Thursday, July 18, 2013



அறிவறிதலில்
     கருத்து வேற்றுமை



‘‘ கருத்து வேற்றுமை இன்றியமையாதது. அதை எழுப்புவது இயற்கை. கருத்து வேற்றுமை இயற்கையின்பாற் பட்டது; அதற்கு மாறுபட்டதன்று. அவ் வேற்றுமை அறிவை விளக்கும்; வாழ்க்கையை வளர்க்கும்; அமைதியை நிலைபெறுத்தும்; சமூகத்தைப் பெருக்கும்; நாட்டைப் பேணும், உலகை ஓம்பும்.

     ஒரு பொருளைப் பற்றி அறிஞர் கூட்டங்களில் வாதப்போர் நிகழ்கிறது. அங்கே கருத்து வேற்றுமை தாண்டவம் புரிகிறது. அத் தாண்டவம் உண்மையை விளக்கிக்கொண்டே போகும். உண்மை விளக்கத்துக்குக் கருத்து வேற்றுமை இன்றியமையாதது. உண்மை விளங்க விளங்க அமைதி நிலைபெறுதல் இயல்பு. ஆகவே, அமைதிக்குக் கருத்து வேற்றுமை துணைசெய்வது கருதற்பாலது. ’’
                             - பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி, திரு.வி.க.

     முரண்மையில் உலகம் இயக்கமுறுகிறது. அஃது அறிவியலும் ஆய்ந்தறிந்து உடன்பட்டுள்ள இயற்கை இயங்கியல் உண்மை. கருத்தும் அவ்வாறே முரண்மையில் இயங்கிவருகிறது. அந்த முரண்மை இல்லாவிட்டால் வாழ்க்கை என்னும் இயக்கமில்லை. அவை ஒன்றை ஒன்று பற்றி – ஈர்த்து உந்துகின்றன. அந்த உந்துதல் நிலையில்தான் இயக்கம் உண்டாகிறது.

ஆற்றலுக்கு ஓர் எதிராற்றல் இருக்கும். அதேபோல ஓர் இணையாற்றலும் இருக்கும். இயக்கத்துக்கும் எதிரியக்கம், இணையியக்கம் என்பவை உள. இப்படியே அது பலபட விரிந்துபோகும் இயல்புடையது. இவை தப்பாமல் இயங்குகின்ற இயற்கை ஒழுங்குத்தான் ஊழ் என்று பெயர்.

     உண்மையில், இல்மதம் ஆகிய இறைமறுப்பு மதமும், உள்மதம் ஆகிய இறையேற்பு மதமும், இவ்வாறு ஒன்றைநோக்கிய முரண்போக்குகளே. அவை இரண்டையுமே உள்வாங்கி உணர்ந்து உணர்ந்து மேற்சென்று மேவுவதே மெய்யறிவு – மெய்யுணர்வாக இருப்பதை அறிவறிய வல்ல எவரும் அறியலாகும். அவை ஒரு நாணயத்தின் இருபக்கம் போன்ற அமைப்புடையவை.

     கருத்து வேறுபடுதல் என்பதில் சிக்கலில்லை; ஆனால் கருத்து மாறுபடுதல் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. கருத்துக்கு எதிர்கருத்து இருக்கும் – இருக்கிறது. அவை ஒன்றை ஒன்று உந்தி உந்தி தெளிவுக்கு இட்டுச்சென்று சமன்மையில் வைக்கவேண்டுமேயன்றி, அழிவில் வைப்பதாகாது. இந்த நிலையில் இருக்கும் வரைக்கும் அங்கே நிகழ்வுறுவது அறிவுநிலை - அறிவறியும் ஒளிநிலை. அப்படி அல்லாக்கால், அங்கே நிகழ்வுறுவது வெறிநிலை – அறிவறியா இருட்டுநிலை.

