுவதாக இருக்கின்ற முழுமுதற்
பொருளை இல்லை என்று கூறும்.
இவ்வாறு கூறுவோர்க்குப் படைப்பியக்கத்தில்
ஒப்பிட்டுப் பார்க்கையில், தாம் இருந்துவரும் மேலான நிலை (கதி) அடைவுகள்
இருந்தவாறு எங்ஙனே? என்று சற்றே சிந்திக்கினும் அஃது எவ்வாறு இருப்பதாகிறது
என்னும் உண்மை தெற்றெனப் புலப்பட்டுவிடும். அப் புலப்பாடு அவர்களுக்கு
உண்மையினை - பழம்பொருளாகிய இறைவனை உணருமாறு கூட்டுவிக்கும். அப்படி ஒருவாறு
உணரப்பெற்ற மாந்தருள்ளும் அந்தப் பழம்பொருளை முடியக் கண்டவரில்லை. கண்டோரும்
முழுதுற விண்டுரைத்து முடித்தாரில்லை. அவ்வாறானால், அந்த பழம்பொருள் எத்தகையது?
யார் ஒருவர் தமது உணர்வின் உள்ளே ஓர்ந்து – ஒருமித்து உணர்வாரோ, அவர்க்கு -
அவர்க்குள் விளங்கும் உள்விளக்கமாக – உள்ளொளியாக அஃது உள்ளது.
‘உண்டில்லை
என்னும் உலகத்து இயல்இது’ என்று
திருமூலர் குறிப்பிடுகின்றார். எல்லாம்வல்ல
ஓர் இறைப்பொருள் உண்டு
என நம்பித் தொடங்குகின்ற ஒருவர், நடுவில் அஃது-அப்படி ஒன்று இல்லை என்பதைப் போன்ற
ஒரு நிலையினையும் உடன்காணும் நிலைக்குள்ளும் புகுந்துவருவார். எல்லாம்வல்ல ஓர்
இறைப்பொருள் என்று கூறப்படுகின்ற மெய்ப்பொருள் என்ற
ஒன்று இல்லை என்று தொடங்குகின்றவரும் நடுவில் அஃது-அப்படி ஒன்று உண்டு என்ற
நிலையினையும் உடன்காணும் நிலைக்குள்ளும் புகுந்துவருவார்.
இப்படியாகப் தமக்குப்
புறத்தில்(வெளியில்)போய் உண்டு எனவும், இல்லை எனவும் கருத்தியல் போரிடுபவர்கள்,
பின்பு தாம் தமக்குள்ளாக ‘தான்’ எனத்
தன்னோடு இயைந்துள்ள ‘உண்டு
இல்லை’ என்பதற்கு அப்பாற் பட்டதாகத், தன்னிலையில் தானாய்
இலங்கிக்(விளங்கிக்)கொண்டு; இறைகூர்ந்து உள்ள மெய்ப்பொருள் உணர்வினை, மாறும்
இயற்கையில் மாறா இற்கையாக -இயல்பினதாக ஒன்றிருப்பதை மெல்ல உணர்வினுள் எய்துவர்.
அது கற்பனை
கடந்த சோதி என்பதாக உணர வாய்க்கும். காலத்தால் மிகப் பழையதாகவும்
அதே வேளையில் அழியாது நீடுகின்ற இயல்பினால் மிகப் புதியதாகவும் துலங்கிவரும்.
உண்மையில், உண்டு
இல்லை என்பது தன்னையறியும் ஆன்மப் பயணத்தில் வருகின்ற சில கட்டங்களாகும். தேடலோடு
செலுத்தப்பட்ட வான்கலம் செல்லச் செல்ல அதனோடு பொருந்தியுள்ள சில இணைப்பு அல்லது
பொருத்துகளைக் கழன்றகலுகின்ற தன்மைக்கு இதனை ஒருவாறு ஒப்பிட்டுக் கூறலாம். கடந்தேறுதல் என்பதும் இயைந்துணர்தல் என்பதும்
நிகழ்கின்ற அளவினதாக அதுபற்றிய வெளிப்படுத்தல்கள் உலகத்தில் சமயமதக்
கோட்பாடுகளாகத் தோன்றிநிற்கும்.
அறிவு
புலர்தலுக்கும் வளர்தலுக்கும் இவ்வாறான ‘முரண் அமைப்பு’ இயற்கையிலேயே
உள்ளது. இரவுபகல், ஒளியிருள், வெப்பம்தட்பம்,
ஆண்பெண், இளமைமுதுமை, நெடுமைகுறுமை, ஆக்கம்நீக்கம், நெருக்கம்விலக்கம்,
பருமைநுண்மை, ஒருமைபன்மை, ஒற்றுமைவேற்றுமை, இணக்கம்பிணக்கம், நடப்புகிடப்பு,
உருவரு, தோற்றுவாய்இறுவாய், ஆற்றல்பொருள், இழப்புஈட்டம் ... என ஒன்றை ஒன்று, ஒத்தும் எதிர்ந்தும் இயங்குவதனால்,
உண்மைநிலை விளக்கமாகிறது. உண்மை விளக்கமுறும் அளவாகத்தான், ஆக்கமும் கேடும்
அற்றதாகிய நிற்றியம் அல்லது நித்தியம் என்னும்
நிலைத்தன்மை, சார்பற்ற நிலையில்
விளங்குகிறது-புரிகிறது-அறியவாய்க்கிறது.
‘இயங்குவது இறைமை’ என்று
இறைநிலையினைக் குறித்த பண்பியல் தன்மையினைத் தமிழ்நெறி அறிவர் திருமாலனார் விளக்குகின்றார்.
அந்த இடையறாத பேரியக்கப் பெரும்பொருளை, எங்கிருந்து எவ்வாறு யார் அளந்து
யாருக்குக் காட்டமுடியும்? தம்மிடத்தில் வந்த சிலரிடத்திருந்து, “கடவுளைக் காட்டு” என்று எள்ளனமாக வந்த வினாவுக்கு, “கடவுளைக்
காட்டு என்று கேட்டால்; அஃது என்ன கடுகா மிளகா கடையில் வாங்கிக் காட்ட” என்று
நடப்பு நிலையைக் கொண்டு எதிர்வினாவால் வினவி விடையளித்தவர் அவரே. அஃது அகத்திலும்
புறத்திலும் அகப்புறத்திலும் புறப்புறத்திலுமாக
ஒருநிலையிலே ஒருவாறு ஓரளவுக்கு உணரக்கூடியதாகவும்; மற்றொரு நிலையிலே உணர
முடியாததாகவும்; மேலுஞ் செல்வோமானால், உலகியற் சார்புடைய அறிவும் உணர்வும் கொண்டு
ஒருவாற்றானும் முற்ற முழுதாகத் தேற முடியாததாக இருப்பதை அவர் விளக்குவார்.
திருக்கூட்ட மரபினர் வழியிற்
சார்ந்தும்; அம் மரபோடு இழையறாமல் இயைந்தவண்ணமாகத் தாமே தமக்கேயுரிய
தனித்தன்மையினால் தேர்ந்துதெளிந்தும் ‘தமிழர் சமயம்’ என்று
அறிவியல் சார்ந்த மெய்யறிவியலை உலகியலோடு
உறழ்ந்து கண்டுவிண்டுரைத்தவர் திருமாலனாரே. அறியாமை – அறிவு – பகுத்தறிவு – மெய்யறிவு –
வாலறிவு என்றொரு அறிவியக்கக் கோட்பாட்டினை கீழைமேலை நாட்டு
அறிவியலுக்குப் பாலமாக அமைத்துத் தந்தவரும் அவரே. இவர்தம் கருத்துக்கு ஒத்த
நிலையினராகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் திகழ்கின்றார்.
இவர் இயற்றியுள்ள
கனிச்சாறு
பாநூலில் இறைமை எனும் தலைப்பின்கீழ் தந்துள்ள மெய்யறிவியற் கருத்துகளையும், உலகியல்
நூறு என்னும் மெய்யியல் நூலிற் காணும்
கருத்துகளையும் கவனித்தால் அவை முற்றிலும் இயற்கை அறிவியல் சார்ந்தனவாகத்
திகழ்ந்து ஒளிகாட்டுவதை தமிழுணர்வுடைய ஒவ்வொருவரும் உணரலாகும். இதோ உலகியல்
நூறிலிருந்து ஒரு பாட்டு.
புடவிபல; ஒன்றுகடல் புன்மணல்இஞ் ஞாலம்;
அடவியென மீன்செறிவாம் அண்டம்பல் கோடி;
இடவரைகள் எண்டிசைகள் இவ்வுலக ஆக்கம்;
கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு
-
உலகியல் நூறு : 1 : பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
கருத்து:- புடவி(பிரபஞ்சம்-Universe) ஒன்றன்று; அது பலவாகும்.
அப் புடவிகளுள் ஒன்றினது பகுதியாக நாம் இருக்கின்ற இவ்வுலகம் இருக்கின்றது. அஃது
எவ்வாறு இருக்கிறது என்று ஓர் ஒப்புமை அல்லது ஒப்பீடு கூற வேண்டுமானால், ஒரு
கடலின் கரையில் பரந்து கிடக்கின்ற மணல்பரப்பில், எண்ணுதற்கரிய மணல்துகள்களின் நடுவே
ஒரேயொரு துகளுக்கு ஒப்பாக இருக்கிறது. எண்ணரிய மணல்துகள்களிடையே இருக்கின்ற ஒரு
துகள் போன்ற நிலையில், இவ்வுலகம் காணப்படுகின்றது எனும்போது; அதன் சிறுமை
நிலையையும் புடவியின் மீப்பெரிய பரப்புநிலையையும் ஒருவாறு ஒருங்கே உணரமுடிகிறது.
அடுத்து,
உலகத்திலுள்ள பொருளைக்கொண்டே உலகத்தின் நிலையினைக் காட்டியது போக, உலகத்தைச்
சூழ்ந்துள்ள பொருள்களைக்கொண்டு உணர்த்துகின்ற பாங்கிலே, விண்மீன் கூட்டத்தோடு
ஒப்பீடு காட்டப்படுகிறது. அடர்ந்த
காடுபோலும் செறிந்த விண்மீன்களைக் கொண்டுள்ள அண்டம் எனப்படும் விண்ணமைப்பு ஒன்றன்று; பல கோடியாகும்.
அதாவது, பலவான புடவியிலே இயங்கும் அண்டங்களும் பல.
அவை,
பார்ப்பதற்கு பெரிய காடுகளைப் போலக் காட்சியளிக்கின்றன. அக் காடுகளில் முளைத்து
மண்டிக்கிடக்கும் நிலைத்திணைகளைப் போல, அவ்வண்டங்களிலே ஆங்காங்கே விண்மீண்
கூட்டங்கள் காணப்படுகின்றன. அவ்விண்மீண் கூட்டத்துள் ஒரு மீனாக
இலங்குவதே-இயங்குவதே நம் ஞாயிறு. அஞ்ஞாயிறும் தன்னைச் சார்ந்து இயங்கும் ஒரு
கோட்கூட்டம் உடையது. அந்த ஞாயிற்றுக் குடும்பத்துள் அமைந்த ஒரு கோளந்தான்
இவ்வுலகம். பெரிய மலைகள், கடல்கள், காடுகள் என்று உலகத்துக்குள்ளேயே வியப்பு பல
கூறி வியக்கின்றோம். ஆனால், அவை யாவும் உலகத்தின் ஒரு மணல்துகள் அளவான தோற்றத்தில்
எங்கே தெரியும்? எப்படித் தெரியும்? எண்ணிப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை!
இப்படிப்பட்ட உலகத்தில் உள்ள இடப்பரப்பில் நம் இருப்புநிலையும் இயக்கமும்
நாட்டமும் நடப்பும் எப்படி இருக்கின்றன?
இப்படிப்பட்ட சிறிதினுஞ் சிறிய உலகத்திலே பிறந்துள்ள
உயிர்களுள் மாந்தன் ஆகிய நாம்தான், அதிலே பலபல இட எல்லைகளைப்
பிரித்து-வகுத்துக்கொண்டு அவற்றுக்குத் திசைகளையும் குறித்துக்கொண்டு இருக்கிறோம்.
உண்மையில், அவ்விடங்களும் அத்திசைகளும் இயற்கையிலே இல்லை. அவை ஒன்றேயான உலகம்
என்பதில் நாமே வகுத்துக்கொண்டுள்ள செயற்கைகள். இயற்கையில் நமக்காக நாம்
செய்துவைத்திருக்கும் செயற்கைகள் ஒருநாளும் இயற்கையாகா. இந்த இடவரைவுகளுக்கும்
திசைவரைவுகளுக்கும் உள்ளாக நிகழ்கின்ற நிகழ்வுகளை(நேர்வுகளை)க் அடிப்படையாக
வைத்துக்கொண்டுதான் நாம் இயற்கை அல்லது இறையைப் பற்றி நமது கருத்துகளை வெளியிட்ட
வண்ணமாக இருக்கின்றோம்.
இது
தலைமுறைதோறும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நம் செயற்கைகளுக்குள் இயற்கையை
அடக்கிப்பார்த்து நலந்தீங்குகளையும் இன்பதுன்பங்களையும் காரணமாக வைத்து;
கடவுள்தன்மையினை நாம் நம் எல்லைப்பட்டுள்ள அறிவுக்குள் வைத்துவைத்துக் கணித்துக்
கணித்துக் கூறிக் கொண்டிருக்கிறோம். தெய்வம் பலபல எனும் கொள்கை, பலவும் ஒரேதெய்வம்
எனும் கொள்கை, ஒரே தெய்வக் கொள்கை என மாந்த அறிவியக்கம் இயங்கிவந்துள்ள தடம் உலக
வரலாற்றில் நன்கு பதிந்து கிடக்கின்றது. தமிழர்தம் தெய்வக் கொள்கைகளும் இதே
தடத்தில்தான் வந்துள்ளன.
நாம் ஒருவரோடு
ஒருவர் உடன்படும் நிலைகளில் ஒன்றுபட்டு அவற்றைக் கொண்டு உறவுநிலையும்; வேறுபடும்
நிலைகளில் வேறுபட்டு அவற்றால் மனம்பொருந்தாத நொதுமல் நிலையும், மாறுபடும்
நிலைகளில் – மாறுபட்டு – அவற்றின் காரணமாகப் பகைநிலையும் கொண்டவர்களாகி
இருக்கிறோம். இவற்றின் வாயிலாக ஒருவருக்கு ஒருவர் கேள்விகளைக் கேட்டும் விடைகளைச்
சொல்லியும் வருகின்றோம். எதிரும் புதிருமாக இருந்துகொண்டு அறிவுப்புதிர்
நடத்திக்கொண்டு வருகின்றோம்.
இனி, இந்த உலகமே
ஒரு புல்லிய மணல்துகள் போன்றது என்றால், இதில் மாந்தனின் உருவம் எத்துணை அளவினதாக
இருக்கும்? அந்த உருவத்தினுள் எழுந்து இயங்குகின்ற அறிவும் உணர்வும் எத்தகையனவாக
இருக்கும? மீண்டும் இந்த உலகத்தை அப்படியே அண்டங்களில் உள்ள விண்மீன் கூட்டங்களோடு
ஒப்பவைத்து எண்ணிப் பார்ப்போமானால், ... நாம் எங்கே? நம் நினைவியக்கம் எங்கே?
உலகத்தின் இருப்புநிலையே தெரியவில்லை. நம் தனித்தனி இருப்புநிலைகளும்
இயக்கநிலைகளும் கண்ணுக்குத் தெரியுமா? கருத்துக்குத்தான் புரியுமா? நமக்குள்
முற்றாக அடங்கி அகப்படுமா – அந்தப் பேரியற்கை?
“எல்லையில்லாத
உணர்வுப் பொருளாகிய இறைப்பொருளைக் குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் காணவல்ல
திறம்படைத்துள்ள புறக்கண்ணுக்கு அடங்கிய – எல்லைப்படுத்தியக் காட்சிப் பொருளாகக்
காட்டு ” என்று கேட்டால், எவ்வாறு காட்ட முடியும்? சித்த மலமறுத்துச் சிவணவரும்
பொருளுணர்ச்சியை அளக்க முயலுகின்ற ஆணவ முனைப்புமிக்க மாந்த அறியாமையினைச் ‘சித்தமும்
செல்லாச் சேட்சியன் காண்க’ என்று அதனை மனத்தினால் அளக்கலாக அதன் தன்மையினைக்
கொண்டே உணர்த்துவார் மணிமொழிப் பெருமான். அவரே, அப்படி அளந்துகாண முடியாத
இறைப்பொருளை அணுகுதற்குப் ‘பத்தி வலையிற் படுவோன் காண்க’ என்று
அன்பினைக் கருவியாக்கித் தருகிறார்.
திருமூலப்
பெருமானாரும் இவ்வுண்மையினை இன்னும் நெருக்கமாக மாந்த அறிவுணர்வுக்கு அணுக்கமாகக்
கொணர்ந்து, “மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச்
சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே” என்று ஏரணத்தால் காட்டியுள்ளார். ஆனால், கண்டவர் யார்?
கண்டு விண்டவர் யார்? கண்டு விண்டுள்ளவற்றை ஏட்டளவிலாவது சரியாக, தெளிந்து முற்ற
முடித்து உணர்ந்திருப்பவர் யார்? எல்லாவற்றையும் படித்தவர் யார்? படித்து
முடித்துத் தெளிந்துவிட்டேன் என்று நிறைவுணர்வு பெற்றவர் யார்?
இறை எந்தச்
சமயத்தைச் சார்ந்த எந்த நூலுக்குள்ளும் அடங்கிவிடவில்லை; அதே வேளையில் அறவே அங்கு
அறியவும் உணரவும் கொஞ்சங்கூட முடியாததாகவும் இல்லை. இது நூல்வகையில் காணப்படுகின்ற
நிலைமை. இதே போல, ஆள் நிலையில் எடுத்துப் பார்த்தலுங்கூட, இறை குறித்துக்
கூறப்படுவது எவருடைய அறிவுக்கும் உணர்வுக்கும் ஒருசிறிதேனும் அறியவராத – உணர
வாய்க்காத அயலாகவோ - அப்பாலாகவோ இல்லை; அதே வேளையில் எவ்வொருவரின் அறிவதலுக்குள்
அடங்கியதாகவும் இல்லை.
இறைவனை உணர்வது
இருக்கட்டும். இறைவனின் புடைப்பாக – படைப்பாக விளங்குகின்ற ஒட்டுமொத்த அணுமுதல்
அண்டவகைகள் வரை எதுவுமே இறை
இயைபு இல்லாததாக இல்லை என்பது முறையே அறிவியல் துறைசார்ந்த
அறிவிலாளர்களும் அறிவர்களும் ஒத்துக் கூறுகின்ற வாய்மொழியாக இருக்கிறது.
ஒட்டுமொத்தப் படைப்பைக் கண்டு; படைப்பியக்கத்தைக் கண்டு; அப் படைப்பு முதலினைக்
கண்டுகொள்வனவாகத்தான் அவர்களின் காட்சியுரைகள் இருக்கின்றன.
அஃது முப்பொருள்
முயக்கமாக இயங்கும் வகையறிந்து; தகையறிந்து; அறிவுமுகை அவிழ்ந்து மலர்ந்தவர்களே -
தம் மலரகத்து மலர்ந்து மணம் தந்தவர்களே இயற்கை உண்மையின் செவ்வி தலைபட்டவர்கள்.
அன்னவருள் ஒரு சாராரே நம் தமிழார்ந்த
திருக்கூட்ட மரபினர் என்பது தானே போதரும்.
முப்பொருள்
முயக்கமாக இருந்து இயங்குகின்ற படைப்பியக்கத்தின் நடுவே, விழித்துப் பார்த்து;
எதுவும் விளங்காமல் தவிக்கின்ற நிலையில்தான் மாந்தன் இருக்கின்றான் - அறிகின்றான்
– வியக்கின்றான் – அறிதோறும் தன் அறியாமையைக் கண்டுகொள்கிறான் – மீவியன்மையுள்ளே
தன் சிறுமைநிலையினை தெள்ளுகின்றான். இதோ முப்பொருள் முயக்கத்தினை அறிய அந்த
முயற்சியில் தவிக்கின்ற மாந்த நிலையினைத் தெளிவாக்குகின்றார் அறிவர் திருமாலனார்.
மாந்தன்
பிறக்கின்றான் மண்ணில் மறைகின்றான்
சொந்தம்
இவனிங்கு வாழும் வரையென்பார்!
இந்தக்
கதைகேட்டோம்; வாழ்கின்ற வாழ்வதனில்
எந்தப்
பயனும் விளையவில்லை; வீணாக
வந்து
பிறந்துவிட்டான்! வாழ்வும் நிலைப்பதில்லை!
முந்தை
வினைப்பயனில் மூழ்கி உருவெடுத்தான்;
இந்தப்
படியாக மக்கள் பிறப்பதற்கு
விந்தைக்
கதைசொல்வார் வேதாந்தம் பேசிடுவார்!
முன்வினைதான்
மக்கள் பிறப்பின் பயனென்றால்
இன்னும்
பிறப்பெதற்கு? இதற்கோர் முடிவுண்டோ?
பிறப்பிற்கு
இக்கதையைப் பெரிதாகக் கொண்டால்,
இறப்பதற்குக்
காரணத்தை யாரறிந்து சொல்வார்கள்?
இறப்பும்
பிறப்பும் வினைப்பயன்தான் என்றால்,
வினைதான்
விளைவோ? விளக்கம் தருபவர்யார்?
வினைதான்
விளக்கமென்றால் தோற்றம் மறைவென்ன?
தோற்றம்
மறைவும் தொடரும் கதையாகி;
ஏற்றம்
பெறுகின்ற ஏந்துவினால் மாந்தன்இவன்,
எல்லாம்
தெரிந்தவன்போல் எண்ணி இறுமாப்பில்
பொல்லாங்கு
செய்கின்றான்; புத்தி அழிகின்றான்!
தன்னுள்
உறையும் அறிவு விளக்கொளியில்
தன்னை
அறியாமல், தானே கெடுகின்றான்!
கண்ணாடி
முன்னின்று தன்னுருவைக் காண்பதற்குக்
கண்மூடிக்
கொண்டு கடுமுயற்சி செய்கின்றான்!
எத்தனையோ
விந்தை உருவாகும் இவ்வுலகில்
அத்தனையும்
இச்செயலுக்(கு) ஒப்பாமோ? ஆசைத்
திரைமூடிக்
கொண்டுள்ள தோற்றம் புரியாமல்,
இரையாகி
நிற்பதனால் இவன்மாந்தன் என்றாரோ?
பகுத்துணரா
மாக்கள் பயன்படுவ தே, இறைமை
வகுத்திருக்கும்
அகக்கண் அறிவு திறப்பதென்றோ?
தன்னை
அறியும் அகக்கண் திறந்துவிட்டால்,
தானே
தனையறியும் தமிழர் சமயமதைத்
தன்னுள்
உணர்வதற்குத் தடையாகி நிற்கின்ற
எண்ணற்ற
ஆசையெனும் இருட்டறையில் வாழ்கின்றான்!
பல்லாயிரங்
கோடி ஆண்டுகளாய்ப் பழகிவிட்ட
பொல்லா
இருளே புதுமையென எண்ணுகின்றான்!
எண்ணும்
புதுமையெலாம் எழுதாக் கதையாகி;
மண்ணுள்
மலர்வதற்குள் மாண்டு மடிகின்றான்!
மாண்டு மடிகின்ற வாழ்நாள் சிறிதெனினும்
யாண்டும் உயிர்வாழ்வு நீண்ட கதையாகும்!
நீண்ட கதைக்குள் நிலைக்கும் பொருள்எதுவோ?
தூண்ட
ஐம்பொறிக்குள் துலங்கும் சுடராகும்;
சுடரும்
ஒளிக்கதிருள் துலங்கும் கருப்பொருளாய்ப்
புடவிக்குள்
தோன்றும் புதுமையே மாந்தனென்பான்!
-
கனல் : பக். 53
– 54 : 1979
இறுதியாக,
இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த விடையாக வள்ளல் பெருமானார் அருளிச்செய்துள்ள
பின்வரும் அருட்பாட்டு நமக்கு இருட்பாடு நீக்கித் தெருட்பாடு அளிக்கின்றது.
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதுவாய்
எல்லாஞ்செய்
வல்ல தாகி
இயற்கையே உண்மையாய் இயற்கையே
அறிவாய்
இயற்கையே
இன்ப மாகி
அவ்வயின்
அனாதியே பாசமில தாய்ச்சுத்த
அருளாகி
அருள்வெ ளியிலே
அருள்நெறி
விளங்கவே அருள்நடம் செய்தருள்
அருட்பெருஞ்
சோதி யாகி
கவ்வையறு
தனிமுதல் கடவுளாய் ஓங்குமெய்க்
காட்சியே
கருணை நிறைவே
கண்ணேயென்
அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
கதியே
கனிந்த கனியே
வெவ்வினை
தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
வீற்றிருந்
தருளும் அரசே
மெய்ஞ்ஞான
நிலைநின்ற விஞ்ஞான கலருளே
மேவுநட
ராச பதியே!
-
திருவருட்பா நடராசபதி மாலை: 16
‘நடராசபதி மாலை’
என்னும் பதினான்கு கழிநெடிலடி
மண்டிலப்பா எனும் யாப்பு வகையைக் கொண்டு பாடியருளியிருக்கின்ற 34 பாடல்களில்
வள்ளல் பெருமான் நம்பொருட்டாக திருவுளம்பற்றி அறிவித்திருக்கின்ற உண்மையை
உள்ளன்போடு படித்த மாத்திரத்திலேயே எவருக்கும் உள்ளம் உருகாமல் இருக்க முடியாது.
அவர் போலப், பொதுவுக்கு இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் இறையுண்மையை புரியுமாறு
ஓதியருளிச்செய்தவர்கள் யாரும் இலர் என்றே கூறிவிடும் அளவுக்கு அவர் இறங்கி
வந்திருக்கின்றார்.
மேற்சொன்ன 34 அருட்பாமணிக்
கோவையால் அமைந்துள்ள அருள் மாலையாக விளங்குகின்ற இதனைப் படித்த பின்னரும்
இறைநம்பிக்கை வரவில்லை என்று சொன்னால், அந்த உள்ளம் இன்னும் தன் அகப்பயணத்தை ‘உண்டில்லை’ என்னும்
எல்லைகளில் தொடர்ந்த பிறகுதான் தேறமுடியும் என்பது திண்ணம்.
உண்மை
கண்டவர்க்கு உள்ளம் பணிவார்ந்திருக்கும். இறைவனின் அளக்கலாக அருமையும் பெருமையும்
தேறத்தேறத் - தெளியத்தெளியத் துடுக்குத்தனம் போகும், செறிவறிந்து சீர்மை பயக்கும்
அறிவறிந்து அடங்கப் பெறின், அடக்கமாகி அமரருள் உய்க்கும். அங்கே ‘தான்’ என்பதன்
சிறுமை நிலையும் புரியும் – தெளியும்.
அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்தவுயிர்
எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்தகலப்பு
எவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண்டகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
வெளிஞான
வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
குலவுநடத்து
அரசேயென் குற்றமும்கொண் டருளே!
-
அருள்விளக்க மாலை : 80
இதுதான் தமிழ மெய்யறிவியல் கண்டுரைத்திருக்கும்
உண்மை. இதற்குள் இடைப்பட்டதாய்க் கிடந்து; அறிவும் உணர்வுமாக கிளர்ந்துவரும்
கிளர்வுகளே – புலர்வுகளே – வளர்வுகளே ‘உண்டில்லை’ என்னும்
அடிப்படையிலான சமயமத நிலைகள். இவற்றுக்கு அப்பால் கடந்துசென்று, உள்ளதை உள்ளவாறு
உணர்ந்து ஒழுக்கங்கொள்ளும் வகையிலே அமைந்திருப்பதே பொதுமையறமாகிய செந்தண்ணெறி எனப்படும் ‘சுத்த சன்மார்க்கம்.’
இவ்வகையில்,
தமிழ்கூறு நல்லுலகம், வாழையடி
வாழையென வந்த திருக்கூட்ட
மரபினர் வழியாகப் பெற்றுள்ள அருளியற் பேறுகளை ஓர் ஒப்பியல்
நோக்கில், வரலாற்று முறைசார்ந்த மெய்யறிவியல் நெறிக்குத்
தக, ஒப்பராவிக் கொண்டுவாழ்ந்த வழிமுறையினையும், அதில் கண்ட திரிபுகளையும்,
இதுவரையில் ஒருவாறு என்னளவில் இழைத்துணர்ந்த நிலையிலே, என்னொத்த எல்லோர்க்கும்
பொதுவில் வைத்தேன்.
உண்டில்லை என்னும்
உணர்வை அறிந்தக்கால்
கண்டில்லை ஆகும்
சிவம் -
ஔவைக் குறள் 122
நல்லாங்கு
ஆய்ந்து; பொல்லாங்கு நீங்கி; வல்லாங்கு கொண்டு; வாழ்வாங்கு வாழ்வதற்கு,
நமையெல்லாம் சமத்தில்வைத்த வாழ்முதலாகிய ஆளுடைய ஆதிபகவனை அகத்தில் வழுத்தி
அமைகின்றேன்.
இல்லை உண்டென்று எவர்பக்கம் ஆயினும்
சொல்ல வோஅறி யாத தொழும்பன்யான்
செல்ல வேறொரு திக்குஅறி யேன்எலாம்
வல்ல நீஎனை வாழ்விக்க வேண்டுமே!
-
தாயுமானவர் திருப்பாடல்கள்
பொன்னைமாதரை :14
No comments:
Post a Comment