கடந்த 1800
ஆண்டுக்கு முன்புகூட
ஆரியர்களுக்குத் தமிழர்தம் அரசாண்மை
மெய்ப்பிக்கப்பட்டது
கழக
(சங்க) இலக்கியப் பதிவுகள் மட்டுமின்றி, கழகம் மருவிய காலத்திய சிலப்பதிகாரம் போன்ற
முத்தமிழ வரலாற்று இலக்கியப் பதிவுகள் கூட, மிகத் தெளிவாக மிகப் பல இடங்களில் ஆரிய அரசர், அரிய மன்னர் என்று தமிழ அரசர் அல்லாத வடபுலத்து அரச வழியினரை வேறுபிரித்துக்
குறிப்பிடுகின்றது.
தமிழ்கூறு நல்லுலகத்தின் முடிசூடிய மன்னர்களான
மூவேந்தரும் இமய மலையில் தம் ஆளுகைக்கு உட்பட்டுள்ள எல்லைகளின் மீது குறிப்பாக
மலைகளின் மீது தமது அரசாட்சி இலச்சினைகளைப் பொறித்த அருஞ்செயலை, சிலப்பதிகாரக்
காலத்தைச் சேர்ந்த வடநாட்டுப் ஆரிய மன்னர்களாகிய பாலகுமரன் மைந்தர்களும் கனகன், விசயன் போன்றவர்களும் ஒரு மணத்தெரிவு (சுயம்வரம்) நிகழ்ச்சியிலே பிற மன்னர்களிடத்தில் இகழ்ந்து பேசினர்.
அந்தச் செய்தியை இமயப் பகுதிகளில் தவம்புரிந்து
வந்த தமிழகத்தைச் சேர்ந்த சில முனிவர்கள் வழியாகத் தெரிந்துகொண்ட நிலையில்கூட, அவ்
வடவர்களால் இகழப்பட்டது ‘மூவேந்தர்
ஆற்றல்’ என்றுகூட சொல்லாமல், அதனை
‘அருந்தமிழ் ஆற்றல்’ என்று
ஒன்றாக – ஒரே முழுமையாக ஒருசேரவைத்து இளங்கோவடிகள், மாட்சிமை தங்கிய பெரும்பேரரசர் சேரன் செங்குட்டுவர் கூற்றாக வெளிப்படுத்தியுள்ள பாங்கினைப் பாருங்கள்.
எப்படிப்பட்ட ஒருமைத்தமிழ் தேசியம் அவர்தம் ‘அருந்தமிழ் ஆற்றல்’ என்ற திருத்தொடரில் வீறுகொண்டு வெளிப்படுகின்றது
பாருங்கள்! இளங்கோவடிகளிடத்தில் இலக்கியம் பார்த்தவர்கள் அவர் தமிழப்பொருளாகக்
கட்டிக் காத்தளித்த அரசியல் பெருநெறியைப் பார்க்கத் தவறிவிட்டனர். என்னே நம்
பின்னைய ஆட்சியாளர்களின் தமிழறியாப் பேதைமை!
தொடர்ந்து, அறச்சினம் பொங்கிச் செருமுகின்ற அந்த வேளையில் கூட,
நெஞ்சினிலே எந்த நினைவு முதன்மை நினைவாக மேலோங்கி நிற்கின்றது என்பதை கூர்ந்து ஆராய்ந்து
பாருங்கள்! உண்மை தெரியும்! அது தமிழ்-தமிழ நினைவு அல்லவா? பெரும்பேரரசர் சேரன் செங்குட்டுவர் சமயப் பொறையுணர்வு மிகவுடையவர். அவர் சிவபெருமானையும் திருமாலையும் ஒப்ப மதித்து வணங்கிடும்
சமயநெறியுடையவர் – சமயப்பொதுமைப் பண்பினைத் தமிழினுள் வைத்துத் தன்னையுணர்ந்து
வாழ்ந்தவர் - மக்களை வாழ்வாங்கு வாழ்வித்தவர்.
மூன்றாந் தமிழ்க்கழகத்தைச் சேர்ந்த ‘பதினெண்
மேல்கணக்கு’ நூல்களாகிய பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும், அறத்திறமும் மறத்திறமும் நிகர்படச் சிறந்துநின்ற தென்நாவலகத்துத்
தமிழ மாவேந்தர்களுக்கு, தமது மூலத் தமிழ மரபுறவு மறந்து வேறுபட்டுவிட்ட வடபுலத்து
அரசர்கள் அஞ்சியும் அடங்கியும் நடந்து
வந்துள்ள வரலாற்று வழிமுறையினைக் கூறுகின்றன. புறநானூற்றைப் படித்தவர்களுக்கு இது
– இந்தப் பெருந்தமிழ அரசிய மாட்சிமை கண்டிப்பகாத் தெரியும் - புரியும். சும்மா மேம்போக்காகத்
படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பட்டப் படிப்புத் தேர்வுக்காகப்
படித்து மனப்பாடம் செய்து; பின்னர் உடனே மறந்துவிட்டவர்களுக்கும் இது
மறந்துபோயிருக்கும்.
எனவே, உணர்ந்திருப்பவர்களாவது இவற்றைக் கூர்ந்து
பார்த்து; தமிழருக்கு நாவலந்தேயம் முழுவதும் இருந்து வந்துள்ள அனைத்துத்துறைத்
தனித்தலைமை – தனித்தகைமை
என்பவற்றின் உண்மையினை நிரந்து உணர வேண்டும், பிறருக்கும் உணர்த்த வேண்டும்.
அடுத்து, இதுவரை கூறிவந்தபடி, ஒரு நீண்ட காலப்
பெரும்பரப்பில், ஆதிமுதல் தமிழ்மொழியின் அடிப்படையில் இயங்கிய தமிழ்கூறு
நல்லுலகம் என்பது காலப் போக்கில்,
உலகத்தின் தென்பாதி மண்டிலத்தில் இருந்த குமரிநாடும் பிறவும் என அமைந்திருந்த தன்
நில எல்லைகளைக் கடல்கோள்களுக்கு இழந்துவந்த நிலையில், அந்தக் குமரிப்
பெருநாட்டினின்றும் வடக்காகவும் மேற்காகவும் கிழக்காகவும் பல்வேறு காலங்களில்
பல்வேறு உள்முக வெளிமுகக் காரணங்களால் மக்கள் புலம்பெயர்ந்து போகும் நிலைமையும்
தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.
இவ்வாறாகப் புலம்பெயர்ந்த தமிழ வழியினர் அவரவரும் சென்ற இடத்திற்குத் தகத் தம் மூலத்
தாயகத்தின் வழக்காறுகளைத் திருத்தியும் விடுத்தும் புதிதாக அமைத்தும்
கொள்வாராயினர். இந்த நிலையில், அவர்கள் தமது மூலத் தாயக உறவுகளோடு உறவு பிரிந்தவர்களாகினர்
– அதனால் அவர்களின் வழிவந்த பின்னைய தலைமுறைகள் மூலப் பெருந்தமிழ வாழ்வியல் வழக்காறுகளிலும் வேறுபடவும் செய்தனர். முற்கூறிவந்தபடி
அந்த வேறுபாடு நாவலந்தேயத்திலும் ஏற்பட்டுவிட்டது.
No comments:
Post a Comment