Saturday, July 13, 2013



தமிழ மக்கள் புலப்பெயர்ச்சி அலையின்
கடைசி வடிவமே இமயம் வரையுள்ள மொழியினக் கோலங்கள்

இந்தப் புலம்பெயர்தல் அலையின் கடைசி வடிவமே இமயம் வரையிலும் உள்ள அத்தனை தமிழிய மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்க. ஆளம் என்ற இடப்பெயரீறு தெற்கில் மலையாளம் என்பதிலும், வடக்கில் நேப்பாளம் என்பதிலும், வடகிழக்கில் வங்காளம் என்பதிலும் பதிவுற்றுக் கிடப்பதை ஓர்ந்து பாருங்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே 612 ஊர்ப்பெயர்கள் தமிழ் என்ற சொல்லைத் தலைச்சொல்லாகக் கொண்டு தொடங்குகின்றன என்கிறார் இந்திய நடுவண் அரசுபணியில் பல வட மாநிலங்களில் இருந்த உயர்திரு ஆர். பாலகிருட்டிணன் அவர்கள்.

இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான உயர்திரு ஆர். பாலகிருட்டிணன் அவர்கள், தமது ‘Tamil A Toponymical Probe’ எனும் ஊர்ப்பெயராய்வு நூலின் மூலம், தமிழர்கள் இந்தியாவெங்கும் பரவி இருந்ததைச் சான்றுபட வெளிப்படுத்தியுள்ளார். அன்றாட வழக்கு மொழியாக இருந்து காலவோட்டத்தில் உருத்திரிந்துவிட்ட நிலையிலே தமிழ்மொழி இன்றளவும் அந்த வடக்கில் தனது அடையாளத்தை ஆங்காங்கே நிலைசெய்து வைத்துள்ளது. இதற்குச் சான்றாகவே மேற்படி ஊர்ப்பெயர்கள் அனைத்தும் சான்று சொலிலிநிற்கின்றன.    

ஆந்திரா (29), அருணாச்சலப் பிரதேசம் (11), அசாம் (38), பீகார் (53), கூச்சரம் (5), கோவா (1), அரியானா (3), இமாச்சலப் பிரதேசம் (34), கர்நாடகா (24), மகாராட்டிரா (120), மேகாலயா (5), மணிப்பூர் (14), மத்தியப் பிரதேசம் (60), நாகலாந்து (4), ஓரிசா (84), பஞ்சாப் (4), ராஜஸ்தான் (26), தமிழ்நாடு (10), உத்தரப் பிரதேசம் (64), மேற்கு வங்கம் (24) என இந்தியா எங்கும் தமிழ் எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இட்டுக் காட்டியுள்ளார். தமிழ்க்கோடா, தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கு அருகே மதுரை, பழனி, தேனீ என்றும் ஊர்ப்பெயர்கள் உளவாம்.

இவை தவிர, ஆப்கானித்தானம், பாக்கித்தானம், கங்கையாற்றுப் பைதிரம்  போன்ற இடங்களில் குமரிநாட்டில் இருந்த ஆறுகளான பஃறுளி, தென்நாவலகத்தில் இருக்கின்ற காவிரி போன்ற ஆறுகளின் பெயர்களும் உருத்திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

‘கல்கட்டா’ என்பது உண்மையில் ‘காளிக்கோட்டம்’ என்று பாவாணர் முதலிய பேரறிஞர்கள் இதுபற்றி விரிவாக விளக்கியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் ஒருங்குவைத்துச் சிந்தித்து உணர்ந்தாக வேண்டும். உணராத வரைக்கும் மேற்சொல்லி வந்த உண்மைகளுள் ஒன்றுகூட ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கமாட்டாது.

உத்தரப் பைதிரத்து (உத்தரப் பிரதேசத்து) உச்சையினி பட்டணத்தில் உள்ள விக்கிரமாதித்தன் காலத்தைச் சேர்ந்த பழைய காளிக்கோயிலில் உள்ள காளியின் சிலைக்குக் கீழே எழுதப்பட்டுள்ள ‘காடிகா’ என்ற காளியைக் குறிக்கும் சொல்லின் உண்மையான வடிவம் காடுகாள் என்பதாகும். காடுகிழாள் < காடுகாள் என்பவற்றின் கடுந்திரிபு வடிவமே காடிகா என்று பேரா. இரா. மதிவாணனார் அவர்கள், வடநாட்டு ஆரிய வேதநூல் வல்லுநர் பேரா. வாகங்கர் என்பவருக்கு மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். அது காடுகிழாள் > காடுகாள் > காடுகா > காடிகா என்ற திரிபுப் போக்கினை உடையது.

இவையெல்லாம் பெருந்தமிழ வியன்மைக்கு வலிமையான சான்றுகளாகும். இவற்றை நிரல்படுத்தி உணரத் தெரியாதவர்களே, இடைநிலை மாற்றம் அல்லது திரிபு ஆகிய ஆரிய மறைநூல் தலைமையை மூலமுதல் என்பதாகப் பெரிதுபடுத்தி வல்லடி வழக்கிட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு அவர்களின் தமிழ் அறிவின்மை மிக நல்ல வாய்ப்பாக எதிரிகளுக்குப் பயன்பட்டு வருகின்றது.

என்னே அவலம்! என்னே அவலம்! இந்தத் தமிழப் பேரினத்தின் பீடறியாத பேரவலம்! வயிற்றுப் பிழைப்புக்காக அடிமைபட்டு அன்னைமொழிக்கு எதிர்நிற்கும் ஈனமிக்க இன அவலம!

இனி, இவ் வகையிலே சென்ற 19ஆம் நூற்றாண்டிலேயே இதனை நன்கு ஆராய்ந்து தெளிந்திருந்த காரணத்தால்தான் மனோன்மணீயம் நாடகம் படைத்தளித்த பேரா. பெ. சுந்தரனார் அவர்கள்,

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களித்தெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்
உன்உதரத்து உதித்துஎழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்துஒழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

என்று மேற்படி வரலாற்றுக் கூறுகளையெல்லாம் ஓர் அணுவுக்குள் ஏழ்கடலை அடக்கி வைத்தாற் போலச் செறிவித்துப் பாடி விழிப்புறுத்தினார்.

எனவே, மொழிமரபு நிலையில் திரிபுகள் ஏற்பட்டுவிட்ட நிலையிலும்கூட, மூலத்தமிழ்மொழி மரபினை அடிப்படையாக வைத்தே மேலும் மேலும் நாட்டு எல்லைகளைப் பிரித்துக் குறிப்பிடும் வழக்காற்றினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர்.

இந்த நிலையினைக் கொண்டே செந்தமிழ் நிலம், கொடுந்தமிழ் நிலம் என்று தமிழ்கூறு நல்லுலகத்தை அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர். இலக்கியத்தில் சொல்லாட்சிகளை வகைப்படுத்தித் தரும்போது கூட, இயற்சொல் – திரிசொல் – திசைச்சொல் – வடசொல் என்று நான்கு வகையாகப் பிரித்தனர்.

இந்த நான்கும் ஒரே மொழிக்கு அதாவது தமிழ்மொழிக்கு ஏற்பட்டிருந்த நால்வகையான சொல்லாட்சி நிலைகள். இயற்சொல் - திரிசொல் இரண்டும் செந்தமிழ்த் தன்மையில் சற்றும் பிறழ்ச்சி இல்லாதவை. திசைச்சொல் – வடசொல் இரண்டும் ஓரளவுக்கே செந்தமிழ்த் தன்மையும், பெரும்பகுதி செந்தமிழ்த் திரிபு நிலையையும் பெற்றிருந்த சொல் வகைகளாகும்.

அந்தத் திசைசொல் வழக்கில் இருந்துதான் கொடுந்தமிழ்களும், வடசொல் நிலையில் இருந்துதான் பிராகிருதங்களும் கிளைபிரியலாயின. அவற்றின் உறவும் தாக்கமும் தென்தமிழிலும் ஏற்படத் தொடங்கிய நிலையில்தான் தொல்காப்பியர் அவற்றுக்கு வரம்பு வைத்தார்.

ஆகவே, தொன்மையில் தொல்காப்பிய பெருமானாரிடத்திலும், தொடர்ச்சிப் புதுமையில் பேரா. சுந்தரனாரிடத்திலும் மூலத்தமிழ வரலாற்றுப் பாடத்தைக் கற்றால்தான் – கற்பவர்களுக்குத்தான் தன்னை யார் என்று உள்ளபடியாகவே அறிவறிய முடியும். அல்லாத மற்றவர்க்கெல்லாம் அவர்களின் அறிவிலே அவர்கள் சென்று அடிசார்ந்துவிட்ட அன்னிய மரபுகளால் அறியாமையும் அடிமைத்தனமும் ஒருங்கே ஏற்பட்டுத் தமிழுக்கு மாறுகொள்ள நேரும். மேற்படி அன்னியர்களின் மொழிகற்று - வழிகற்றுக் கொண்டு அவர்களின் கையில் பெற்று உண்ட உணவுக்கும் பருகிய நீருக்கும் பெருகிய செல்வச் சீருக்கும் செஞ்சோற்றுக்கடன்பட்டு – நன்றிக்கடன்பட்டு செந்தமிழ்க்கே ஊறுசெய்யத்தான் நிலைமை ஏற்பட்டுவிடும்.

எனவே, அவர்கள் உருவத்தால் தமிழர்களாக ஒரு கள்ளத் தோற்றமளிப்பார்கள், உள்ளத்தால் வாழ்க்கை நெறிகளால் அவர்கள் சார்ந்துவிட்ட அன்னிய மரபில் தோய்த்தெடுத்த தோற்றமல்லாத தோற்றமாகத் தெரிவார்கள். இதனை அவரவராகத் தம்மைத் தம்முள் ஆராய்ந்து பார்த்தால் புரியும்! இற்றைக்கு நாம் அறிந்துள்ள இந்த நடப்பியல் அறிவைக் கொண்டு அற்றைக்கு அப் அபழைமையில் இனம்பிரிந்தவர்களின் நிலைமையினை ஒருவாறு ஒப்பிட்டு உணரந்துகொள்ள முடியும்!

No comments:

Post a Comment