மக்கள் உள்ளிட்ட உயிர்கள் என்பவை, ஒன்றை ஒன்று பொறுத்தாற்றி; ஏற்று இயங்குவது கருத்து வேற்றுமை அதாவது கருத்து வேறுபாடு. அப்படியல்லாமல், ஒன்றை ஒன்று ஏற்றுக்கொள்ள முடியாமல், அடியோடு வெறுத்து ஒறுத்துக்கொள்ளும் நிலையில் வருவது கருத்து மாறுபாடு.

     கருத்துரிமை என்பது எல்லார்க்கும் உள்ளது, உரியது. ஆனால், அதற்கு என்று வரைமுறைகளும் உள. காய்தல் உவத்தல் இல்லாத நிலையில் கருத்தாடல் நிகழும்போது, உண்மைகள் பக்குவமாக வெளிப்படும், தெளிவுதரும். காய்தல் உவத்தல் உடையதாகக் கருத்தாடல் நிகழும்போது, அங்கே பொல்லாங்கு சூழ்கின்ற வகையில் ஆணவம் தலைகொழுத்து ஆடும்.

     அறிவார்ந்த கருத்தாடலில் மிக வல்லமையானவர்கள் மறைமலையடிகள், தமிழ்முனிவர் திரு. வி. கலியாணசுந்தரனார், ... போன்ற பெருமக்கள் ஆவர். அவர்கள், அறம் பிறழாமல் கருத்துக்குக் கருத்து வைத்து வழக்காடுதல் - வாதாடுதல் என்ற நிலையில் கருத்தாடுபவர்கள். மறுக்கப் புகும் கருத்தைக் குறித்துப் பேசுவரே அன்றி, மறுத்தவர் மீது கறுத்து அவருக்கு இன்னாசெய்ய எண்ணங்கொள்ள மாட்டார்கள்.

     இத்தகைய உயரிய பண்புநலனுக்குப் பற்பல பெருநூல்களுக்கு உரைவிளக்கம் வரைந்துள்ள உரையாசிரியர்களாகிய பேராசிரியர், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், ... முதலான பெருமக்களும் இலக்கியமாகவும் இலக்கணமாகவும் இலங்கியுள்ளனர். இவை நன்கு உணர்ந்து பின்பற்றுதற்குரிய மாண்பார்ந்த மரபுகள். நூல்வழக்கிற்கு மட்டுமன்று, மற்று எவ்வகை எத்துறை சார்ந்த நிலைகளுக்கும் இப் பண்புதான் ‘ஒத்ததறிந்து உயிர்வாழ்தல்’ என்னும் இலக்கணத்தை ஈன்றளிக்கும் இலக்கியமாக இருக்கிறது.

     உண்மையை நாடும் உள்ளமிருந்தால், ஒருபோதும் பொல்லாங்குத்தனம், போக்கிலித்தனம், போலித்தனம், ... என ஒன்றுமே தோன்றாது. தன்னை மிகைத்தலாகிய ஆணவப்போக்கு மிக்கிருந்தால், பிறரை இழித்துக் கூறுதலும், பழித்துக் கூறுதலும் மட்டுமின்றி, ஒழித்துப்போடுதற்கும் உள்ளத்தில் கள்ளமும் கபடும் கழிபெருஞ்சினமும் வகைதொகை தெரியாமல், பகைதகை புரியாமல் குள்ளநரித்தனத்தைத் தூண்டிவிடும். கருத்து வேற்றுமை கொள்பவர்களிடத்தில் ஆள்வெறுப்பு இல்லை. கருத்து மாறுபாடு கொள்பவர்களிடத்தில் ஆள்வெறுப்பும், கீழறுப்பும், ஏன் கருவறுப்புக்கூட இருக்கும்.

     எந்த அடிப்படையில் சிந்தித்து இருந்தாலும், அதனால் கூறப்படுகின்ற கருத்துகள் அல்லது செந்துணிபுகள் (சித்தாந்தங்கள்) எப்படிப்பட்டனவாக இருந்தாலும், அவற்றில் பொறையுடைமை என்ற பண்பு உயிர்த்து நிற்க வேண்டும். சொற்பொறை, கருத்துப்பொறை, செயற்பொறை என்று வந்து அவை சமயப்பொறை என்பதாகவும் சிறந்துநிற்க வேண்டும்.

சமயங்கடந்த பொதுமை ஆகிய செந்தண்மை நிலையில் அடங்கி நிற்பனவாக அவை இருந்தால் அன்றி, அவற்றால் அவை குறிப்பிட்டுக் கொள்கின்ற – தம் கொள்கை நடப்புகளாக அறிவித்திருக்கின்ற நன்மை – நலம் – நலப்பாடு என்ற எதுவுமே – ஒன்றுகூட நடைபெறமாட்டாது. அவை தாமாகவே – அக் கொள்கைகளுக்கு உரியவர்கள் என்று உரிமைபாராட்டிக் கொள்கின்ற அவர்களாலேயே அழிவெய்தும் – அழிந்துவிடும்.

     இதனைப் பலவேளைகளில் மாந்த குலம் மறந்துவிடுகின்ற நிலையில்தான், உலகத்தில் கடுமைகளும், கொடுமைகளும், மடமைகளும், அடிமைத்தனங்களும், அழிச்சாட்டியங்களும் வெறியாட்டம் நடத்த நேர்கின்றது. இந்த அறியாமைக் கசடு பற்றிக்கொள்கின்ற நிலைகளிலெல்லாம் உண்மையான அன்பும் அமைதியும் வரப்பெறுவதில்லை. அத்தகை நிலையிலே அம் மாந்தத் திரள் பற்றிக் கொண்டிருக்கின்ற நம்பும் நம்பாச் சமயமதங்களின் பேரால் பெரிதும் எடுத்து ஓதப்பெற்ற அன்புக் கூறுகளும் அறக்கூறுகளும் வெளிப்பட மாட்டாமல் செயலற்று ஒடுங்கிப்போய்விடுகின்றன.

     இன்று உலக ஒன்றியம் (ஐக்கிய நாட்டுச் சபை) என்ற ஒன்று உலகத்தில் உருவான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால்கூட, மேற்சொன்ன உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் போன்ற போர்கள் உண்டான நிலையில் ஏற்பட்டுவிட்ட சொல்லொணாத அவலங்களை, எழுதொணாத இடர்களைப் பட்டறிவாகப் பெற்ற உலகமாந்தருள் அறிவும் அன்பும் சிறந்துநின்ற தக்கார் உலக ஒன்றியம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்து; உலக அமைதியைக் கட்டிக்காக்க வேண்டிய கடப்பாட்டினை நன்கு வலியுறுத்தி வைத்தார்கள்.

     அங்கும் அதற்கு இடையூறு உண்டாகும் வண்ணம், எண்ணத்தில் நலமில்லாத வல்லாண்மைப் போக்குடையவர்கள் நாட்டுத் தலைவர்களாக உருவெடுக்கின்ற காலங்களில், உலகம் அமைதியை இழக்கும் நிலை உண்டாகிறது.

இதனைத் தனிப்பட்ட நிலையில் சிந்திக்கும்போது, ஏன் என்று நன்றாக அறிந்திருந்தும்கூட, நெஞ்சார உணர்ந்திருந்தும் நடுவுநிலையில் தவறுகின்ற – தப்புகின்ற தன்னல வெறிபடைத்த தனியாள்களின் பெரும்பான்மைத் திரட்சியாகிய தருக்குணர்வும் கிறுக்குணர்வும், ஏதும் அறியாத ஏழை எளியவர்களை ஆற்றொணா அல்லல்களுக்கு ஆட்படுத்துகின்றன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறுமாப் போல, ‘குடம்பால் கொள்ளையடித்துக் குவளைப்பால் கொடை வார்த்து’ என்பதாக அவர்கள் வேறு வகையில் தம் கொடுமைத்தனங்களை மூடிமறைத்துக் கொள்கின்றனர்.

     இக்காலக் கல்வி முறையில், பலதிறப்பட்டத் திறமான சிந்தனை முறைகள் வகுத்துக் கூறப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஆக்கச் சிந்தனை, ஆய்வுச் சிந்தனை என்பவை மிக விதப்பாக நம் நாட்டிலும் எடுத்துப் பேசப்படுகின்றன.

     அவற்றின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் எனக் கல்வி புகட்டப்பட்டு வருகிறது. பன்னருங் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து நாளும் நாளும் இறைநம்பிக்கை, இறைவழிநிற்றல் என்னும் இரண்டு பெரிய அடிப்படையில் மிக அருமையாக வகுக்கப்பட்டு எல்லார்க்கும் இலவயக் கல்வி வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட உயர்நிலைகளில் மட்டுமே கட்டணக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

     உண்மையாகவே, கற்றுவல்ல சான்றோர்கள் தலைமையில் ‘ஒருமைப்பாடு’ என்பதையே அக் கல்வியின் முடிநிலைப் பொதுமையாக்கமாக வைத்திருப்பது மிகமிக நேர்த்தியாக இருக்கிறது. இதனை நன்றாக உள்வாங்கிய வண்ணமாக நாளும் நாளும் அதனை முதல்நினைவாக நினைந்த நிலையில்தான் மற்று எந்த நினைவும் செயலும் நிகழவேண்டும் – நிகழ்த்த வேண்டும்.

இப்படித் தன் நாட்டிற்குள் ஒருமைப்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு வளர்க்கப்பெற்ற மாந்தர் தம் நாட்டுக்கு வெளியேயும் அதே ஒருமைப்பாட்டைத்தான் விரும்புவர், பேணுவர், காப்பர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

     எவ்வளவு கற்றால்தான் என்ன? அந்தக் கல்வியால் வந்த அறிவின் ஆக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் திருவள்ளுவப் பெருமானார் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

     தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநில
        மன்னுயிர்க் கெல்லாம் இனிது - தமிழ்மறை: அதி. 7 : குறள் 78

        அறிவினால் ஆகுவது உண்டோ தந்நோய்போல்
        பிறிதின்நோய் போற்றாக் கடை - தமிழ்மறை: அதி. 32: குறள் 315

எனவும் அவர் விடையாகக் கூறியும் இருக்கிறார்; வினாவாகக் கேட்டும் இருக்கிறார்.

     மேலும், கருத்துணர்தல் – அறிவறிதல் என்னும் நிலையில்கூட அவர் நமக்கு நெறிகாட்டி இருக்கின்றார். அதாவது அறிவுடைமை – அறிவு என்பது என்னவாக இருக்க முடியும் என்பதற்கு அதனை வெளிப்படுத்தும் அல்லது வெளிப்படக் கூறுகின்ற நிலையில் எளிமையாக – எளிதாகப் புரியும் வகையில் பிறர்க்கு முன்வைக்க வேண்டும் எனவும், அதே வேளையில், பிறர் அவ்வாறு எளிமையாக – எளிதாக சொல்ல முடியாத நிலையில் கேட்கப்பெறும் கருத்து எதுவாக இருந்தாலும் அதனுடைய உள்நின்ற நுட்பம் என்ன என்று ஆழ்ந்து ஆய்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

     எண்பொருள வாகச்செலச் சொல்லித் தாம்பிறர்வாய்
        நுண்பொருள் காண்பது அறிவுதமிழ்மறை:அதி. 43 : குறள் 424

     இதிலிருந்து அறியப்படுவது யாதெனில், ஒருவர் தன்னிலையிலிருந்து சிந்திக்கும்போது பிறர்க்கு இடர்தராத வகையில் எதையும் உணரும்படியாகக் கொண்டுசேர்க்க வேண்டிய கடப்பாட்டை வலியுறுத்துகின்றார். அதேவேளையில், பிறரால் அவ்வாறு உணர்த்த முடியாத ஒரு நிலையில் வைத்துப் பார்க்கையில், அங்கே செயத்தக்க செயலாக, நாம் நம் நிலையில் சிறிது மேல்முயற்சி எடுத்து, பிறர் நமக்கு உணர்த்த வரும் கருத்து யாது – அதனுடைய நுட்பமான தன்மை யாது என்பதைக் கொஞ்சம் அன்று, நன்றாக – நனிநன்றாக ஆராய்ந்து உணர முயல வேண்டும் என்கின்றார்.

     எல்லோரும், பொதுவாக என்ன சொல்வார்கள்? அவர்கள் சரியில்லை, இவர்கள் சரியில்லை என்று பிறர்மேல்தான் குறைகூறுவர். ஆனால், திருவள்ளுவர் அதற்கு இடம்தராமல், ஏன் முதலில் நீங்களே பிறர்நிலையில் அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை அறிந்து உணர்ந்துகொள்ள முயற்சிகொள்ளக் கூடாது? என்று நம் சிந்தனையைத் தூண்டுகிறார்.

பிறருக்கு நீங்கள் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். அது பாதி வெற்றி, ஆக்கம். மற்றொரு பாதி பிறரிடத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிய முயலுவதிலும் தெளிவதிலும்தான் இருக்கிறது. எனவே, பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவுடைமையாகும். பிறர்வாய் என்பது பிறரிடத்து என்று பொருள்படும். அவர்கள் வாய்திறந்து சொன்னாலும் சரி, வாய்திறந்து சொல்லாமல் குறிப்பால் உணர்த்தினாலும் சரி, குறிப்பறிவது நம் பொறுப்பேயாகும்.

அதுவும், சொல்லுவதை வெல்லுஞ்சொல் கொண்டதாகச் சொல்லாமல், செல்லும்சொல் (செலச்சொல்லுதல்) கொண்டதாகச் சொல்லவேண்டும் என்று இவ்விடத்தில் மிகப் பொறுப்பாக நம்மை ஆற்றுப்படுத்துகின்ற அவர்தம் உலகநலக் கடப்பாட்டுணர்வினை எல்லோருமே என்றைக்குமே எப்போதுமே எண்ணி நடந்து கொள்வது இன்றியமையாதது.

வெல்லுஞ்சொல் என்ற உணர்வில் நின்றுசொல்லுகையில், ஓரொருகால் எடுத்த நோக்க நிறைவேற்றத்தைவிடத் தனியாளின் வென்றிப்பாடே பெரிதாக எண்ணப்பட்டுவிடலாம். அதனால், சொல்லவந்த உண்மை விளங்குதற்கு மாறாக  பின்னப்பட்டுவிடலாம். அது தனியாளுக்கு வெற்றியாகவும் ஒட்டுமொத்த மாந்தருக்கு அழிவாகவும் ஆகிவிடலாம். ஆனால், செல்லுஞ்சொல் அறிந்து செலச்சொன்னால் அது கண்டிப்பாக இருவழி உறவினையும் ஆக்கத்தினையும்  ஆக்கித்தரும் என்பதற்கு ஐயமில்லை!

எப்படியெல்லாம் பொறுப்பாக இருந்து திருவள்ளுவப் பெருமானார் நம்மைப் பொறுப்புணரச் செய்திருக்கின்றார். அடடா! என்னே! என்னே! அவர்தம் அருளுடைமை சிவணிய அறிவுடைமை! வணங்குகின்றோம் பெரும! தாங்கள் வகுத்துக்காட்டிய வழியில் உலகநலன் பேணுதற்குக் கடப்பாடு உணர்ந்தோம்! உற்றுழி பணிசெய்வோம்!

எத்துணைப் பெரிய உலகநலன் நாடும் தன்மையினை – கடப்பாட்டினை நமக்கு உணர்த்தியுள்ளார். நம்மிடையே இதனை இவ்வாறு உணர்பவர்கள் எத்தனை பேர்? இந்த மனத்தெளிவோடு இனிவரும் கருத்தியல் நிலைகளையும் தொடர்ந்து ஆராய்ந்துகொள்வோமாக.

No comments:

Post a Comment