Thursday, July 18, 2013



எழுத்தறிதல் – எழுத்தறிவு
     
     எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தால்
        மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்;  - மொழித்திறத்தின்
        முட்டறுத்த மேலோன், முதல்நூல் பொருளுணர்ந்து;
        கட்டறுத்து வீடு பெறும்      
- பழம்பாடல்

        எழுத்து அறியத் தீரும் இழிதகைமை’ என்ற கூற்றிலிருந்து ஒரு செய்தி கிடைக்கின்றது. உயிருக்கு இழிதகைமை தருகின்ற ஒரு நிலை அதற்கு – அதனிடத்திலே உள்ளது என்பதாகும். அஃது எழுத்தினை அறியத் தீர்ந்துபோய்விடும் என்பது அதனையொட்டி வருகின்ற மற்றொரு செய்தி.

     எழுத்து’ என இவ்விடத்துக் கூறப்படுவது வெறும் மொழியியல் அடிப்படையில் அன்று. அது மெய்யியல் அடிப்படையில் கூறப்படுகின்றது. அந்த எழுத்தினை அறிவிக்க அறிய முடியுமே தவிர யாருமே தாமே அறிந்துகொள்ள முடியாது. அந்த எழுத்தினை அறிவதன் முடிநிலைப் பயனாக அமைவது முதல்நூல் பொருளுணர்ந்து; கட்டறுத்து; வீடுபேறு பெறுதலாகும். அதனால்தான், ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’ என்றொரு பொருண்மொழியும் எழுந்துள்ளது.

   அந்த எழுத்து என்பது ஒன்றா பலவா? என்னும் கேள்விக்கு விடையாக அமைந்திருப்பதே முன்னைய இயல். அகரம், அகரமுதல், ஆதி, ஆதிபவகன், எனக் குறளில் சுருக்கமாக வந்த ‘மெய்யியல் விளக்க எழுத்து’ விளக்க நிலையில் பலவாகக் கிளைபடக் கிளக்கப்பட்டுள்ளது.

   ஓம், நமசிவய, அஉ, ... என அது விரிவுற்று நிற்கின்றது. இற்றை மேலையர் வழிசார்ந்துள்ள அறிவியல் துறையில் நூற்றெட்டுத் தனிமங்கள், வேதியற் பொருள்கள் போன்றவற்றுக்கு அமைக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்துமான குறியீடுகளைப் போன்றவையே  இவை என ஒருவாறு ஒப்பீடு கூறலாம். 

     அவை யாவும் படைப்பு – படைப்பியக்கம் - படைப்புமுதல் என இருத்திறத்தினவாக இருக்கின்றன. அவை எங்கிருந்தோ ஏதோ வெற்றுப் புனைவுகளாக உருப்பெறவில்லை. அவை பருமை – நுண்மை – மீநுண்மை எனக் காணப்படுகின்ற – உணரப்படுகின்ற ஒட்டுமொத்த வாழ்வியக்கத்தினை உள்ளிட்டு உரைக்கின்ற தன்மையுடையவை.

  மேற்படி எழுத்துகளை அறிந்தால், உயிர்க்கு அதனொடும் பொருந்தியிருக்கும் இழிதகைமை (அறியாமை) அகன்றுவிடும் என்பது திரண்ட கருத்து. அதற்காக எழுத்தறிதல் என்னும் திண்ணிய நன்முயற்சி மிகவும் வேண்டுவதாகிறது. அந்த எழுத்தறிவு வாய்க்கப்பெற்றால் கட்டறுத்து வீடுபேறு எய்துதல் என்பது இயலுவதாகும்.

  மேற்படி எழுத்தினை அறிவதற்குக் கருவியாக இருப்பது மொழி. அதாவது அவ்வெழுத்தினால் உணர்த்தப்படும் பொருளினை உள்ளடக்கி இருப்பது மொழியாகும். எழுத்தினால் அறியப்பெற்ற மொழியினில் திறம்படைத்தால், அகத்தில் முட்டுக்கட்டையாக இருக்கின்ற உள்முரண்கள் யாவும் நீங்கப்பெறும். அது முட்டறுத்தல் எனக் கூறப்படுகின்றது.

அகத்துக்கண் முட்டறுக்க முட்டறுக்கத்தான் முதல்நூல் உணர்த்துகின்ற மெய்ப்பொருள் உணரப்பெறும். தன் அகத்து முட்டறுத்து வரும் உயிர்க்கு அதனைக் கட்டுண்ணச் செய்திருக்கின்ற ஆணவம் முதலான மலப்பிணிப்பு அறுக்கப்படலாகும் நிலை அமையும். அவ்வாறு கட்டறுத்திடும் நிலைபெற்ற உயிர் வீடுபேறு அடையும்.

    எனவே, மேற்சொன்னபடி உயிர் ஒரு கட்டுண்ட நிலையில் இருக்கின்றது. அக் கட்டினை அறுப்பதற்கு பொருளுணர்தல் என ஒன்று தேவையாகின்றது. பொருளுணர்தல் என்பது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் அருளிச்செய்த முதல்நூல் வழியாக அமையும். முதல்நூலும் அம் முதல்நூலின் பொருளுமாக இருப்பது இறை.

அவ்விறையை அகத்தினில் உணர்வதற்கு முட்டு பல உள. முதலில் அவற்றை அகற்றியாக வேண்டும். முட்டறுக்கப்படுவதற்கு மொழித்திறம் வேண்டும். அந்த மொழித்திறம் என்பது சான்றோர் வகுத்துள்ள எழுத்து – எழுத்துகளில் மறைந்துள்ளது.

அவ்வெழுத்து அல்லது எழுத்துகளை அறிவதற்குத் தக்க ஆசான் துணை வேண்டும். ஆசு (பற்றுக்கோடு, ஆதாரம்) தருபவர் ஆசான். பற்றிநடப்பதற்கு ஏற்ற அகப்புற ஒழுக்கமுடைய சான்றோர் மட்டுமே ஆசானாக இருக்க முடியும். ஏனையோர் இடத்து அதற்குரிய அகப்புறத் தூய்மை அமைந்து இராது. அத்தகைய ஆசான்மாரே எழுத்து அறிவிப்பர்; எழுத்தினை அறிவிக்கும் அவர்கள் இறைவனே எனுமாறு அவனிலும் வேறுபடாத – மாறுபடாத மற்று எவ்வகைச் சார்பும் இல்லாதவர்களாக இருப்பர். ஆகையால், எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்றொரு பொருண்மொழி தமிழ்மெய்யியல் வழக்கினுள் ஏற்பட்டுள்ளது.

     மேற்படி எழுத்து யாவும் பிற எழுத்துகளைப் போன்றன அல்ல. அவை எண்ணியது எண்ணியாங்கு எய்துதற்குரிய ஆற்றல் பொருந்தியிருப்பவை. எனவே, அவற்றை மந்திரம் என்பர் சான்றோர். மந்து + இரம் > மந்திரம்; மந்து + அணம் > மந்தணம் என அமைந்திருக்கிறது.

ஆய்வுக் குறிப்பு:-

[ மன் என்பது நினை, எண்ணு, பொருந்திநினை, ஒன்றிநினை, நிலைபெற நினைத்தல் - கருதுதல் எனப் பொருள்தரும் தமிழ்ச்சொல். அது முன்னுதல் என்ற சொல்லின் அடியாக முன் > மன் என முதல் தரிந்து வந்துள்ளது. முன் என்பதிலிருந்துதான் முன்னம், முன்னல், ... முதலான கருதுதல், நினைத்தல், எண்ணுதல் பற்றிய சொற்களெல்லாம் தோன்றியுள்ளன. நிலைபெறக் கருதுதல், நிலைபெறச் சொல்லுதல், நிலைபெறச் செய்தல், ஒருவர் அல்லது ஒன்றனை நிலைபெறுவித்தல், ஒன்றிலே மன்னுவித்தல்(நிலைப்படுத்தல்), ... எனப் பலவும் மன் என்னும் அடிச்சொல் வழியாகக் கிளர்ந்துள்ள தூய தமிழ்ச் சொற்களும் சொற்பொருள்களும் ஆகும்.

மன்னுதல் என்பது நிலைத்தல், மன்னுவித்தல் என்பது நிலைபெறுவித்தல். உள்ளத்தையும் உணர்வையும் அறிவையும் கலைந்தோடாமல், ஒன்றனிடத்து நிலைபெறுவித்தலும், வேறொருவர் அல்லது வேறொரு பொருளினிடத்தில் மற்றொரு அயல்பொருளை கொண்டுபோய்ப் பொருத்தல் – சேர்த்துவைத்தல் என்பதும் (அதாவது மந்திரம் பண்ணுதல்) இதன் வழிசார்ந்தனவே. தன் ஆட்சியில் உள்ள நாட்டில் வாழ்கின்ற மக்களை வாழ்க்கையில் அறம்பொருள்இன்பங்களில் நிலைசெய்வன் மன்னன் – மன்னவன்.

அவ் வகையில், மன் + து > மந்து என திரிபுற்ற வடிவிலிருந்து மேலும் பல தமிழ்ச்சொற்கள் உருவெடுத்துள்ளன. அரசனை அவனது ஆட்சிக் கடப்பாட்டில் நிலைபெறுவிக்கும் கருத்துகளாலும், செயல்களாலும் துணையிருப்பவர் மந்து + இரி > மந்திரி.  

மந்து + இரித்தல் > மந்திரித்தல். இஃது அச்சத்தாலும் நோயாலும் மற்றுமற்றுள்ள பலபலவாலும் சித்தங் கலங்கி நிலைகலங்கியவர்களை நிலைசெய்யும் வண்ணமாக மேற்கொள்ளும் மனத்திற நடவடிக்கையைக் குறிக்கும்.

மந்து + அணம் > மந்தணம் என்று அமைந்த வடிவமும் மந்திரம் என்ற பொருளைத் தரும்.

இரம், இரி, இரித்தல், இரிப்பு, ... என்பவை செய் எனப் பொருள்கொண்ட வினையீறுகள். அவற்றுள் இரித்தல் என்பது தொழிற்பெயர் ஈறு. இரி என்பது வினையீறாகவும், பெயரீறாகவும் அமைந்திருக்கிறது. அதாவது, இரி என்பது செய் எனவும், செய்யும் ஆளையும் (செய்பவரையும்) சேர்த்தே குறிக்கிறது. இரம் என்பது தொழிற்பெயர் ஈறாகவும், பண்புப்பெயரீறாகவும் இருக்கிறது. [ஒ.நோ. அரி (கத்தரி, நச்சரி, எச்சரி), அரம் (விளம்பரம், கலவரம், நிலவரம்), அரித்தல் (கத்தரித்தல், நச்சரித்தல், நச்சரித்தல்), அரிப்பு (கத்தரிப்பு, நச்சரிப்பு, எச்சரிப்பு), அரவு (உத்தரவு, ஒப்பரவு – ஒப்பராவு) ]

காண்க: சித்து + இரம் > சித்திரம். சித்து + இரி > சித்திரி, சித்து + இரித்தல் > சித்திரித்தல். செத்து என்பது சித்து என முதல் திரிந்துவந்துள்ளது. செத்தல் என்பது ஒத்தல், போலுதல் எனப் பொருள்படும். காணும் பொருள்களின் உருவை – உருவமைப்பை அப்படியே ஒத்து (செத்து) வரைவது பற்றிச் சித்திரம் எனப் பெயர் அமைந்தது என்று வேர்ச்சொல் விளக்கம் தருவார் பாவாணர். ]

அதனையே (மந்திரம் என்பதையே) மறைமொழி, வாய்மொழி, பொய்யாமொழி, வாய்ச்சொல் எனவும் கூறுவர். இந்த மறைமொழி அல்லது வாய்மொழி குறித்த மொழித்திறம் பெற்றவர்களே முட்டறுப்பர்; முதனூல் பொருளுணர்வர், கட்டறுப்பர், வீடு பெறுவர்.

     சரி, அவ்வெழுத்துகளை அறிந்துகொண்டாலே அவை குறிக்கும் பொருளாகிய மெய்ப்பொருளை அறிந்துணர்ந்து கொண்டதாக எண்ணலாமா? அந்த எழுத்துகளே இறைவணா? இல்லை, அப்படி இல்லை.
 
      அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்,
          அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்!
          அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
          அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே!
                                     - சிவவாக்கியம் 260

     திருவைந்தெழுத்து ஆகிய நமசிவய என்பதையும், அஉம என மூன்று உறுப்புடைய ஓங்காரத்தையும் எழுத்தளவில் அறிந்துகொண்டால் போதுமா? இல்லை, அவ்வெழுத்து பற்றிய புறத்து அறிவு அறியப்பெறுதல் என்ற ஒன்று மட்டுமே போதாது.

     மேற்சொன்ன அவற்றின் உட்பொருளாக ஒருமைநிலையாக அறியவரும் அகரமுதல் என்பதன் பொருளினைத் தன் அகத்து அறிவாக அறியப்பெறுவதால் மட்டுமே மெய்ப்பொருளை உணரவாய்க்கும்.

அந்த அகரமுதல் எழுத்தினை அவ் - அவ்வு என்று சிவவாக்கியர் மேற்கண்ட திருப்பாட்டில் கூறுகின்றார். உண்மையை நாம் பிறழ்ந்துணர்ந்து கொண்டுவிடக் கூடாது எனும் பேரன்பினால் அஞ்செழுத்து, மூன்றெழுத்து என்பவை அந்த மெய்ப்பொருள் அல்ல (அல்லகாணும் அப்பொருள்) என்று நம்மைக் கவனப் படுத்துகின்றார்.

நெஞ்சகத்துள் அஞ்செழுத்தையும் மூன்றெழுத்தையும் உள்ளவாறு அவை குறித்துநிற்கும் அகப்பொருள் கண்டு அதனிடத்து அழுந்தி (தோய்ந்து) கொள்பவர்க்கே அகரமுதல் (ஒலிமுதல்) என்ற எழுத்தின் அகப்பொருளாய் விளங்குகின்ற மெய்ப்பொருள் உணர்வினால் ஒன்றுதலாகும் – இரண்டறக் கலத்தலாகும் என்கிறார்.

     இதனையே ஔவைப் பெருமாட்டியும் பின்வருமாறு கூறுகின்றதைப் பாருங்கள்! ஓருங்கள்!

          ஒவ்வகத்துள் நின்ற சிவனருள் பெற்றக்கால்
                அவ்வகத்துள் ஆனந்தம் ஆம்        - ஔவைக் குறள் 104


     [ குறிப்பு:- ஒவ் எனப்படுவது ஓம் எனும் ஓங்காரம். அவ் எனப்படுவது அகரமுதல்ஆதி பகவன். ஆதியோடு ஒன்றுதல் என்பதே அவ்வகத்துள் ஆனந்தம் பெறுதல். இதனை,

ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான்
நீதியால் செய்த தவம்ஔவைக் குறள் 89

என்று மேலும் அவரே தெளிவாக விளக்குகின்றார்.]

     அந்தச் சிவனருள் எப்படி வாய்க்கும் என்பதற்கு மிகத் திட்பமான விடையாக,
    
           வாய்மையால் பொய்யா மனத்தினால் மாசற்ற
                தூய்மையாம் ஈசன் அருள்            - ஔவைக் குறள் 103

என்று கூறுவதைக் காண்க.

     எனவே, இவற்றைக் கொண்டு எழுத்துகளின் வாயிலாகக் குறியீட்டு முறையில் உணர்த்தப்படுகின்ற உண்மையினை, சும்மா ஏட்டுப் படிப்பால் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பாத்திரமாக – உள்வாங்கிக்கொள்ளும் இடமாகவும் கருவியாகவும் உள்ளது அவரவர் நெஞ்சகம் – உள்ளம்.

  பொய்மையினால் மாசுபட்டுக் கிடக்கையில் அது முட்டுப்பட்டுக் கிடக்கின்றது. அந்த முட்டினை அறுக்க வேண்டும். அதனை அறுக்காமல் பொருளுணர்தல் அதாவது மெய்ப்பொருளினை உணர்தல் என்பது வாய்ப்பதில்லை. பொய்யுணர்வினைக் கொண்டு மெய்ப்பொருளை உணர்வது எங்ஙனம் முடியும்? மெய்யுணர்வு கொண்டுதான் மெய்ப்பொருளை உணரந்து அதனிடத்து ஒன்றுதல் ஆகும்.

     வழிபடு தெய்வத் திருமேனிகளுக்கு ஏற்ப அவ்வவ் வணக்கவழிபாட்டினை முன்னிருந்து வழிநடத்தியவர்கள் வெவ்வேறு அடிப்படை மந்திரங்களைப் புனைந்துள்ளனர். அவற்றைக் கொண்டு ஒரு சார்புடைய நிலையில்தான் இறையுணர்வு வாய்க்கும். ஒட்டுமொத்தப் பேரியற்கைப் பொதுமையையும் - முழுவியன்மையையும் அளாவியதாக அவை திகழவில்லை.

ஓர் எல்லைப்பட்ட நிலையில் இருக்கின்ற காரணத்தால்தான் அவை ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட நிலையில் இருக்கின்றன. அதேவேளையில் ஒருமைப்பாடு காணத்தக்க ஒற்றுமைக் கூறுகளையும் அவை தொட்டுக்கொண்டும் திகழ்கின்றன. எல்லைப்படாத கட்டறுத்த நிலையில் செல்லும்போது அவரவர்க்கும் தாம்தாம் அதற்கு முன்னர் யாதானும் ஒரு சமத்தினிடத்துக் கட்டுண்டு கிடந்துள்ள நிலையும் அதனைக் கடந்த முழுமைநிலையும் உணரவாய்க்கும்.

உள்ளம் தெளிவுறத் தெளிவுறத் தானே ஒரு சார்புடையதாக இருந்த அந்த நிலையிலிருந்து இயல்பாகவே விலகி அவற்றினின்றும் மேம்பட்டதான இயற்கைமுதலாக – ஒருவனேயாக – ஓன்றேயாகப் பரம்பொருளை உணரந்து ஒழுகுதற்கு இடமளிக்கும் செந்தண்ணெறி (சன்மார்க்க்ம்) என்பதினிடத்து ஈடுபாடு உண்டாகி ஈடேற்றமும் ஒருங்கே வரப்பெறும்.

No comments:

Post a Comment