Thursday, July 18, 2013



தமிழ்மெய்யியல்

தமிழ்மெய்யியல் என்பது ஒருவர் இருவர் மேற்கொண்டு வாழ்ந்து உருப்பெற்றுள்ள; ஒருநூற்றாண்டு இருநூற்றாண்டு முயற்சியன்று. அது  பற்பல்லாயிரவர் பல்லாயிரமாண்டாய்த் தேடித் தேடித் தேறிய தேற்றம். உயிர்களின் குறிப்பாக மக்களின் கூர்தலறம் எனப்படும் படிநிலை மாற்றத்தால் மெல்லென எய்திவந்த அறிவுநிலை வளர்ச்சிகளே இக் கோட்பாடுகள் எனலாம்.
பின்னாளில் நடந்துள்ள வடமொழி மயமாக்கம் அல்லது சமற்கிருத மயமாக்கம் என்ற ஒன்றினால், அவற்றின் புறவுருவம் தமிழுக்கு அயல்போலத் தெரிகின்றது. ஆனால், அவற்றின் கருத்தியல் தோற்றமும் தொடர்ச்சியும் பழக்கமும் பயிற்சியும் என்று நோக்கும்போது அவற்றின் அகவுருவம் நன்றாகப் புலப்படுகின்றது. அவற்றின் கொப்புங் கிளையும் இணுக்கும் அவை தமிழ் மண்ணின் மூலக் கருத்தியல்கள் என்று தெற்றெனத் தெரிவிக்கின்றன.
திருமந்திரம் ஒன்பதாம் தந்திரத்தில் ‘ஒளி’ எனும் தலைப்பின்கீழ் காணப்படுகின்ற பதினேழு திருப்பாக்களை ஒரு கண்ணோட்டமிட்டாலே போதும், தமிழர்தம் அறிவார்ந்த இயற்கையுண்மை குறித்த மெய்யியல் கோட்பாட்டின் மூலநிலை நன்றாகப் புலப்பட்டுத் தோன்றும்.
கால வகையினாலே, ஆதியில் அவற்றுக்கு இருந்த தூய தமிழ்ப்பெயர்கள் பலவும் பிறமொழி மயக்கவுணர்வினால் பிறழ்ந்தும்; பிழைபட்டும்; மாற்றப்பட்டும்; மயங்கி; மங்கி; மறைந்திருந்தாலும்கூட இன்னமும் அதன் உள்ளார்ந்த வீறியம் குன்றாதிருக்கிறது.
ஒவ்வொரு கருத்துநிலை அல்லது இயக்கநிலை குறித்துக் குறியிட்டுக் கொள்ளப்பட்டுள்ள குறியீடுகள் உவமை, உருவகம், குழூஉக்குறி என்னும் ஒப்பீட்டுத் தன்மையில் அவ்வக் காலத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒருசில மற்றொரு காலக் கட்டத்தைச் சேர்ந்தவர்களால் பிறழவுணர்ந்து ஒன்று கிடக்க வேறொன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டக் கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அவ் ஒருசிலவற்றைக் காரணமாகக் காட்டி; ஒட்டுமொத்தத்தையும் அடியோடு புறக்கணிக்க முற்படுவது பேரிழப்பாக முடியும்.
இவ் வகையில் இன்னுஞ் சிறிது ஆழ்ந்து பார்க்கையில், தமிழர் என்ற ஒரே பேரினத்தவராக இருந்தாலும், அவர்களின் சிந்தனைத் திறத்தினாலும் செந்துணிபு அடைவினாலும் அவை ஒருசில வகையினவாக அவர்களிடையே கிளர்ந்து கிளைத்திருக்கின்றன என்பதே வரலாற்றுக்கும் வாழ்வியலுக்குத் ஒத்துக்காணும் உண்மையாக இருக்கிறது. தமிழர் என்பதால் அனைவருமே ஒத்த ஒரே கொள்கையினராகத்தான் இருந்தனர், இருந்தாக வேண்டும் என்னும் யாப்புறவில்லை. இதனை நன்கு ஊன்றிக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
இற்றை நிலையில், இந்த மெய்யியல்களையெல்லாம் ஆரிய மொழியாகிய சமற்கிருத மொழியிற் காணப்படுகின்ற எண்ணிக்கையில் நான்காக இருக்கின்ற சதுர்வேதத்தை ஒப்புக்கொண்டவை, ஒப்புக்கொள்ளாதவை என்று இரண்டு வகையில் பிரித்துக் கூறுகின்ற போக்கு தவறானதாகும். இதுதான் – இந்த இடந்தான் சமற்கிருத வயமாக்கம் என்னும் சூழ்ச்சி நிற்கின்ற பொய்மாயத் தலம் என்று பொறுத்துணர வேண்டும். இயற்கை உண்மைக்கு அந்த ஆரிய நால்வேதம் என்பவைதாம் உரைகல்லா? ஆரியத்திற்கு அதனை அவ்வாறு கொள்வதென்றால் அதுபற்றி நமக்குக் கவலையே இல்லை. ஆனால், நான்மறைத்தமிழ் மரபுக்கு அந்த ஆரிய நால்வேதம் எப்படி மூலமாக முடியும்?
எதையும் ஆராய்ந்துகொள்ள வேண்டும் அல்லவா? அவர்கள் வல்லடி வழக்காகச் சொல்லிவரும் போக்கிலேயே நாமும் நம் அறிவைச் சற்றும் பயன்படுத்தாமல் நம் மரபியலை விட்டுக்கொடுப்பதும் இன்னுஞ் சொன்னால் புறக்கணிப்பது மிகமிகப் பேதையானது.

தமிழ் நூல்முறைத் தலைமைக்கு                            வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது

தமிழ் நூல்முறைத் தலைமைக்கு வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஆரிய நூல்முறைத் தலைமைக்கு இடைக்காலத் தமிழினம் கூண்டோடு அடிமைப்பட்டுப் பெருமையல்லாப் பெருமைபட்டுக்கொண்டது. மூன்றாம் தமிழ்க்கழகக் காலத்திற்குப் பிறகு, தமிழ்மரபியல் தாங்குவாரற்று – போற்றுவாரற்றுப் போய்விட்டது என்பதே நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது வரலாற்று உண்மையாகும்.
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும்’ என்னும் திருவள்ளுவத் திருத்தொடர் தமிழியத்திற்கும் அதனைக் கொண்டு வாழ்ந்திருந்த தமிழினத்திற்கும் ஏற்பட்ட ஒரு பெரிய வரலாற்று உள்வீழ்ச்சியினை (அகவீழ்ச்சியினை) உணர்த்துகின்றது. அந்த உள்வீழ்ச்சியினைத் தொடர்ந்துதான் அன்னியர்க்கு இடங்கொடுத்துவிட்டதால் புறவீழ்ச்சி நிலைகள் பல கடந்த மூவாயிரம் ஆண்டுகளாய் ஏற்பட்டுக் கொண்டுள்ளன.
‘வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது’ என்று தமிழைத் திராவிடப் போர்வைக்குள் பொதித்து; வெற்றுவேட்டுப் பாட்டுகளைப் பாடி; கடந்த இருபதாம் நூற்றாண்டில்கூட நம் அடிமைத்தனத்தை நாம் மறைத்துக்கொள்ளப் பூசி மெழுகியிருக்கின்றோம். இன்று வரைக்கும் நாம் ஆரிய வயப்பட்டும் ஆரிய மயப்பட்டுமே இருந்துவருகின்றோம் என்பதே உண்மை.
தமிழ மரபியலின் ஆரிய வயமாக்கம் என்ற ஒன்றுதான் முதலில் நடைபெற்றது; அதனைத் தொடர்ந்து பின்னரே ஆரிய மயமாக்கம் (மூன்றாம் தமிழ்க்கழகம் முடிவடைந்த காலத்திற்குப் பின்னர்) என்கின்ற மற்றொன்றும் நடைபெற்றுள்ளதை வரலாறு காட்டுகின்றது. இதற்குக் குறிப்பாகப் பல்லவ ஆட்சியாளர்களும் அவர்களுக்குக்கீழ் பலகாலம் அடங்கிச் சிற்றரச நிலையில், தம் முன்னைத்தமிழ் மரபுநிலையில் திரிபுபெற்று; அதனால் அத் தமிழ்த்தன்மையில் குன்றிப் போனவர்களாக ஆகியிருந்த பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் சேரர்களுமான மூவேந்தர் வழியினரும் அந்த ஆரியத்திற்குப் பெருந்துணையாக இருந்துள்ளதை அவர்கள் வெட்டுவித்துள்ள கல்வெட்டுகள் மிக வெளிப்படையாகக் காட்டுகின்றன.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் தமிழ்நெறியை உதறித் தள்ளிவிட்டு, பிறப்பு ஒவ்வாது என்னும் ‘வருணாச்சிரம தருமம்’ வளர்த்தெடுத்த சாதியியம் வழியாக அவர்கள் தமிழ்நெறியிலிருந்து விலகிச்சென்றுவிட்டனர். பிற்காலச் சிவனியம் (சைவ நெறி) அதன் வண்ணமாகப் புதுத்தோற்றம் பெற்றது. எடுத்துக்காட்டாகத் திருஞானசம்பந்தர் கூட, தம்மையும் தாம் பாடியிருக்கும் தமிழையும்  பூசுரன் - உரைத்த தமிழ் என்று தம் திருக்கடைக்காப்பு ஆகிய திருமுறையில் குறிப்பிட்டுக்கொள்கின்றார். - [திருவையாற்றுப் பதிகம் : திருவிராகம் : பா: 11]
ஒருகால், அக் காலத்திலே ஆர்ப்பரித்து நின்ற ஆரியக் கொள்கைக்கு எதிர்நின்று; முள்ளை முள்ளால் எடுப்பது போல, தமிழைக் குறைத்துப் பேசியவர்களுக்கு எதிராகத் தாம் வருணவழிப் பிறப்பால் ஒரு ‘பூசுரன்’ (மண்ணுலகத் தேவன் - பிராமணன்) ஆகையால், தம்மால் பாடப் பெறுகின்ற தமிழும் தெய்வத்திறம் – விண்ணுலகத் தேவர் வழிவந்த மண்ணுலகத் தேவத்திறம் உடையதே என்று காட்டுவதற்கான ஓர் உத்தியாகக் கூட கையாண்டிருக்கலாம். எஃது எப்படியாயினும் அது தமிழ்மை அன்று; தமிழ ஒப்புரவியல் அன்று.
