சேவு – சேவல் – காவல்
சேவதி
மஹாலாவண்ய சேவதி என்பது ‚லலிதா
ஸஹஸ்ர நாமம் என்னும் பேராயிரத் திருப்போற்றி நூலில் 48ஆவதாக வருகின்ற ஒரு
திருப்போற்றி. இதிலே கவனிக்கப்பட வேண்டிய சொல் சேவதி என்பதாகும்.
ஒட்டுமொத்தமாக இதற்கு, பேரழகுக்குக் களஞ்சியமாய்
இருப்பவள் என்று பொருள். களஞ்சியம் என்பது நெல் முதலிய தவசங்களை வருங்காலத்
தேவைக்காக காத்துவைக்கின்ற இடம் – பெரும்பெட்டகம். காத்துவைத்தல் என்பதே சேவு என்னும் அடிச்சொல்லுக்குப் பொருளாக இருக்கின்றது.
சேவல் என்னும் தமிழ்ச்சொல் சேவு + அல் என அமைந்திருக்கின்றது. சேவு என்பதைப் போல அதன் முல்குறுக்கம் அடைந்த நிலையில்
உள்ள வடிவம் செவு என்பதாகும். செவு + இலி > செவிலி எனும் சொல்லுக்கு அதுவே மூலம். செவு என்பதன் அடியாகவே மேலைமொழி வழக்கிலும், save – safe என்கின்ற இரு சொற்களும்
இருக்கின்றன.
அழகையெல்லாம் காத்துவைத்த களஞ்சியமாக அம்மை
இருக்கின்றாள் என்பதாக இத் திருப்போற்றித் தொடர் பொருள்குறிக்கின்றது. சேவு + அதி > சேவதி என வந்துள்ளது. சேவு என்பதும் அதி என்பதும் தனித்தனித்
தமிழ்ச்சொற்கள். அவற்றை இணைத்துப் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது. களஞ்சியம்
என்பது சேமித்த இடம் எனக் கொள்வதானாலும் குற்றமில்லை. செம் > சேம் என்பவை சேமித்தல் கருத்துள்ளவை. சேமக்கலம் என்பது தண்ணீர் சேமித்து வைத்துள்ள கலத்தைக்
குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.
முகுடம்
இதே திருப்போற்றி நூலில் 40ஆவதாக வருவது மாணிக்ய முகுடாகார ஜானுத்வய
விராஜிதா என்பதாகும். மாணிக்க மகுடம் போன்ற முழந்தாள்களை
உடையவள் என்பது அதன் திரண்ட பொருள். முகுடம் என்பதே மகுடம் என்று பின்னர்
திரிபுபெற்றுள்ளது. இது தூய தமிழ்ச்சொல். முகுழ்த்தல் (முகிழ்த்தல்) என்பது மேல்புறத்தில்
குமிழ்த்து அடிப்புறத்தில் அகன்று அமைந்துள்ள வடிவினைக் குறித்திடும் வினைச்சொல்.
பூ மலர்வதற்கு முற்பட்ட பருவம் முகுழ் (முகிழ்). அந்த முகுழ் போன்ற வடிவில்தான் மன்னர்கள் தலைமீது
அணிந்துகொள்கின்ற அழகிய மணிக்கற்கள் பதிக்கப்பெற்றுள்ள மணிமகுடம் இருக்கும். அதுபற்றி, முகுழ் + அம் = முகுழம் > முகுடம் என்று
திரிபுபெற்று வந்துள்ளது. முகுடம் என்ற பழந்தமிழ்ச்சொல் அப்படியே வடதமிழ் வழியாக
சமற்கிருத மொழியிலும் தொட்டுத் தொடர்ந்துவந்திருக்கின்றது.
அடவி
அடவி என்பது அடர்த்த காடு. இச் செந்தமிழ்ச் சொல் மேற்படித் திருப்போற்றியில்
59ஆவதாக இடம்பெற்றுள்ள திருப்போற்றியில் அமைந்துள்ளது. ‘மஹா பத்மாடவீ ஸம்ஸ்தா’ என்பது அது. இதிலே அடவி எனும் சொல் அடவீ என ஈறு நீண்டு நிற்பதைக்
காண்க. மாண்பார்ந்த தாமரைக் காட்டில் நன்கு உறைந்திருப்பவள் என்பது தன் திரண்ட
பொருள்.
சடை, அடவி எனும் தனித்தனித் தமிழ்ச் சொற்களைச் சேர்த்து சடாடவி அதாவது சடையடவி (சடைக்காடு – காடுபோல அடர்த்துகாணும்
சடைமுடிக் கோலம்.) போன்ற பல சொல்லாட்சிகள் வழக்குற்றுள்ளன.
கோடரி
மரக்கிளைகளை
வெட்டுவதற்கும் விறகு பிளப்பதற்கும் எனப் பல மரவினை சார்ந்த வேலைகளுக்குப்
பயன்படுகின்ற கோடு + அரி > கோடரி என்னும் தமிழ்ச்சொல் குடாரி என்ற வடிவத்தில் மேற்படி நூலில் பதிவாகியுள்ளது.
‘பவாராண்ய குடாரிகா’ என்பது அந்த்த் திருப்போற்றி. பிறவிப் பெருங்காட்டினை அழிக்கும் கோடரி போன்றவள் என்பது அதன் பொருள். கன்னிகை முதலிய தமிழ்ச்சொற்களில் அமைந்துள்ள கை எனும் பெண்பால் தமிழ் ஈறினையும் சேர்த்து குடாரி + கை > குடாரிகை என்றாக்கி அதனை விளிப்பெயராக மாற்றிய நிலையில் குடாரிகா என்று ஆளப்பட்டுள்ளதைக்
கண்டு தெளிக.
திருக்கொடி அல்லது திருவல்லிப் பேராயிரத் திருப்போற்றி எனும் ‚லலிதா ஸஹஸ்ர நாமம் என்ற சமற்கிருத நூலில் இடம்பெற்றுள்ள தமிழ்ச்சொற்கள் சாலப் பலவாகும்.
அவற்றுள்,
1. அக்னிகுண்ட [குண்டம் –
குழி : 4];
2. பூதா [பூத்தவள் –
தோன்றியவள் : 4];
3. மனோரூப இ‡ு கோதண்டா [மனம்-உருவம்
– மனவுருவம், இக்கு >
இ‡ு(கரும்பு), தண்டு + அம் > தண்டம் இது தமிழ்ச்சொல்.-10];
4. முகசந்த்ர ம்ருகநாபி
விசேஷகா [முகம், மருகம், நாபி – நாப்பு > நாப்பி >
நாபி ஒ.நோ.: சுரப்பு – சுரப்பி > சுரபி, :
16];
5. மீனாப லோசனா [மீன் :
18];
6. நவ சம்பக[செண்பகம்:19];
மண்டலா [மண்டலம் : 22];
7. காமேச பத்த [காமம் -
ஈசன்; பத்துதல்-பத்தல் = கட்டுதல் : 30];
8. முக்தா [முத்து: 32];
9. ரத்ன கிங்கிணிகா
[கிண்கிணி : 38];
10. தூணா [தூணி – அம்பறாத்
தூணி – தூணம் : 41];
11. பதத்வய [பதம் = அடி;
பதி = அடி : அடியிணை: 45];
12. வல்லபா [வல் – வல்லமை –
வல்லவள் – வல்லபம் – வல்லபை : 54];
13. நகர நாயிகா [நகரம்,
நாயகம் : 56];
14. சிந்தாமணி [சித்து –
சிந்து > சிந்தை(எண்ணும் உள்ளம்):மணி : 57];
15. கதம்பவனவாஸினி
[கடம்பம், : 60];
16. சாகர [சாகரம் = கடல்];
17. கோடி கோடிபி [கோடி கோடி
: 67];
18. சக்ரராஜ [சக்கு + அரம்
> சக்கரம் : 68];
19. மூலமந்த்ராத்மிகா
[மூலம், மந்திரம்: 89];
20. அகுலா [அல் > அ;
குலம் : 96];
21. ஸமயாந்த:ஸ்தா [சமை >
சமையம் > சமயம் : 97];
22. மூலாதார ஏக நிலயா
[மூலம், ஆதாரம், நிலையம் > நிலயம் : 99];
23. ஸஹஸ்ராரா [ ஆரம் : 105];
24. குண்டலினீ [குண்டு >
குண்டலி > குண்டலினி : 107];
25. நிஷ்களங்கா [களங்கம் :
153 ];
26. கோப்த்ரீ [காப்பு >
வட. கோப்: 265];
27. பகவதீ [பகவு + அதி >
பகவதி : 279];
28. காந்தா [காந்தம்,
காந்தை : 329]; ...
29. தேச கால அபரிச்சின்னா [தேம்,
காலம் : 701]
30. குருமண்டல ரூபிணீ [
குரு, மண்டலம் : 713]
31. கணாம்பா [ கணம், அம்மா (அம்பா) ]
32. மேருநிலயா [மேரு, நிலை – நிலையம் : 775]
33. விச்வதோமுகீ [ விசு (விசும்பு), அதோ, முகி :
780]
34. மந்த்ர ஸாரா [ மந்திரம், சாறம் > சாரம் :
846]
35. சதாசிவ குடும்பினீ [சதாசிவம், குடும்பினி :
911]
36. மனோமயீ [ மனம், மயி : 941]
37. தரா [ தரை : 955 ]
38. த்ரீகண்டேசீ [ கண்டம், ஈசி : 983]
இவற்றைப் போல இன்னும்
எத்தனையோ தமிழ்ச்சொற்களும் தமிழ்வழிச் சொற்களும் இந்த நூலிலே இருக்கின்றன. இந்த
ஒருநூல் மட்டுமன்று; இப்படியாக ஒவ்வொரு நூலையும் எடுத்துப் பகுத்தாய்ந்து
பார்த்தால் அவற்றிடையே தமிழ் விரவி நிற்கின்ற நேர்நிலை, மறைநிலை, திரிநிலை என்னும் மூன்று நிலைகள்
தெற்றெனத் தெரியும். ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் சும்மா இது தமிழ், இது சமற்கிருதம்
என்று வாய்ப்பந்தல் இடுவதெல்லாம் ஒருசார்பான போக்குளாகும். அவை நடுநிலையால் நம்மை
வழிநடத்தி உண்மையின்பால் சேர்ப்பன ஆகா.
No comments:
Post a Comment