Thursday, July 18, 2013



எந்நூல்வழி எடுத்துப் பார்த்தாலும்
அஃது இயலிசை நாடக முத்தமிழ்ச் 
செந்நூல் வழிப்பட்டதாகும்

 
  1930இல் எம்.கே.எம். பொன்னுசாமிப் பிள்ளை என்னும் முத்தமிழ் அறிவார்ந்த பேரறிஞரால், முத்தமிழ் மரபினுள் நடுநாயகமாக விளங்குகின்ற இசைத் தமிழின் உண்மையினைத் திண்மைபெற வெளிப்படுத்த இயற்றியளித்த செந்நூல் ‘பூர்வீக சங்கீத உண்மை’ என்பதாகும்.

    இதன்கண், நூன்மரபு என்று தொல்காப்பியத்தைச் சுவடுபற்றித் தலைப்பிட்டு எழுதியுள்ள முதல் இயல், திருக்குறள் போலும் செறிவினையுடையது. அதிலே இயற்கையோடு இசைந்த இறைநெறி கண்ட முத்தமிழ் மரபியலை அவர்கள் எடுத்து விளக்கியிருக்கும் பாங்கு நவில்தொறும் நயமாகிறது; பயில்தொறும் பழந்தமிழ்த் தாயின் என்றுமுள்ள புதுநலம் புரிகின்றது. என்னே அவர்தம் இயலிசைநாடக நுண்மாண் நுழைபுலம்!

   இசையை விளக்கப் புகுந்தவர் அப்படியே அதனைப் படைப்பியல் – பிறப்பியல் தொடர்பாக வைத்து விளக்கிச்செல்கின்ற வித்தகம் வியப்புக்குரியது. அதோ அதன் அருமை கருதி, அக் காலத்திய கலப்புநடையில் அமைந்திருக்கும் அதே நிலையில் ஒரு சொல்லைக்கூட மாற்றாமல் உங்கள் முன் வைக்கின்றேன். அது வருமாறு:-

“ இவ்வுலகத்தினர்க்கு உரிய பயன் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காகும். இன்பமென்பது, புறத்தின்வழி பிறந்த இன்பமும், அகத்தின்வழி பிறந்த இன்பமும் என இருவகையாம். புறத்தின்வழி பிறந்த இன்பம், அப்பொழுது மிகுந்து அதன்பின், சிறிது சிறிதாகத் தேய்ந்து, பின்பு இல்லாததாகக் காணப்படும். ஆனால், அகத்தின்வழி தோன்றிய இன்பமோ அங்ஙனமன்று. அகத்தின்வழி தோன்றி, அகத்தின் புறத்திலுள்ள மெய்ப்பயனுக்குத் தொடர்புள்ளதாகி, மெய்ப் பயன் நிலையையே தனதுள் வைத்து; இன்பப் பயன் தந்து; மேற்சென்று கெடாது ஒளிர்வதாகும்.

அத்தகைய ஒப்பற்ற இன்பத்திற்கும் பயனுக்கும் அடிப்படையாக, உலகத்தின்கண் அறிவுடையோரால் அழியாது வரம்பின்வழி நிறுத்தியதே சங்கீதமென்னும் அருங்கலை என்றும் கொள்ளப்படுவதாம். அதனை இசைநுணுக்கமுடைய சிகண்டியாரும்,

பூதமுதல் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து
நாதமுத லாம்எழுத்து நாலாகி – வீதி
வருவரத்தால் தானத்தால் வந்து வெளிப்பட்டு
இருவரத்தால் தோற்றம் இசைக்கு

என்றாராகலின்.

புற்கலமென்பது உடம்பு. அப் புற்கலத்திற்கு முதலாயுள்ள மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என பூதங்கள் ஐவகையாம். அவ்வைம்பெரும் பூதங்களுள் செறிதலைக் குணமாகவுடைய மண்ணும், நெகிழ்தலைக் குணமாகவுடைய நீரும், தெரிதலைக் குணமாகவுடைய தீயும், அசைதலைக் குணமாகவுடைய காற்றும், உண்டு இல்லை என்பதைக் குணமாகவுடைய விசும்பும் ஒன்றாகக் கலந்ததே உடம்பாம்.

மெய்வாய்கண் மூக்கு செவிஎனப் பேர்பெற்ற
ஐவாயும் அவற்றின் மீதடுத்துத் – துய்ய
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தால்
அவைமுதல் புற்கல மாம்

என்றபடி;

பூதங்களைந்தும் தத்தம் தன்மைநீக்கி, மண் உடம்பாயும், நீர் வாயாயும், தீ கண்ணாயும், காற்று மூக்காயும், ஆகாயம் செவியாயும் நின்று உடம்பாம். மேற்சொன்ன ஐம்பொறிகடோறும் வினியோகப்பட்ட புலன், சுவை முதல் ஐந்து வகைப்படும். இவ்வைந்தும், பொறி ஐந்தினுமேறி மண்ணாலுடம்பு ஊறாயும், நீரால் வாய் சுவையாயும், தீயாற் கண் ஒளியாயும், காற்றால் மூக்கு நாற்றமாயும், வானாற் செவி ஓசையாயும் வந்து உடம்பாம். அன்றியும்,

மண்ணின் பகுதி:- நரம்பு, இறைச்சி, என்பு, மயிர், தோல் என ஐந்தும்
நீரின் பகுதி  :-  நீர், மூளை, சுக்கிலம், நிணம், உதிரம் என ஐந்தும்
தீயின் பகுதி :- பசி, சோம்பு, புணர்ச்சி, காட்சி, நீர்வேட்கை என ஐந்தும்
காற்றின் பகுதி:- வெகுளி, மதம், மானம், ஆங்காரம், உலோபம்

என ஐந்துமாகப் பூதகுணம் 25உம் கொண்டு உடம்பாம்.

இன்னும் பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்து வாயுக்களும்; இடை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, சங்கினி, புருடன், குகு, அலம்புடை என தசநாடிகளும் சேர்ந்து உடம்பாம்.


இவ்விதம்:-

பூத வகைகள் ஓர்ஐந்தாய் பொறிஐந்தாய்
வாதனை ஓர்ஐந்தாய் மாருதமும் – மேதகுசீர்ப்
பத்தாகும் நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே
முத்திக்கு வித்தாம் உடம்பு

என,

பூதபரிணாமம் உணர்த்துகின்றபடி, மண் முதலிய பூதங்களைந்தும்; செவி முதலிய பொறிகளைந்தும்; சப்த முதலாகிய புலனைந்தும்; நரம்பு முதலிய வாதனை ஐந்தும்; நீர் முதலிய ஐந்தும்; பசி முதலிய ஐந்தும்; போக்கு முதலிய ஐந்தும்; வெகுளி முதலிய ஐந்தும்; தசவாயுக்க்களான பிராணன் முதலிய பத்தும்; தசநாடிகளான இடைபிங்கலை முதலிய பத்தும்; மூலாதாரத்தின் எழுபத்தீராயிரம் நாடிகளும், பீர்க்கங் கூட்டின் மூன்று கண்ணும்போல இடைபிங்கலைசுழிமுனை என்னும் மூன்று நாடிகளுமாய்; நடுநின்ற சுழிமுனை ஒழிய இரண்டானும் மேனோக்கி ஏறி இரண்டு மூக்கானும் ஓரோர் பாரிசத்து, ஐந்து நாழிகையாகக் கொண்டு, ஒரு மாத்திரையில் நூற்றிருபத்தைந்து சுவாசமாய், ஒரு சுவாசத்திலே 12 அங்குலியளவு தேய்ந்து; எண்விரல் அடங்குகின்றது பிராண வாயு.

அஃது உதானன் என்னும் காற்றாய்,

துய்ய உடம்பளவு தொண்ணூற்றாறு அங்குலியா
மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் – வையத்து
இருபாலும் நாற்பதோடு ஏழ்பாதி நீக்கிக்
கருவாகும் ஆதாரங் காண்

என்ப.

  சரீரத்தின் தொண்ணூற்றாறு அங்குலியுள் மேலே நாற்பத்தேழரையும் கீழே நாற்பத்தேழரையும் நீக்கி, ஆதார சுருதியாகிய ஓசை தெரிந்துகொள்ளுமெனத் தமிழிசை நூலாசிரியர் சிகண்டியாரும் கூறியுள்ளார் ஆதலால், ஜடப் பெரும் பூதத்தாலாய உடம்பே ஓசையையும் ஒலியையும் செவிகேட்ப எழுப்புதற்கு அறிவும் கரணமும் கலந்துநின்ற மிடற்றுக் கருவியின் வெளித்தோற்றுவாய் செய்யும் இயல்பினையுடையது.

இவ்வுடம்பு பூதங்களைந்தும், பொறி ஐந்தும், புலன் ஐந்தும், வாயு பத்தும், நாடி பத்தும், வாதனை இருபத்தைந்தும், அவற்றிற்குப்பொருந்திய தத்துவங்களோடு கூடி; தொண்ணூற்றாறு அங்குலியுடையதாம். மேல் 47 1/2  அங்குலமும், கீழ் 47 1/2 அங்குலமும் வேறுபடப் பிரித்து; இடைநின்றதின் ஓர் அங்குல அளவின்கண் உள்ளதே உடம்பிற்கு நடுநின்ற அளவிற்கண்ட மூலாதாரம் என்னும் நிலைக்களத்தினை யுடையது.

அதற்குமேல் 4 அங்குலம் கடந்ததின் வரம்பின்கண் உள்ளதே உந்தி என்று கூறப்படுவதாகும். அந்த உந்திக்கண்ணே, உன்மணி தத்துவத்தில் இலங்குகின்ற நாதமானது, கரணத்தின் உள்ளக எழுச்சி, ஒலிச் செய்தியால் ஒலித்தலாகிய பிறப்பில் திகழ்ந்து அங்குநின்று, ஒழுங்கான மேல் நெறிக்கண்ணே புறப்பாடுற்று; நெஞ்சு, கழுத்து, உச்சி என்னுமிடங்களில் முறையே நின்று; மிடற்று நெறியாலே வாய்வழி இன்மைபெற, வெளிப்புறப்படுவதே ஒலியின் விளக்கமாம்.

அவ்வொலி இருவகைப்படும். அஃதாவன, ஓசை என்பதுவும், ஒலி என்பதுவுமாம். ஓசை என்பதற்கும், ஒலி என்பதற்கும் தொல்காப்பிய உரையாசிரியர் வேறுபாடு காட்டி; இயற்றமிழுக்கு இன்றியமையாத ஒலியை மட்டும் கைக்கொண்டனர். அஃதவர் கொண்ட இயற்றமிழுக்கு ஒப்ப முடிந்த கொள்கை என்க.

அஃதேபோல், இவ்விசை நூலுக்கு இன்றியமையாது முன்னின்று உணர்த்துவது ஓசையாகிய சுருதியும், அதனோடு சேர்ந்து செய்திபெற இசையளவில் ஒலித்தல் பெறும் ஏழிசை எனக் கூறும் ஒலியென்பதும், அறியும் தகுதியான இயல்பினையுடையதாம். அதனை அறிவுடைய இசைமாண்பு அறிந்து; செய்தியில் வெளிப்படுத்துவார்.

உந்திமுதல் உச்சிகாறும் இசை எல்லை கடவாது, (அதாவது சுரஸ்தானம் புரளாது) மாத்திரை அளவில் குறையாதும், மிகாதுமாக உள்நெறிக்கண்ணே ஒலிபெறப் பிடித்தவண்ணமாய் நடத்தி வெளிப்படையாய், நன்கறியும் தகுதியுடையதாம். மேற்சொன்னபடிப் பிறந்த ஆதார சுருதியாகிய ஓசை,

ஆதாரம் பற்றி அசைவ முதலெழுத்து
மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு – போதரும்
உந்தி இடைவழியாய் ஓங்கும்இடை பிங்கலையால்
வந்ததுமேல் ஓசையாம் வைப்பு

ஐவகைப் பூதமும் ஆய சரீரத்து
மெய்பெற நின்றியங்கு மெய்யெழுத்தால் – துய்ய
ஒருநாடி நின்றியங்கி உந்திமேல் ஓங்கி
வருமால் எழுத்துடம்பின் வந்து

என்ப.

பூதங்களாலும் பொறி முதலியவற்றாலும் வாயுக்களாலும் பரிணமித்து; சுக்கில சுரோணிதங்களாலே உடம்புகொண்டு; இருவினையும் தன்னகத்து அடக்கி; உயிர்நிகழும் மெய்யாகிய மனித சரீர வீணையில் ஆறாதார ஸ்தானங்களிளில் ஜீவன் நிற்பதுபோல, சூ‡ம சரீரத்தின் ஆறாதார ஸ்தானங்களில் காரண சரீரம் இருக்கிறதெனக் குறிப்பிடும் ஓம் என்ற ஆதிநாதமாய் ஆறு ஸ்தானங்களில் படிப்படியாய் உயர்ந்து ஏழு சுரங்களாய் ஆனது போல, ஆதிமூலமாய் நின்ற பிரம்மமும் படிப்படியாய் ஏழு அறிவுடன்கூடி, ஏழு தாதுக்களாய் ஏழுவகைத் தோற்றங்களையும் அடைந்து; அந்தரியாமியாய் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்ற ஸ்தூல சரீரத்தின் ஆறு ஸ்தானங்களிலும்; சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம், அதீதம் என்ற சூŒம சரீரத்தின் ஆறு ஸ்தானங்களிலும் படிப்படியாய் உயர்ந்து பன்னிரு ஸ்தானங்களை அடைந்து காரணத்தில் லயமாகிக்காணும்.

இப்படியே ஓம் என்ற முதல் அகரமாகிய ஷட்ஜமமானது சுத்தமத்திமம் வரையில், 6 ஸ்தானங்களில் 6 ஸ்வரங்களாகி மொத்தத்தில் பன்னிரு ஸ்வரங்களாய் 12 ஸ்தானங்களை உடையதாய், முதற்காரணமான ஆதார ஷட்மஜத்திலேயே லயமடைகிறது.

அவ்விதம் ஆதாரத்தில் லயமாகும் ஆதார சுருதியானது ஹிருதயத்தில் நிற்கும் பொழுது மந்தரம் என்றும், கண்டத்தில் நிற்கும் பொழுது மத்திமம் என்றும், சிரசில் நிற்கும் பொழுது தாரம் என்றும் சொல்லப்படும். பிரஸ்தாப மூன்று ஸ்தானங்களிலும் ஓசையின் பிரமாணம் ஒன்றுக்குமேல் ஒன்று அதிகரித்தே ஒலிப்பதாகும். அதுவே மந்தர மத்திம தாரமென்று பெயராகும். ...

... இதனாலே உடம்பின் வழியே ஒலிநிரம்ப இயங்குவது வெளியாயிற்று என்பது முந்துநூலார் கொண்ட துணிபின் வழியே நாமும் அறியக்கூடியதாகும். ...

... இவ்விதம் ஜீவனானது 12 ஸ்தானங்களில் எப்படிச் சஞ்சரித்து நிற்கிறதோ, அப்படியே சூரியனானது 12 ராசிகளில் சஞ்சரித்து கால அளவைக் காட்டி நிற்கின்றது. அவ்விதமே, நாதமானது 12 ஸ்தானங்களில் சஞ்சரித்துப் பேரின்பத்தை அடையக் காரணமாய் இருக்கின்றது.

பன்னிரு ராசிகளிலும் சஞ்சரிக்கும் ஏழு கிரகங்களாக ஸப்தசுர நாமதேயத்துடன் சுரங்கள் சஞ்சரிப்பதுமன்றி; 7 தாதுக்களாய் எழுவகைத் தோற்றங்களையும் அடைந்து எட்டாவதாய்த் தோற்றத்தின் முதலில் திரும்பவும் அடங்குகின்றது.

துவாதசாந்த நிலையில் ஆரம்ப ஷட்ஜமானது மேல் ஷட்ஜத்தின் கதியை எப்படிக் கலந்துநிற்குமோ, அப்படியே பரமாத்மாவும் ஜீவன்களிடத்தில் காருண்யங் கொண்டு பேதமறக் கலந்துநிற்கும். “
-          நன்றி:- எம்.கே.எம். பொன்னுசாமிப் பிள்ளை,
           பூர்வீக சங்கீத உண்மை, பக். 26 - 33


     இந்தப் பாரிய விளக்கவுரையில், உடம்பு, உடம்பு வரும் வகை, உடம்பு இயங்கும் நிலை, ... போன்றவை நாள்கோள்கள், பன்னிரு ஓரைகள் (இராசிகள்), ஓசை, ஒலிகளின் உடனியைந்திருக்கும் பான்மைகள் என யாவும் மிகத் துலக்கமாக விளக்கமுற்றுக் காண்கிறது. ஓங்காரக் கருத்தியல் மிக நன்றாக இதில் விளக்கமுறுகின்றது.

இதனை இதற்கு முற்படக் காட்டியுள்ள கோள்களும் ஓரைகளும் இடம்பெற்றுள்ள ஆறாதார வரைபடத்தின் துணையோடு ஒப்புநோக்கிக் கொள்க. அடுத்து வருகின்ற இயலில் இது குறித்த மேல்விளக்கத்தினையும் சேர்த்து உணர்க.

     உடம்பினை வீணை அல்லது யாழ் என்பதாக உருவகித்துக் கூறப் பட்டுள்ள ‘சரீர வீணை’ என்பதற்கு ஏற்ப,

     “ அவ்வாறு பெறுதற்கு ஆக்க வலிமையும், அறிவின் வலிமையும் யாவர்க்கும் கிடைப்பது அருமையென்று உள்ளுணர்ந்த உலகறிந்த ஆன்றோர் அதன் உண்மையினை எவரும் எளிதில் அறிந்துகொள்ளுமாறு, ஒலி இலக்கணம் சிறிதும் பிழைத்தல் இல்லாத யாழ் என்னும் ஒரு அருங்கலத்தினை வெளிப்பெற உயிர்கள்மேல் அன்புவைத்துச் சங்கீத உலகத்தே வைத்தார் என்பதை அறிய வேண்டுவதும் அவசியமேயாம்.” என்று விளக்கியுள்ளதைக் கொள்க.

     அதற்குத் தமிழின் உயிர், மெய் என்னும் முதலெழுத்து மரபினையே இயல் மரபுக்கும் இசைமரபுக்கும் நடுவாக இயைத்திருக்கும் அறிவாண்மைக்கு என்ன பாராட்டுக்கூற முடியும். என் நாவுக்கு அந்த வலிமையில்லை என்று அந்த முன்னை முனைவர்களை நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்து வணங்குகின்றேன்.

     இதோ, உடல் யாழ் ஆகிய அந்தப் பண்ணிசை யாழிற்கு முந்துநூலோர் வழி எம். கே. எம் பொன்னுசாமிப் பிள்ளையவர்கள் தருகின்ற சான்றுறுதி.

     குன்றாக் குறில்ஐந்தும் கோடா நெடில்ஐந்தும்
     நின்றார்ந்த மந்நகரந் தவ்வோடு – நன்றாக
     நீளத்தால் ஏழு நிதானத்தா நின்றியங்க
     ஆளத்தி ஆம்என்று அறி


     இதன் விளக்கம் வருமாறு:-

     ... நிர்ணயித்த ஆதார சுதியும், அதற்குப் பஞ்சமமும், குறிலான ரிகமதநி ஐந்தும் நெடிலான ரிகமதநி ஐந்தும், ஆகப் பன்னீர்மையில் ‘சரிகமபதநி’ என சப்தசுர சம்பூரணமாகக் கண்டு; ஆளத்திக்கு வரப்பெறுவது என்று அறி எனக் கொளல் வேண்டும். இன்னும் குறில் ஐந்தும் அ, இ, உ, எ, ஒ என ஓசைபெற எழுப்பவும், நெடில் ஐந்தும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஓசைபெற எழுப்பவும், வ்வும், வ்வும், வ்வும் அதாவது தநத்தொம் நம்தன என்று ஆளத்தி வரப்பெற சப்தசுரமாய்ப் பாடப்பெறுவது எனவுமாம்.

     [ குறிப்பு:-  சரிகமபதநி என்னும் ஏழுசுரம் கொள்ளப்பெறுமுன் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ என்னும் ஏழு உயிர்நெடில்களே ஏழிசை என்று கொள்ளப் பெற்றிருந்தன. அவ் வகையில், உயிர்க்குறில் ஒலிகள் ஐந்துக்கும் இனமான - ஈடான உயிர்நெடில் ஐந்து என்பது ஐந்திசை எனவும், அவற்றின் ஆளத்தி செய்யும் நிலையில் புணரொலிகள் ஆகிய ஐ, ஔ என்னும் இரண்டும் கொள்ளப்பெற்றுள்ளன எனத் தெரிகின்றது. ஏழ்புழை ஐம்புழை யாழிசை கேழ்த்தன்ன; இனம்வீழ் தும்பி வண்டொடு மிஞிரார்ப்ப (பரி.: 8:22-23) என்பதனாலும் அறியலாம்.

வேய்ங்குழல்கள் ஐந்து துளை (புழை) உடையனவும், ஏழு துளை உடையனவும் என இருவகையாய் இருந்துள்ளன. முதலில் ஐந்து பின்னரே ஏழு என்பது இசையறிஞர் கருத்து. எனவே, மேற்கண்ட மேற்கோள் பாட்டில் ஐந்து எனப்பட்டதன் மரபு இதுபற்றி அமைந்ததே. ஐந்தும் ஏழும் பன்னிரண்டாய் ஆளத்தி செய்கையில் அமைகின்றன. இது உடல் யாழுக்கும் பொருந்துகின்றது என்பது வியப்பளிக்கிறது.]

     இனி, உயிர் உடம்பினைப் பெற்ற பயன் யாது என அறியாது; தவறுகின்ற நிலையில் அமைகின்ற பாதகங்களாகிய மாபெருங் கரிசுகளைக் குறித்துச் சிறிது காண்பதும் இவ்விடத்து நலமாக இருக்கும். இதனைத் திருவள்ளுவர் பின்வருமாறு காரணகருமிய விளக்கத்தோடு உரைத்தருளியுள்ளார்.

      அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
        செறுவார்க்கும் செய்தல் அரிது     
- தமிழ்மறை:குறள் 852

பேதைமை, புல்லறிவாண்மை என்னும் இரண்டு அதிகாரங்களை ஆழ்ந்து கற்பவர்க்கு இதன் உண்மை அங்கைக் கனியெனப் புலப்படும்.


          ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
          ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
          ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
          ஆறாறுக்கு அப்புறம் ஆகிநின் றானே
                                                          - திருமந்திரம் 1982

        இயற்கை உண்மையை இயல்பின் உணர்வதற்குத் துணையாக கோடப்பட்ட செயற்கை அமைப்புகள் நேரிதின் பொருள்கொள்ளப்பட்டு, நேரே உள்ளே புகுவதற்கு மாறாக, வெளியேயே கண்ணைமூடிக்கொண்டு சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கின்றோம். அதற்கு இயலிசைநாடக முத்தமிழ்க் கலைநெறியிலும் வழியிருக்கின்றதையே இதுகாறும் அறிந்துகொண்டோம்.  

     கண்ணினும் செவியினும் செம்மைபெறக் கலைநெறியை ஆக்கித் தந்த முன்னோர்களின் உள்ளார்ந்த உண்மைநோக்கம் புரிந்துகொள்ளப்படாமல் பலநூறு தலைமுறைகள் பிறவிப்பயனை பெறமுடியாமல் போயிருக்கின்றது. இக் காலத்திலுள்ள தமிழ மாந்தர் அந்த மூல முத்தமிழ்க் கலைமரபினை அயல்படுத்திக் கொண்டனர் அதாவது சமற்கிருதமயமாக்கி இரண்டுகெட்ட நிலைக்கு ஆளாகிக் கிடக்கின்றனர்.

இயற்கை உண்மையோடு இசைந்தியங்கி வந்த மூல முத்தமிழை – முத்தமிழ் இயங்கியலை – வாழ்வியலை இன்று முகந்தெரியாத – முகவரி தெரியாத நிலையில் வீழ்ந்துகிடக்கின்றோம் என்றதோர் உண்மையினை உளமார உணரப்பெறுகின்ற போதுதான் எந்த ஒரு தமிழப்பிறவிக்கும் தன்னையும் தான் இழந்திருப்பதையும் சரியாக அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் முடியும். அப்படி ஒரு உணர்ந்த நிலையில் வந்துள்ளவர்களுக்குத்தான் தமிழமரபு குறித்த தேடல் உண்டாகும்.

     இந்த உணர்வினை அப்படியே படம்பிடித்தாற் போல எடுத்துக்காட்டுவதாகச் சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆமைந்திருக்கும் நூற்கட்டுரை எனும் பகுதி விளங்குகின்றது. எழுத்துசொல்பொருள் எனத் தொல்காப்பிய அமைப்பியலோடு மிடைந்துநின்று; முற்றிலும் தூய தமிழ வாழ்வியலை – கலைமரபியலைத் தமிழ்கூறு நல்லுலகம் என்பதன் ஒட்டுமொத்தப் பயனாக வைத்துக் காட்டி நம்மை ஏங்கவைக்கிறது! அது வருமாறு:


                குமரி, வேங்கடம், குணகுட கடலா
                        மண்திணி மருங்கின் தண்தமிழ் வரைப்பில்;
                        செந்தமிழ் கொடுந்தமிழ் என்றுஇரு பகுதியின்
                        ஐந்திணை மருங்கின்: அறம், பொருள், இன்பம்;
                        மக்கள், தேவர் எனஇரு சார்க்கும்
                        ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,
                        எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்துஎழு பொருளை
                        இழுக்கா யாப்பின் அறனும் புறனும்
                        அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்து ஓங்கிய:
                        பாடலும், எழாலும், பண்ணும், பாணியும்
                        அரங்கு, விலக்கே, ஆடல்என்று அனைத்தும்
                        ஒருங்குடன் தழீஇ; உடம்படக் கிடந்த
                        வரியும், குரவையும், சேதமும் என்றுஇவை
                        தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்;
                        ஆடி நிழலின் நீடுஇருங் குன்றம்
                        காட்டு வார்போல் கருத்து வெளிப்படுத்து;
                        மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
                        சிலப்பதி காரம் முற்றும்


     சொல்லுக்குச் சொல்லாக நிறுத்திப் படித்துப் பார்ப்பவர்களுக்கு உள்ளத்தின் ஆழத்திலே உண்மைத் தமிழமரபியல் நெறி என ஒன்று உள்ளது என்பதைத் தேற்றத் தெளிவாய்க் காண முடியும்; பேண முடியும். அதனை அறிவறியாமல் அயலார் கைகளில் பறிகொடுத்துவிட உள்ளம் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டாது என்பது திண்ணம்.

     “மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்” என்பதை, “மெய்ப்பொருள்மேல் உரைப்பொருள் முற்றிய முத்தமிழ்” என்று மாற்றிக் கொண்டால், மேற்சொல்லி வந்துள்ள உண்மைக்கு அப்படியே பொருத்தமாக இருக்கும். வாழையடி வாழையென வழிவழியாக வந்துகொண்டுள்ள அந்த மூலத்தமிழ் நெறியினை செந்தமிழ் இயற்கையில் சென்று அறிந்திடுதல் நமக்குள்ள உண்மைக் கடமை என்க.

No comments:

Post a Comment