தவநிலைகள்
தருகின்ற
பதநிலைகள்
சிவவுலகத்திருத்தல் [வட. சாலோகம்]
இஃது அவ்வுலகங்களில் எங்கும் தடையின்றி இயங்கும் உரிமையைப் பெறுதல்
– பெற்றிருத்தல் - இயங்குதல். ஒரு வீட்டில் பணிபுரியும் பணியாளர் அவ்வீட்டில்
எங்கு வேண்டினும் செல்லுகின்ற உரிமையைப் பெற்றிருத்தல் போன்ற உரிமை நிலையே
இங்குள்ள உரிமைநிலை - வாழ்வுநிலை.
இதுபற்றித்தான் இப் பயனைத்
தருகின்ற சீலம் (சரியை)
ஆகிய தவநெறி, தொண்டுநெறி
(தாசமார்க்கம்) என்று கூறப் படுகின்றது.
இங்குச் சிவ
உலகம் என்பது முப்பத்தோராவது
மெய்யிலிருந்து முப்பத்தாறாவது மெய் வரைக்குமான தூய மாயை நிலையிலுள்ள உலக
வகைகளாகும். நாம் வாழ்கின்ற உலகத்தைப் போல அவ்வவ் உலகத்திற்கும் அவற்றுக்குரிய
நடைமுறை நிலைகள் அமைந்திருக்கும்.
சிவவணுக்கம் [வட.
சாமீபம்]
இஃது அவ்வுலகங்களில் மேற்கூறிய பணியாளர் போல விலகி நில்லாது,
பிள்ளை போல அங்குள்ள புவன பதிகள்
ஆகிய உலகத் தலைவர்களோடு அருகில் இருக்கும் உரிமையைப் பெறுதல் – பெற்றிருத்தல் –
இயங்குதல் - வாழ்தல். இதன் அடிப்படையில்தான் இப் பயனைத் தருகின்ற நோன்பு
(கிரியை) ஆகிய தவநெறி
மகன்மைநெறி (சற்புத்திர மார்க்கம்) எனப்படுகின்றது.
இதுவும் தூய மாயையில் உள்ளதாகும்.
சிவவுருவப்பேறு [வட. சாரூபம்]
இஃது அவ்வுலகங்களில் தோழர் போல அங்குள்ள புவன
பதிகளாகிய உலகத் தலைவர்களோடு ஒத்த உருவம், பெயர் முதலியன பெற்று அளவளாவியிருந்து
இயங்குகின்ற உரிமையினை - வாழ்வினை உடையவர் ஆதல். இதனால்தான், இப் பயனைத் தரும் செறிவு
(யோகம்) ஆகிய தவநெறி என்பது தோழமைநெறி (சகமார்க்கம்) எனப்படுகிறது. இதுவும் தூய மாயையில்
உள்ளதாகும்.
இத்தகைய பதமுத்திகளை அடைந்தவர்கள் அத் தவங்களினால்
பெற்ற பயன்கள் தீர்ந்திடும் நிலையில், மீண்டும் நிலவுலகிற் பிறந்து அறிவம்
(ஞானம்) பெறுவதற்கு வாய்ப்பான நல்ல சூழலைப்
பெற்று, முன்னைத் தவத்தை முற்றச்செய்து, குருவருளால் ஞானத்தை அடைந்து,
வீடுபேற்றினை எய்துவர். இதற்குத் திருமூலர்தம் வாய்மொழியே நல்ல சான்றளிக்கிறது.
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன்
றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன்
றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன்
றாகத் தமிழ்ச்செய்யு மாறே
இதன் வழியாகத் திருமூலர் நமக்குத் தந்துள்ள மெய்யியல்
விளக்கம் என்ன தெரியுமா? எத்தனை
எத்தனை பிறவி கண்டு விட்டோம், இன்னும் என்ன மறுபடியும் பிறவிபெறுவது? போதும்
இந்தப் பிறவிச் சுழற்சி மயக்கம் – பிறவி மயக்கம்.
தவநிலைகளான மேற்சொன்னவற்றை
நிறைவாகச் செய்யாத குறையால் அவற்றால் எய்தத்தக்க சிவமாகும் தன்மை
வாய்க்காதிருக்கிறது. இப்போது இறைவன் என்னை அத் தவத்தினை மேற்கொண்டு
நிறைவிப்பதற்கு ஏற்ற நிலையில், யாதொரு குறையுமில்லாத நிலையில்,
படைத்திருக்கின்றான். இதனை நான் நன்றாக உணர்ந்துகொண்டு விட்டேன்.
எனவே, மேலும் மேலும் பிறவி
வட்டத்துக்குள் புகுத்தும் நிலைகளில் செல்லாமல், செம்பொருள் கண்டு பிறப்பு என்னும்
பேதைமையிலிருந்து அகல்வதற்கு நான் புறத்தே வேட்கையுற்றுப் பாழ்பட்டுப் போகாமல்,
அகத்தே என்னை ஆளுடைய அவ்விறைவனையே குறித்துநின்று; அவனை, அவனே அளித்துள்ள
அருமைமிக்கத் தமிழால் தவஞ்செய்து உய்யுமாறு படைத்திருக்கின்றான். நான் அத் தவத்தை
நன்றாகச் செய்திருக்கின்றேன். எனவே, இனியும் எனக்குப் பிறவி
மயக்கம் என்பதேது? என்று
கேள்வியும் கேட்டு அதற்கு விடையும் கூறுகின்றார்.
அடுத்து, சீலம் (சரியை) முதலியவற்றுக்கு ‘இடைநிலைப் பயன்’ பதமுத்தியாயினும், உண்மைப் பயன் ஞானமேயாகும். அப்
பதமுத்தி நிலைகளிலும் அவர்களின் அறிவுநிலை விளக்கமுற்ற வண்ணமாகவே வளர்ந்துகொண்டு
இருக்கும். அதில் யாதொரு வற்புறுத்தல், நெருக்குதல் என்று எதுவுமே கிடையாது.
நிலையாமையை உணர்ந்திடும் அளவிலே அத் தவம் மேம்பட்டு வருவதாகிறது.
இவ்விடத்து நன்கு உணரத்தக்க மற்றோர் உண்மை யாதெனில், மேற்சொன்ன
மூன்று பதமுத்தி ஆகிய பதநிலைப் பேறுபெற்றவர்கள் யாருமே இறைவனை அடைந்தவர்கள்
அல்லர், அவர்கள் புவனத் தலைவர்களின் உலகங்களை அடைந்தவர்கள் என்பதாகும்.
இம் மூன்று நிலைகளும் மாற
நேரும் – தீர நேரும். ஆனால், நான்காம் நிலையாகிய அறிவநிலை என்னும் ஞானநிலை மட்டுமே தோற்றமாற்றம் – தோற்றக்கேடு என்பவற்றுக்கு
உட்படாததாக அவற்றைக் கடந்து முழுமைசான்ற செவ்வியும் நிறைமையும் உடையதாக
இருக்கிறது. இதனைத்தான் திருவள்ளுவப் பெருமானார் சார்புணர்ந்து
(சார்பு உணர்ந்து) சார்பு
கெடல் என்கிறார்.
அவ்வாறு, சார்புணர்ந்து
சார்புகெடல் வழியாக அமைவதுதான்
மெய்யான கல்வி; அது கசடறுக்க வல்லது. அவ்வாறு கசடு அறப்பெற்றவர்கள் கற்றவர்கள் –
கற்றதனால் ஆய பயனைக் கண்டவர்கள். கசடு அறப்பெற்றதனால் அறிவில் தூய்மைநிலையை
அடைந்தவர்கள். அவ்வறிவுத் தூய்மையினால் எழப்பெற்ற உள்ளொளித் துலக்கத்தினால் –
விளக்கத்தினால் வாலறிவன் நற்றாள் தொழுதல் என்னும் பயனிலைக்கு உய்யப்பெற்ற பேறுபெற்றவர்கள்.
அவர்களைக் குறித்துத்தான், கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார்
தலைப்படுவர்; மற்றுஈண்டு வாரா நெறி என்று
விளக்கியருளியுள்ளார்.
எனவே, சீலம், நோன்பு, செறிவு என்பவற்றின் நிலைப்பேறின்மையை உணர்ந்துவிட்ட உத்தம
ஞானிகள் அவற்றை விரும்புவதில்லை.
அவற்றையும் கடந்துசென்று, சித்தமலம் அறுக்க விரும்பும் எவரும் இவற்றைப்
புறக்கணித்தே ஆவர். அதனால்தான், அத்தகையவரான அகப்பேய்ச் சித்தர்,
சரியை ஆகாதே – அகப்பேய்
சாலோகம்
கண்டாயே
கிரியை
செய்தாலும் – அகப்பேய்
கிட்டுவது
ஒன்றுமில்லை!
யோகம்
ஆகாதே – அகப்பேய்
உள்ளது
கண்டக்கால்
தேக
ஞானமடி – அகப்பேய்
தேடாது
சொன்னேனே!
என்று பிறவிக்கு
வித்தாகும் நிலைகடந்து நின்று பாடியருளிச் செய்திருக்கின்றார்.
என் அகம் ஆகிய
பேய்நிலையில் ஆடுகின்ற மனமே, சீல (சரியை) நிலை உனக்குப் பயனாக இராது; ஏனெனில்,
அதனால் நீ அடைந்திருந்த சாலோகம் என்னும் சிவவுலகிருப்புப் பேறு
உனக்கு நிலைபெறவில்லை – அது கழிந்துபோன ஒன்றாகிவிட்டது அல்லவா? அதுபோலத்தான்,
நோன்பு (கிரியை) நிலைகூட வாய்த்தாலும் பெரிதாகப் பயன் ஒன்றும் கிட்டிவிட மாட்டாது.
அதற்கும் உயர்ந்த ஓகநிலையும் மெய்ப்பொருள் கண்டக்கால் அதுவும் கடந்து மேற்செல்லத்
தக்கதே என்பது புரிந்துவிடும்.
ஆகையால், திடம்பட மெய்ஞானம்
(தேகஞானம்)
பெறுவது ஒன்றே உனக்கு உய்வளிக்கும்; உண்மையாகவே நீ உடம்பினைப் பெற்ற பயனை உனக்கு
எய்துவிக்கும். காண்க:- [ ஒ.நோ.: 1. உடம்பினைப்
பெற்ற பயன்ஆவது எல்லாம் உடம்பினுக்குள் ஈசனைக் காண் – 2. மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால் ஈசனைக்
காட்டும் உடம்பு என்பவை ஔவைக்
குறள் ]
ஞானத்துக்குத் திறவி நம் மெய்யிலேயே (தேகத்திலேயே) இருக்கிறது.
அதனை ஆராய்ந்து கண்டுபிடித்துக்கொள் என்று ‘தேகஞானம்’ என்ற தொடரால் சொல்லாமல் சொல்லுகின்றார் நம் அகப்பேய்ச்
சித்தர்பெருமான்.]
எனவே, கீழ்ப்படிகளில் உட்கார்ந்துவிடாமல், மேலேறிச் செல்வதற்கு
வழிகண்டு கொள்வாயாக என்று அகப்பேய்ச் சித்தர்பெருமான் நமக்கு உள்ளதை உள்ளவாறு வெட்டவெளிச்சமாக்கிக்
கூறுகின்றதை ஆராய்ந்து பாருங்கள். இதனைப் பாம்பாட்டிச் சித்தர்பிரானும்
பின்வருமாறு விளக்கியுள்ளார். அது வருமாறு:
எண்ணரிய புண்ணியங்கள்
எல்லாம் செய்தும்என்?
ஏகன்அடி நெஞ்சமதில் எண்ணா விடிலே
பண்ணரிய தவப்பயன் பத்தி இல்லையேல்
பாழ்படும் என்று துணிந்து ஆடு பாம்பே
எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன்என்?
எங்கள்ஆதி பதாம்புயம் எண்ணாக் காலையில்
இவ்வுலக வாழ்வுதானும் இன்றே அறும்என்று
எண்ணிக் கர்த்தன்அடி நினைந்து ஆடு பாம்பே
என்று பயன்கருதிச் செய்து
பெறப்பட்ட எல்லாமே ஓர் எல்லையில் அற்றுப் போய்விடும் என்பதை நினைவூட்டியிருத்தலைக்
காண்க.
சிவநிலைப்பேறு[வட. சாயுச்சியம்]
கடவுளை அடைவதற்கு ஞானம்
பெற்றாக வேண்டும் அதாவது வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்வதற்கு வேட்கை ஒழிந்தாக
வேண்டும். ஞானம்
என்பது வேட்கை ஒழிந்திடம் ஆகிய வேண்டுதல் வேண்டாமை இலாத தன்மை.
வேட்கை ஒழிந்துநிற்கும்
நிலை எதுவோ, எத்தகையதோ, அதுவே - அத்தகையதே சிவம் எனப்படும் தூய இறைநிலை. இந்த நிலைதான் சிவமாம்நிலை [சாயுச்சியம்] வாய்க்கும் நிலை. இதுவே, ‘சித்தமலம்
அறுவித்துச் சிவாமாக்கி எனையாண்ட அத்தன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார்’ என்று மணிமொழிப் பெருமானார் ஓதியருளிய சிவநிலைப்பேறு.
அடுத்து, சீலம் (சரியை), நோன்பு (கிரியை), செறிவு (யோகம்) என்னும் மூன்று தவங்களே மேற்சொன்ன ஞானத்தை
எய்துவிக்குமேயன்றி, வேள்வி
முதலான வேட்கைநிலை சார்ந்த முயற்சிகள் அல்லது செயல்முறைகள் அதனை ஒருபோதும் எய்துவிப்பது
இல்லை என்பது சிவமெய்யியல் செந்துணிபு.
வேட்கை ஒழிந்திடம் தானே அருமறையந்தம் (வேதாந்தம்) ஆகின்ற இடம். வேண்டுதல் வேண்டாமை இல்லாத நிலையில் அடைகின்ற அந்த நிலைக்கே வேண்டுதல்
வேண்டாமை இலான் அடிசேர்தல் என்று பெயர்
வாய்ப்பதாகும்.
வேண்டுதல்
ஆகிய வேட்கையை ஒழிப்பதற்கு மாறாக, அவ் வேட்கையை மிகுத்து வேண்டுகின்ற நிலையில்,
விடுபட முடியாமல் அதிலேயே கட்டிவைக்கின்ற இடமும் கருத்தும் செயலுமாகிய வேள்விநிலை
– வேட்டல்நிலை கொண்டு ஞானம் எய்துவது என்பது ஒருபோதும் முடியாத ஒன்றாகும்.
இதனைச் சிவஞானபோதம் மிகத் தெளிவாக விளக்குகின்றது. அதிலும் உயிர்க்கொலை
வேள்விகள் என்பவை சிவஞானப்
பேற்றுக்கு எவ்வகையிலும் ஏற்பில்லாத அறக்கேடானவையாகும். சித்தர் சிவவாக்கியரும்
இதுபற்றி மெய்கண்டார்க்கும் முன்பதாக உலகோர்க்கு எடுத்துவிளக்கி வழிகாட்டியுள்ளார்.
நெருப்பைமூட்டி
நெய்யைவிட்டு நித்தநித்தம் நீரிலே
விருப்பமோடு
நீர்குளிக்கும் வேதவாக்யம் கேளுமின்
நெருப்பும்
நீரும்உம்முளே நினைந்துகூற வல்லிரேல்
சுருக்கம்
அற்றசோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே
-
சிவவாக்கியம் 26
ஞானப்பேறு என்பதைத்
திருவடிப்பேறு எனவும், அதற்கு செவ்வி எய்துதற்குக் கொள்ளப்பெறுகின்ற உணர்வினை திருவடியுணர்வு எனவும் குறிப்பது தமிழ்ச்சிவ மரபு. இறைவன்
திருவருள் பதிவுறுதல் என்பதனைத் திருவடி
சூட்டுதல் என்பதும் இவ் வகையில்
அமைந்த மரபாட்சிகளே. திருக்குறளில் வருகின்ற அடி, தாள் என்னும் சொற்களுக்கு வேட்கை
ஒழிந்திடம் என்னும் அந்நிலையே
கருத்துவிளக்கமாக இருப்பதை ஒப்பிட்டு உணரலாம்.
மேலும், இதனைக் குறித்தே அவா அறுத்தல் என்ற ஓர் அதிகாரமே தெய்வத் திருக்குறளில்
அருளிச்செய்யப் பெற்றிருக்கின்றது. இதனை எல்லோரும் ஆற அமர ஓதி ஓதி சிந்தித்துத்
தெளிந்தாக வேண்டும்.
திருக்குறளைப் பரிமேலழகர் போக்கில் பேசுவதும் எழுதுவதும் உண்மைக்கு ஒருபோதும்
யாரையும் ஆற்றுப்படுத்தாது. திருக்குறளின் அகப்பொருளை எத்துணை எளிமையாக அவர்
எடுத்துக்கொண்டுவிட்டார் என்பதை அவர் அறத்துப்பாலுக்கு எழுதியுள்ள தொடக்கவுரை ஆகிய
உரைப்பாயிரமே காட்டிவிடும்.
அதாவது,
“ இந்திரன் முதலிய இறையவர்
பதங்களும், அந்தமிலின்பத் தழிவில்வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு
உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை ... அவற்றுள் அறமாவது மனு
முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம் வழக்கு
தண்டமென மூவகைப்படும். ”
என்று பரிமேலழகர்
எழுதுவது, மேற்சொன்ன வேட்கை ஒழிந்திடம் எனப்படும் வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்தல் என்பதற்கு அதாவது ஞானம் கூடுவதற்கு (அடிசேர்தல் – ஞானம்பெறுதல் - ஞானமடைதல்) என்று
ஆற்றுப்படுத்துவது அன்று.
மனுநூலின்படி நடந்தவர்கள்
– நடக்க முற்படுபவர்கள் தமக்கு இருந்த மனிதத் தகுதியையே இழந்துவிடுவர் எனும்போது,
இறைநிலையை எய்துவது என்பது எப்படி வாய்ப்பதாகும்?
மேலும், இதிலே இறை,
இறைவன் என்ற சொற்களின்
மெய்ப்பொருளினின்றும் இழிந்துசென்று; இந்திரன் முதலிய தேவர்களை இறையவர் எனவும், அவர்கள் பெற்றுள்ள பதநிலை உலகுகளை இறையவர்
பதம் எனவும், அவர் எடுத்துள்ள எடுப்பே மேற்சொன்ன
சிவஞானபோத மெய்யியல்படியும் திருக்குறள் மெய்யியல்படியும் தவறானதாகும்.
பதநிலையைக் குறிக்கும் இந்திரன்
முதலிய இறையவர் பதம் என்பது திருவள்ளுவர்
அருளிச்செய்துள்ள கடவுள் வாழ்த்தில் கூறியுள்ள பற்றற்ற பற்றாகிய இறைப்பேற்றுக்கு
ஆற்றுப்படுத்துகின்ற மெய்ப்பொருள் கோட்பாட்டுக்கு முற்றிலும் புறம்பான கருத்து.
இந்திரனுக்கும் இந்திரப் பதத்துக்கும் அங்கே இடமேயில்லை.
அதைவிடப் பெருந்தவறு அதாவது மெய்யியல் பிசகு யாதெனில், கடவுள் வாழ்த்து என்பதற்கு அவர் வரைந்துள்ள விளக்கம் முழுமுதற் கடவுளை
நேரே கூறாது, முத்திருமேனிகளைத் தொடர்புறுத்தியது ஆகும். இவை திருவள்ளுவரை உணராத
தன்மையையும் அவரின் (பரிமேலழகரின்) ஆரியக் கருத்தியல் சார்பினையுமே எடுத்துக் காட்டுகின்றன. எண்குணத்து
இறைவனைச் சத்துவம் முதலிய முக்குணத்துள் நிற்கும் முத்திருமேனியருள் ஒருவர் என
வைத்து; ‘ஏற்புடைக் கடவுள்’ என்று குறித்திருப்பது முழுதும் பழுது, முற்றும்
பிழை. அது வருமாறு:-
“ அதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல்
எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து
ஏற்புடைக் கடவுளை யென அறிக; என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய
உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம்மூன்று
பொருளையுங் கூறலுற்றார்க்கு அம்முவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து
அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரென உணர்க.“
மேற்படிக் கடவுள்
வாழ்த்து அதிகாரத்துக்கான
உரைவிளக்கம் இதுவரையிலும் முழுமுதற் கடவுள் தன்மைக்கு எடுத்துக்கூறிவந்த இயல்புகளோடு அணுவளவேனும்
ஒத்துப்போகின்றதா பாருங்கள். இல்லையே, ஏன்? இதுதான் ‘ஒன்று கிடக்க ஒன்று கூறுதல்’ என்னும் பிழைபடுதலாகும். இறையவர்
பதங்கள், அந்தமில் இன்பத்து அழிவில் வீடு
என்பவற்றின் வேறுபாட்டினைக் கண்டிருந்தும் அவர் சறுக்கிவிட்டாரே.
திருவள்ளுவர்
அருளிச்செய்த கடவுள் வாழ்த்து முற்றிலும் ‘அந்தமில் இன்பத்து அழிவில்
வீடு’ என்பதைக் குறித்து
ஆற்றுப்படுகின்றதே தவிர, இறையவர்கள் பதங்களையோ, ஏற்புடைக் கடவுள், வழிபடு கடவுள்
என்பவற்றையோ காட்டவில்லை – குறிக்கவில்லை.
முழுமுதற் கடவுள் ஆகிய - பற்றற்ற பற்றாகிய பரம்பொருளைக் குறித்துத் திருவள்ளுவர்
அருளிச்செய்த கருத்தொருமை அறுபடாது இழைந்துவரும் கருத்தோட்டத்தைச் சிவனியம்,
மாலியம், புத்தம், சமணம் எனப் பல
மதநெறிகளில் சார்புகூறிச் சிதறலித்துக் காட்டியுள்ளார்.
அவர் எழுதிய உரையானது,
வெளிப்பார்வைக்கு அவர்தம் பெரிய பொதுமை நோக்கினைக் காட்டுவதாகத் தெரிகின்றது.
அவ்வாறு தெரிகின்றதும் முன்னை உரைப்பாயிர
முன்விளக்கப் பகுதியில் முத்திருமேனியரைக் குறித்ததனைப் படித்து மறந்துவிட்ட
நிலையிலே தெரிகின்ற ஒரு பொய்த் தோற்றமாகும்.
ஏன் இதனை இவ்விடத்து
எடுத்துக்காட்ட நேர்ந்ததென்றால், சும்மா ஏட்டுப் புலமையினால் இறைநூல்களுக்கு
உரைகூறப் புகுந்தால், இப்படித்தான் மெய்ப்பொருள் காணமாட்டாமல், பொய்ப்பொருள் கூற
நேரும் என்பதைப் பட்டெனத் தெளிவதற்கேயன்றிப் பரிமேலழகர்தம் பெருமையினைச் சிறுமை
செய்வதன்று. மாறாக, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே
மிகும் என்றாங்கு; எவ்வளவு
கற்றறிந்தவர்க்கும் அடிசறுக்கிவிடும் என்ற உண்மையினை உணர்வதற்கும் –
உணர்த்துவதற்குமேயாம். மூல மறைநூல் –இறைநூல் உண்மையினை எங்கும் எப்போதும்
எல்லோரும் உணர்ந்தவண்ணமாக இயங்குவது நலமாகும்.
பரிமேலழகரின் தமிழ்நடை
அழகுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. அத்துணை அழகும், அறிவுநிலையில் உண்மையோடு
இயைந்துநில்லாவிடில் இப்படித்தான் ஒளியற்றுப்போகும்.
ஆகவே, யார்யாரோ
எழுதிவைத்துள்ள உரைகளைக் கற்றுத் தலைக்கனம் கொண்டு; சும்மா மனப்பாடமாக்கிக் கொண்ட
இலக்கண இலக்கிய மேற்கோள்களால் மற்றவர்களை மருளச்செய்து வருகின்றவர்கள் யாராக
இருந்தாலும் அவர்களிடத்து நாம் விழிப்பாக இருந்து; நம் அறிவையும் உணர்வையும்
காத்துக்கொள்ள வேண்டும் என்பது மிகமிக இன்றியமையாத அகப்பணியாகும்.
பதமுத்தி மூன்றும் பழுதுஎன்று கைவிட்டு
இதம்உற்ற பாச இருளைத் துரந்து
மதம்அற்று; எனது-யான் மாற்றிவிட்டு; ஆங்கே
திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே
-
திருமந்திரம் : 2496
சிவவுலகத்து
இருத்தல்(சாலோகம்), சிவவணுக்கம்(சாமீபம்), சிவவுருவப் பேறு(சாரூபம்) என்னும்
மூன்றும் பதமுத்திகள். அவை மீண்டும் பிறக்கும் நிலையில் சேர்ப்பவை; பரமுத்தி ஆகிய
சிவநிலைப்பேறு என்பது மட்டுமே பிறவிப் பெருங்கடலை நீந்துவிக்கும் பேறு.
No comments:
Post a Comment