தமிழினம் என்பது ஒரு மூல மரபினம்,
தனித்தேசியம் படைத்திருக்கும் வரலாற்றுப் பேரினம்
தமிழ் என்ற சொல் மீமிகப் பழைமையானது. தமிழ்மொழியின்
பெயரால்தான் தமிழ்கூறு நல்லுலகம் என்றொரு பெருந்தொடர், பாண்டியம் – சோழம் - சேரம் எனும் மூன்று பெரிய தமிழ அரசுகளுக்குள்
பரந்துகிடந்த தமிழ்ப்பெருமண்டலத்தை முழுதுறக் குறிக்கின்றது.
தமிழினம் என்னும் இனம் ஒரு மூல மரபினம், தொடர்ச்சியான தன்னாட்சி பெற்று வாழ்ந்த
நாட்டினம் அல்லது தேசிய
இனம் ஆகும். அது தொன்றுதொட்டு அந்தத்
தமிழ்ப் பெருமண்டலத்தில் இருந்து - வாழ்ந்து வருகின்றது. இன்று அது தன் சொந்த
மண்ணில் தன்னாட்சி மீட்சிக்குப் போராடி வரும் ஒரு மாண்பார்ந்த வரலாற்றுப்
பேரினம்.
உலக வரலாற்றைக் கொண்டு ஒப்பியல் முறையில்
தேடும்போது, அஃது 50,000 ஆண்டுகாலப் பழைமை குறையாத ஒரு தனித்தூய மரபுடைமை கொண்ட தாய்மொழியாகத்
தமிழைப் பெற்றுள்ளது. அதன் இனமரபு தோற்றத்தை ஆராயப் புகுந்தால், அது பண்பட்ட நிலை – பண்படாத நிலை என இரண்டு நிலைகளில் 100,000 ஆண்டுகாலப் பழைமை உடையதாக
இருக்கின்றது.
சீர்த்திமிக்க ஒரு குமுகாய வடிவமைப்பைப் பெற்ற
பின்னர் உருவான பெருந்தமிழப் பொற்காலம் என்பது 12,000 ஆண்டுகால முக்கழக (முச்சங்க) வரலாற்றினை உடையதாக இருக்கின்றது. பாண்டியர்
தலைமையில் அங்குத் தமிழ் என்றொரு வடிவத்திலே திரண்டுகிடந்த கலையறிவியல்
செல்வங்களையெல்லாம் தொடர்ந்து ஆய்வுறுத்திப் புதுக்கி மேம்படுத்தி இயலிசைநாடகம் என மூன்று பெரும்பகுப்பில் வைத்துப் பொய்யா
நாவினராகிய புலன் அழுக்கு இல்லாத தூய சான்றோர்களால் ஆராயப்பட்டது. இதனை, இறையனார்
அகப்பொருளுரை “சங்கமிருந்து தமிழாராய்ந்தனர்” என்று அழுத்தமாகக் குறிப்பிடும்.
இவற்றில் அனைத்துத் துறைகளும் அடங்கி நிற்கின்றன.
இந்த வாழ்வியல் மரபுதான் தமிழ்மரபியம்
எனப்படுகின்றது. இதுதான் எல்லா
வகையான வணக்க வழிபாட்டுச் சமயமத மெய்யியல் கூறுகளையும் உள்ளிட்டதாகப் பண்டைத்
தமிழரிடத்தில் விளங்கியிருந்த வித்தகத் திருநெறி – முத்தமிழ்த் திருநெறி –
பெருந்தமிழ மரபுநெறி.
சமயமதங்கள் பெருந்தமிழ மரபியத்தின் உட்கூறுகளாக
இருந்தவை. மாறாக, சமயமதங்களின் உட்கூறாகப் பெருந்தமிழ மரபியம் இருக்கவில்லை. பண்டைத் தமிழரிடத்தே எத்தனை வகையான
சமயமத நம்பிக்கைகள் இருந்தபோதிலும் அனைவரும் தமிழர் எனும் பொதுமரபிய நல்லிணக்கம் கொண்டவர்களாக விளங்கினர். அதனால்தான், நாடும்
இனமும் மூலத் தமிழுறவு
பிரியாமலிருந்தன. இன்றோ, இந் நிலைமை தலைகீழாக மாறிக் கிடக்கிறது.
இப்படியாகத் தமிழ்மரபியம் எனப்படுகின்ற முக்கழக (முச்சங்க) முத்தமிழ் மரபு வழியில், பண்டைத்
தமிழர் வாழ்க்கை என்பது உயர்ந்தோர் என அறம்பொருள்இன்ப ஒழுக்கங்களில் மேம்பட்டு நின்ற
ஆன்றோர்களாகிய அரசர்களும் பிற சான்றோர்களும் வழிநடத்திட இனிதாக இயங்கி
வந்திருக்கின்றது. அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிருந்தே ஏனையவரெல்லாம்
நெறிபெற்று நேர்பட்டனர். துறைதோறும் துறைதோறும் இவ்வுயர்ந்தோர் ஆகிய சான்றாண்மையாளர்
தம் மனமொழிமெய் எனும் மூன்றினாலும் எடுத்துக்காட்டாக
விளங்கிவந்தனர்.
இப்படியாகப் பல்லாயிரந் தலைமுறைகளிலும் சிறந்து
விளங்கிய அப் பெருமக்கள், இம்மைக்கும் மறுமைக்கும் மட்டுமன்றி, எம்மைக்கும் தம்
செம்மைத் திறங்களால் திரண்டியைந்து; ஒரே பொதுமைத் திருநெறியாகி என்றென்றும்
எல்லோர்க்கும் வாழும் வழியாக நிற்கிற்றனர். அதனால், சான்றோர் பழித்தவற்றைச் செய்யாமை,
போற்றியவற்றைச் செய்துவாழ்தல் என்பதே
பெருந்தமிழ
மரபியம் என்று உருப்பெற்று
நிலைத்தது. இந்த உண்மையை முக்கழக நூல்மரபு நன்கு விளக்கியுரைக்கின்றது.
முதலிரண்டு கழகக் காலத்திலே முற்றிலும் பிறமொழிச்
சொற்கலப்பு, கருத்துக் கலப்பு, பண்பாட்டுக் கலப்பு என எந்த நிலைக் கலப்பும் அறவே
இல்லாத முழுத்தூய தமிழாகத் தமிழ்மொழியின் நிலை ஒளிவீசித் திகழ்ந்திருந்தது.
அதற்குப் பின்னர், இரண்டாம் கழகத்தின் இறுதிக்கும்
மூன்றாம் கழகத்தின் தொடக்கத்திற்கும் ஒட்டிய ஒரு கால எல்லையில் கலப்புநிலை ஏற்படத் தொடங்கி யிருக்கின்றது. அதனை நீக்கித் தமிழை
அதன் இயல்பிலேயே நிலைப்பெறுத்தல்
வேண்டியே தொல்காப்பியம்
உருவாகியது.
No comments:
Post a Comment