Thursday, July 18, 2013



தால் தாலி - தாளி
தால் - தாலம்

      தாலம் என்பது என்பது பனைமரத்தைக் குறிக்கின்ற தமிழ்ச்சொல். தால் என்பது அகலம், விரிவு என்று பொருள்தரும். அகன்ற விசிறிபோன்ற ஓலையமைப்புக் கொண்டதால் அம்மரத்திற்கு சினையாகுபெயராகத் தாலம் என்ற சொல் அமைந்தது.

      ஆலவட்டம் என்பதைப் போலத் தாலவட்டம் என்பது பனையோலையால் அமையப்பெற்ற விசிறி வகைக்குரிய சிறப்புப்பெயர். தால் + > தாலி என்று வந்துள்ளது. அதுவே இனவகைத் திரிபாகத் தாளி என்ற வடிவிலும் இருக்கிறது. அதே போக்கில் தாலம் > தாளம் என்றும் திரிந்துள்ளது. தாளிப்பனை என்பது கூந்தற்பனை.

      தாலி என்னும் மங்கல அணியும் தொல்பழைமையில் பனையோலையால் அமைந்திருந்ததாகத் தெரிகிறது. அதனைத் தாலிக்கொழுந்து (பனைவெண்குருத்தால் இயன்ற அணி), தாலிக்கொடி போன்ற சொற்கள் உணரத்துணையாகின்றன.

      தாலம் என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டு வடமொழி நிரம்ப இருபிறப்பிச் சொற்களைப் படைத்துக்கொண்டுள்ளது. அவை வருமாறு:-

      தாலகி           =     பனங்கள்
      தாலகேதன  =     பனைக்கொடியோன் (பலராமன்)
      தாலத்துவசன்     =     பனைக்கொடியோன்
      தாலபத்திரம் =     பனையோலை
      தாலமூலி    =     நிலப்பனை, தரைப்பனைச்செடி.
      தாலாங்கன்  =     வாலியோன் (பலராமன்)
           
காகம், தாலி என்னும் இருவேறு தமிழ்ச்சொற்களையும் கொண்டதோர் புகழ்பெற்ற வடமொழி உவமைத் தொடரையும் காணுங்கள். காகதாலிய நியாயம் அல்லது காகதாலியம் அல்லது காகதாளீயம் என்பது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தாற்போல என்னும் உவமைத்தொடரின் சுருக்கமும் மொழியாக்கமுமாகும்.


தால்

      தால் என்பது நாக்கு என்று பொருள்தரும் தமிழ்ச்சொல். நாவை அசைத்தல் அல்லது ஆட்டலால் எழும் ஒலியடுக்குக்குத் தால் + ஆட்டு > தாலாட்டு என்று பெயர் வந்த்தெனப் பாவாணர் முதலாக உள்ள அறிஞர் யாவரும் ஒத்துக் கூறுவர்.

      அகலமாயும் தட்டையாயும் வாய்க்குள் அடங்கியதாக இருக்கின்ற உறுப்பமைப்புக்குத் தால் என்ற பெயர் வந்துள்ளது. தாலாப்பு என்பது அகன்ற பெரிய குளம், தடாகம். தாலம் என்பது தட்டம், தட்டையான அகங்கை, தட்டையாய் விரிந்துள்ள நிலம், தட்டையாய் விரிந்திருக்கும் யானைச் செவி, வட்டில், அகலிடம், கூந்தற்குமுகு என்றெல்லாம் பொருள்கொடுக்கிறது.

      தால் என்ற சொல்லே நாக்கையும் மேற்படிக் காரணதால் குறிக்கின்றது. தால் என்பதைப் போலவே தாலம் என்ற சொல்லும் நாக்கு என்றே பொருள்தருகிறது. தீத்தேவன் ஆகிய நெருப்பு நன்கு சுடர்விரித்து எரியும்போது ஏழுமுனைகளாகத் தோற்றம் தருவதுபற்றித் தாலமேழுடையோன் என்று தமிழ்த்தொன்ம நூல்களில் வழக்கு ஏற்பட்டுள்ளது.



புளகு – புளகம் / புளாகம்

      நெல் விளைந்து அறுவடைசெய்து பெறுகின்ற நெல்மணியிலிருந்து உமிநீக்கிப் பெறப்படுவது அரிசி. அந்த அரிசியை உலையிலிட்டுச் சோறாக்குதல் என்றொரு செயல் நடந்த பிறகே சோறு என்ற ஒன்றை உண்ணமுடியும் என்பது உலகறிந்த பொதுச்செய்தி.

      நெல், அரிசி என்பவை சமைக்கப்பெறாத நிலையில் உள்ள பெயர்கள். அரிசிகூட ஒரு பொதுப்பெயரே. ஏல அரிசி என்பது போல பல அரிசிவகைகள் கூறப்படுவது வழக்கு.

      அரிசியைக் கொண்டுதான் சோறு ஆக்கப்படுகிறது. சோறு என்பது வெந்து மலர்ந்த பருக்கை. அரிசி தன்நிலையில் பருத்துள்ளதுபருக்கை. அதனை அவிழ் என்றும் கூறுவர். ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது பழமொழி. ஒருபானை சோற்றுக்கு ஓர் அவிழைப் பார்ப்பதுபோல் ஒரு செயலின் முழுமையை ஒருதிறத்தால் ஆய்ந்துகொள்வதற்கு இந்த உவமைத்தொடர் ஏற்பட்டது.

      அவிழ், பருக்கை என்னும் இரண்டுமே ஒரே பொருள்கொண்ட சொற்கள். அரிசி வெந்து; அது முன்னர் இருந்த திண்ணிய நிலையிலிருந்து அவிழ்ந்து-மலர்ந்து மென்பதமாக இருப்பதுபற்றி இவ்வாறு பெயர் ஏற்பட்டது. அவிழ் அல்லது பருக்கை என்பதன் நேர்பெயர்ப்பு அல்லது மற்றோர் நேராக்கம்தான் புலாகம் என்ற சொல்லாகும்.

      இதுவும் புல் என்னும் பருத்தல்வினைக் கருத்துள்ள தமிழ்வேர் வடிவிலிருந்து வந்த சொல்லேயாகும். புல்லரித்தல் என்பது சிலிர்த்தல். புளகு அல்லது புளகம் என்பது புடைப்புபருப்பம். அவை மனமலர்ச்சி ஆகிய மகிழ்ச்சியைக் குறிப்பவை.

புளகம் / புளாகம் அல்லது புளகிதம் அல்லது புளகாங்கிதம் என்பதும் சிலிர்த்தல். இவை யாவுமே பருத்தல்வினை சார்ந்த மலர்தல் என்னும் கருத்துச்சார்ப்பு உள்ள சொற்கள். புல் > புள் என இருவடிவு கொண்டதாக இவ்வேர் விரிந்துள்ளது. புளாகம் என்பது வெந்த சோற்றுத்திரளை.

இவை மலர்தல் – அவிழ்தல் – விரிதல் (பருத்தல்) என்னும் தமிழ்மூலக் கருத்தியலின் அச்சு மாறாமல் அப்படியே மற்றொரு வார்ப்பாக வார்க்கப்பட்டுள்ளன. புல் என்ற அடியிலிருந்து பருக்கை எனும் பொருள்கொண்டதாகப் புறப்பட்டுள்ள சார்புச்சொல்லே புலாகம்/புளாகம் என்ற வடதமிழச் சொல்லும் ஆகும்.

அடுத்து, தாழி என்னும் தமிழ்ச்சொல்லுக்குச் சட்டி என்பதும் ஒருபொருள். வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தாற் போல என்பது ஓர் உவமைத்தொடர். இதில், தாழி என்பதன் இயல்பான ஆட்சியைக் காண்க.

மிக மூத்து உயிர்நீப்பவர்களை உள்ளிட்டுப் புதைக்கும் தாழி வகையை முதுமக்கள் தாழி என்பது மீதொல்பழைய வழக்கு. வடமொழியில், கரம் இல்லாத காரணத்தால் அது கரமாக திரிக்கப்பட்ட நிலையில் தாழி > தாலி என்று அம் மொழியுட் புகுந்துள்ளது. இதனைக் கொண்டு வடநூலோர் ‘தாலீபுலாக நியாயம்’ என்றோர் உவமைத் தொடரை உருவாக்கியுள்ளனர்.

இதுவும் செந்நெல் கண்டு முதனமுதலில் சோறு உண்டு உலகுக்கும் அளித்த புகழ்படைத்த பழந்தமிழக் கொடையே. அரிசி என்னும் தமிழ்ச்சொல் உலகம் முழுவதும் போனது போல, அரிசியோடு தொடர்புபட்ட பல சொற்களும் இவ்வாறே பரவியுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மேற்சொன்ன பருக்கை எனும் பொருள்கொண்ட புலாகம் என்பதும் என்க.

உழவுத் தொழிலே பாவத் தொழில் என்னும் ஆரியப் பூசாரியர் இச்சொல்லைப் படைப்பதற்கு எந்த நயன்மையும் இல்லை. இது உழவுத்தொழில் செய்திருந்த உழவர்பெருமக்கள் படைத்தளித்த வேளாண்மை சார்ந்த உணவியற் கலைச்சொல். இதனை அப்படியே வடமொழியாளரும் இரவல்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment