Thursday, July 18, 2013



தவத்திரு மறைமலையடிகளார் அவர்கள், ‘பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம்’ என்றொரு கண்திறப்புத் தொடரை நம் கண்முன்னே நிறுத்துகின்றார். அதில் இரண்டு காலநிலைகள் காணப்படுகின்றன. ஒன்று, ‘பழந்தமிழ்க் கொள்கை’, மற்றொன்று ‘சைவசமயம்’ என்ற பெயரில் மறுமலர்ச்சி பெற்ற கொள்கை.

[ குறிப்பு:- இதுபற்றிப் மேலைப் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் அவர்களின் குறுந்தொகை முன்னுரைப் பகுதியிலே விரிவாகக காணலாம்.]

பழந்தமிழ்ச் சான்றோர் இன்பம், பொருள், அறம் என்று காட்டியருளிய பொருள்நெறி ஆகிய கழகச் (சங்கச்) செந்நெறியே, அதே அகப்பொருள் புறப்பொருள் அடிப்படைகளின் மூல இழை அறுபடாமல், அப்படியே பத்திமையில் தோய்ந்து எழுந்துவந்த மறுவடிவமே சிவசமயம் (சைவ சமயம்) என்பதாகும். அதனை மிகமிகத் தெளிவாகவும் உறுதியாகவும் அறுதியாகவும் அடிகளார் ‘பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம்’ என்று கடந்த இருபதாம் நூற்றாண்டில் நிலைநாட்டியருளினார்கள்.

சிவ (சைவ) சமயத்தின்கண், காலவோட்டத்தில் புகுந்துவிட்ட அயலின மரபியல்களின் மேலீடுகளையும், தன்னினக் கருத்தியல் கசடுகளையும் அவர் ஒருங்கே சீர்திருத்தினார். சிவசமயத்தின் பொதுமைத் திறத்தினை வெளிப்படையாக விளக்கப்படுத்திய போது, அவர் உட்பகை, வெளிப்பகை எனும் இருநிலையிலுமாக பலபல எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.

ஆரிய வேதமே மூலம் என்று ஆரிய இனச் சார்ப்பாக்கம் செய்யப்பட்டுள்ள எந்த நூலும் சரி, ஆளும் சரி இந்தப் பழந்தமிழ்க் கொள்கை ஆகிய சிவ (சைவ) நெறிக்கு மூலம் அன்று; மூலவர்கள் அல்லர் என்பதை அடிகளார் எவராலும் மறுக்க முடியாத வரலாற்று முறையில், துல்லியமான வல்லிய அறிவியல், மெய்யறிவியல் சான்றுகளோடு நிறுவினார்கள். அப்படியேகூட ஏதேனும் யாரேனும் இருந்தாலுங்கூட, அவை – அவர்கள் முழுத்தமிழ் மரபியத்தின் இடைநிலைகளும் திரிபுகளுமாகவே இருக்கும் – இருப்பர் என்பது திண்ணம்.

பத்திமை நிலைசார்ந்த வணக்கவழிபாட்டினைப் பொருத்த வரையில், சிவனியமும் மாலியமும் மீத்தொன்மையவை. அவற்றின் மெய்யியல் கோட்பாடுகள் வடிவமடைந்து முழுமையுற்று விளக்கமுற்ற நிலை அதற்கும் பிற்பட்டதாகும். இதனை மக்களின் நாகரிகப் பண்பாட்டுப் படிநிலை வளர்ச்சிகளால் அறிய முடியும் - முடிகின்றது. மாந்தர் உருவநிலையில் மட்டுமன்று; கருத்துநிலையிலும் திரிவாக்கம் (Evolution) நிகழ்ந்துள்ளது. காலத்துக் காலம் அவற்றில் ஒருசில கூறுகள் மேலோங்கியும், ஒருசில கூறுகள் சற்று உள்ளடங்கியும் இயங்கிவந்துள்ளன. இவை ஐந்திணை வாழ்வியல் நிலையின் முதிர்ச்சியில்தான் தனித்த வடிவத்தினைத் தெளிவாகப் பெற்றன.

எஃது எப்படியே ஆயினும், அப் பழந்தமிழ்க் கொள்கையின் தொன்மையை இற்றையளவில் கிடைத்துள்ள திருமுறைகளில் முழுதாகத் தேடிவிட முடியாது. மாறாக, ஓர் இடைநிலைப்பட்ட வீழ்ச்சியும் மீட்சியும் கலந்துவந்துள்ள ஒரு தொடர்ச்சியையே காணமுடிகிறது. அதையும் புத்தசமண நெறிகளுக்கு ஈடுகொடுத்து எதிர்நின்ற நிலையிலேதான் காணமுடிகிறது. அதன் மூலநிலையைக் கடல்கொண்ட தென்னாடு ஆகிய குமரி நாட்டிலேயிருந்து தொடங்கிக் காண்பதற்குத் திருமுறைகளுக்கு முற்பட்டப் பல பழைய தென்னூல்களும் ஏன் வடநூல்களும்கூட குறிப்பாகச் செய்திகளைக் கோடிக் காட்டுகின்றன – கோடிட்டுக் காட்டுகின்றன.

இது தொடர்பாக, அடிகளார் செய்தருளிய அரிய நூல்களையும், அவற்றின்கண் பொதிந்துள்ள செயலாக்கத்துக்குரிய மூலத் தமிழ்க் கருத்தியலையும், கருதிக் கற்றுத் தெளிந்தவர்களின் எண்ணிக்கை அவர் காலத்திற்குப் பிறகும் நன்கு பெருகியவண்ணமாக இருக்கின்றது. அத்தகைய உண்மைத் தமிழர்கள் செம்மாந்த தூய தமிழ் நடையிட்டு வந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment