Saturday, July 13, 2013



இறை இயைபுநிலை

  
          ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
       ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குஉளன்
       வானோர் அறியும் அளவுஅல்லன் மாதேவன்
       தானே அறியும் தவத்தின் அளவன்றே
                                      - திருமந்திரம் 2980
 
மேற்சொன்னவாறு அவரவர்தம் இன்பதுன்ப சலனங்களுக்குள் புகுந்து; நிலைகலங்கி; அதனால் சீர்நிலை இழந்து; மேலும் மேலும் நிலைதிரிந்து போகாமல், சித்தம் திடம்படுகின்ற தவநிலைக்கு ஏற்பவே, அவரவர்க்குள்ளும் இறைபற்றிய எண்ணங்களும் கருத்துகளும் துணிபுகளும் ஏற்பட்டவண்ணமாக இருக்கின்றன.

இறையைக் குறித்துப் புறத்திலே என்னவாகப் பிறரோடு கருத்தாடினாலும், அதன் உண்மையினை அவரவரும் தத்தம் அகத்தில்தான் அறிந்துணர முடியும் என்பது காட்சியர் என்னும் அறிவறிந்தோர் ஆகிய திறவோர்களின் காட்சியுரையாகும். அதுவும் அவரவரின் ஊனுடம்போடு இயைந்துள்ள கருவிகளால்தான் தனக்குத் தானாக அறியமுடியும் - உணரமுடியும்.

அவ்விறை எத்தகைய அறிவினரின் அறிவின் அளவிலேயும் அடங்குவதாக இல்லை. அது தானே தன்னை அறியத்தரும்; அதுவும் அவரவர்தம் தவத்தளவே அமைவதாகும். அது கற்றதனால் ஆய பயனாக வரும் அறிவின் தூய்மையிலே – தூய அறிவு வடிவமாக (வாலறிவாக) உணரப்படுவதாகும். அவ்வாறு, அறிகையில் – உணர்கையில் நெகிழ்ச்சியுற்று நற்றாள் தொழல் என்பது தானே நிகழ்வதாகும்.

உயிர்களோடும் உலகத்தோடும் இறைகொண்டருளி நிற்கும் இயைபு நிலை சத்திநிலை என்பதையும், அவ்வாறு இயைந்தும் தன் தனித்தன்மை கெடாதுநிற்கும் நிலை சிவநிலை என்பதையும் பின்வருமாறு காண்க.

ஈசன்என்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றுஎழு சத்தம் உலப்பிலி
தேசம்ஒன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானன்றே
                                 - திருமந்திரம் 2969

எல்லாத் திக்கிலும் ஈசன் ஆகிய இயவுளே இயங்கியிருக்கிறது. முப்பத்தாறாம் மெய் (36ஆம் தத்துவம்) ஆகிய ஓசை என்னும் நாத மெய்யினின்றும் எல்லாம் தோற்றமுற்று உள்ளன. அத் தோற்றம் என்பதன் இயங்குநிலை என்பதும் ஒன்பது நிலைசார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒன்பதும் ஒன்றின் படர்ச்சியேயாகும். தோற்றமுற்றுநிற்கும் படைப்பொடு மருவிநிற்கிறது இறை.

அது மலரோடு இயைந்து மருவிநிற்பினும் அதனுள்ளே அடங்காததாக எங்கும் நிறைந்துள்ள கண்ணுக்குப் புலனாகாத நறுமணம் போன்ற நிலையில் நித்தமும் திகழ்ந்துகொண்டிருக்கின்றது.

மணம் மலரொடு மருவிநின்றாலும் அதனிடத்து அடங்காமல் எங்கும் பரவியிருப்பது போலப் பரம்பொருள் இயற்கைமுழுவதும் இயைந்தும் இயைந்திடாதும் இருக்கின்றது. இதனை, மாணிக்கவாசகர் மிகத் தெளிவாக உணர்த்தியருளுகின்றார்.

  உற்ற ஆக்கையின் உறுபொருள்
நறுமலர் எழுதரு நாற்றம்போல்,
   பற்றல் ஆவதோர் நிலையிலாப்
பரம்பொருள் ...  
– திருவாசகம்:அதிசயப்பத்து : 9

இப்பாட்டில், ‘உற்ற ஆக்கையின் உறுபொருள்’ என்று குறிப்பிட்டிருப்பது இறைப்பொருள் ஆகிய பரம்பொருள். அதன் பண்பினைக் குறிப்பிடுகையில், அஃது நம் உடம்பகத்தே கலந்துநிற்கின்றது எனவும், அவ்வாறு கலந்துநிற்பினும் அதனைப் பருமைநிலையில் பற்றிக்கொள்வதற்கு அகப்படாத தன்மையில் இருப்பது எனவும் விளக்குகின்றார்.

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் என்று இதனையே திருமூலரும் கூறினார். இப்படியாக மெய்வந்த திருவருள் விளக்கமுற்ற அருளாளர் அனைவரும் ஒத்து ஒருகுரலாக ஒன்றையே நன்றாக மொழிந்துள்ள வாய்மைத் திறத்தினை வாய்மையால் அன்றி மற்றெதைக் கொண்டும் எவருக்கும் காணப்பெறுமாறு இல்லை.

‘நறுமலர் எழுதரு நாற்றம் போல்’ என்பதன் வழி தக்க பருவத்தால் அன்றி – மலர் என்னும் பருவத்தில் அன்றி - வெளிப்படாத மணம்போல, அவரவர்தம் தவம் ஆகிய பருவத்தால் அவரவர்தம் உடம்பகத்தே உணரலாகுவது அன்றி, மற்று எவ் வகையாலும் அதனைப் பற்றுதல் – பற்றிக்கொள்ளுதல் – இயைதல் என்பது எவருக்கும் இயலுவதன்று என்பது அதன் அகம்பொதிந்த அருஞ்செய்தியாக இருக்கிறது. இதனைப் பாம்பாட்டிச் சித்தரும் வருமாறு அருளிச்செய்துள்ளார்.
 
  எள்ளில்எண்ணெய் போலஉயிர் எங்கும் நிறைந்த
         ஈசன்பத வாசமலர் எண்ணி எண்ணியே
  உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
         ஒடுங்கி அடங்கித் தெளிந்து ஆடு பாம்பே!

இதனை ஔவையாரும் பட்டினத்தாரும் அச்சு மாறாமல் அப்படியே மரபு கூற்றாக வடித்துள்ளனர். தமிழ்கூறு நல்லுலகில், இறைநிலையை உணர்ந்தோர் பிறர்க்கு உணர்த்துதற்குத் திருவுள்ளம் பற்றிய நிலையில் பரவிய வழக்காக வேரூன்றிவிட்ட சொலவகங்களுள் இதுவும் ஒன்றெனத் தெரிகின்றது.

 எள்ளகத்து எண்ணெய் இருந்ததனை ஒக்குமே
  உள்ளகத்து ஈசன் ஒளி
                                  - ஔவைக் குறள் : 141

 எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருந்து
  உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே
                            - பூரணமாலை : 89

இவ்வாறு உடம்பகத்தே உணரப்பெறுதல் என்பதோடு, புறத்தேயும் சூழ்ந்துள்ள இயற்கையினுள்ளும் இறை இயைபினை உணரலாகும் என்பதையும் ஒருங்கே உணர்த்தியுள்ளனர் நம் அறிவறிந்த முன்னோர். அவற்றுள்ளும் மிகச் சிறந்தனவாக எட்டு வடிவங்களைக் கொள்வர். அவை எட்டுருவம் எனப்பெறும்.

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
         இயமான னாய்எறியுங் காற்று மாகி

அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
         ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்

பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
         பிறர்உருவும் தம்உருவும் தாமே யாகி
 
     நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
         நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
- அப்பர் தேவாரம்

இவற்றின் ஊடே இயைந்தருளி இருப்பவன் இறைவன் என்பது உண்மையே ஆயினும், அவை எதுவுமே அவன்றன் இயல்புருவம் அன்று.

யாரொருவரின் கையினாலும் புனைந்து இயற்றப்பெறாத இயற்கையோடு இசைந்துள்ளது அன்றி; அவ்வியற்கையும் அவன் அன்று. தோற்றக்கேடு (தோற்றம்பெறுதலும் அத்தோற்றம் கெட்டழிதலும்) உடையதாகிய எதுவும் இறை அன்று – இறைமையுடையது அன்று.

இந்த இயைபினை “ ஒன்றுநீ இல்லை, அன்றி ஒன்றில்லை” என்று மாணிக்க வாசகர் குறிப்பிடுவார். இதோ அதனை திருநாவுக்கரசர் விரித்தோதுகின்றார்.
 
மண்அல்லை விண்அல்லை வலயம் அல்லை
         மலைஅல்லை கடல்அல்லை வாயு அல்லை

எண்அல்லை எழுத்துஅல்லை எரியும் அல்லை
         இரவுஅல்லை பகல்அல்லை யாவும் அல்லை

பெண்அல்லை ஆண்அல்லை பேடும் அல்லை
         பிறிதுஅல்லை யானாயும் பெரியாய் நீயே

உண்ணல்லை நல்லார்க்குத் தீயை அல்லை
         உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே
                              - அப்பர் தேவாரம் : 45:9


மண்ணொடுநீர் அங்கி மதியோடு காற்றுஇரவி
விண்எச்ச மூர்த்தியோடு எட்டு
                               - ஔவைக் குறள் : 9




No comments:

Post a Comment