இப்படிச் சிவனியம் (சைவம்) மட்டுமா அப்படி மாறிப்போனது? இல்லை, ஒட்டுமொத்தத் தமிழகத்து இயம் அத்தனையும் அப்படித்தான் உருத்திரிப்புப் பெற்றுவிட்டன. அவை வடவர் மொழிமயமாகவும், வடவர் கருத்துமயமாகவும்  தம்மை அறிந்தும் அறியாமலும் என இரண்டு நிலையிலும் திரிப்பாக்கம் செய்துகொண்டன. இது வடபுலத்தார் செல்வாக்கு ஓங்கியும் தென்னவர் செல்வாக்கு சரிந்தும் கொண்டிருந்த நிலையினை நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
மேற்சொன்ன  கருத்தியல் திரிபுக்கும் - திரிப்புக்கும் மற்றொரு சான்றையும் இவ்விடத்து எடுத்து வைக்கலாம். அதாவது பண்டைக்கால முதலே, தெய்வ வழிபாடு இயற்றிவந்த – இயற்றுகையில் ஆங்குப் பாடிப் பணிந்து கசிந்துருக வல்லார்க்கும் மாட்டார்க்குமாகச் சேர்த்தே சொற்றமிழ் எடுத்துப் பண்ணிசைப் பாடிவந்தவர்கள் பச்சைத் தமிழர்களான பாணர் பெருமக்கள்.
அப் பாணர் பெருமக்கள் பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் படிப்படியாக மதிப்பிறக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டனர். இடைக்காலத்தில்கூட அவர்களின் இறைப்பணிக்கு எடுத்துக்காட்டாக திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாணபத்திரர் முதலிய சிவனடியார்களையும், திருப்பாணாழ்வார் போன்ற திருமாலடியார்களையும் கூறலாம். பாணர் பெருமக்கள் தனியாகவும் குழுவாகவும் கூட்டமாகவும் இறைவனைப் பாடிப் பரவிய மரபினின்றே பிற்காலத்தில் ஓதுவார்களைப் அமர்த்தும் வழக்கமும் முறையும் தனியாகக் கிளைத்து வளர்ந்திருக்கின்றது. இறைவனை இசைபாடித் தொழும் வழக்காறு பாணர்களிடத்திருந்து வளரச்சிபெற்றிருக்கின்றது.
இசைவல்ல பாணர்கள் கூட்டமாகப் பாடி வழிபடும் வழக்கமே பிற்காலத்து அடியவர்களாலும் நன்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவார மூவரும், ஆழ்வார் பலரும் இம் மரபார்ந்த வழக்கத்தினைத் தம் கால வகையினாலே வேண்டியவாறு சீர்செய்து தமிழையும் தமிழ் மரபியத்தையும் முன்னெடுத்துச் சென்றனர்.
பாணர் பெருமக்கள் கடவுட்பணி செய்துவந்த உண்மையினை பொருநராற்றுப்படை எனும் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய     “ காடுறை கடவுட் கடன் கழிப்பிய பின்றை ... – பொருநராற். : வரி. 52” என்று குறிப்பிடுகின்றதன் வாயிலாக அறியமுடிகின்றது.
முருக வழிப்பாட்டிலே நிகழப்பெற்ற ஒரு காட்சியினைப் பரிபாடல் என்னும் கழக இலக்கியத்தினின்றும் காணலாம். அதிலே இதுவரையிலும் கவலையோ துன்பமோ இல்லாத நெஞ்சநிறைவுடன் வாழத் தமக்கு வாழ்க்கையிலே இறைவன் அருளியுள்ள பல்வகையான மாட்சிமைகளில் மனம் செருக்குற்று; தம்முடைய அறிவு கொடியவற்றிலே ஈடுபடாதவாறு தம்மைக் காத்தருளுமாறு கூடித் தலையுறத் தொழுகின்ற பாங்கிலே அந்நூலில் வருகின்ற இரண்டாவது பாட்டு அமைந்திருக்கின்றது. பாணர் குழாம் கடும்பு எனப்படுகின்றது. பாணர் கூற்றாகப் பரிபாடலில் பின்வரும் பகுதியை அறிஞர் கூறுவர்.
     சாவா மரபின் அமரர்க்காச் சென்றநின்                                               ...... மரபினோய் நின்அடி                                                      தலையுற வணங்கினேம்; பன்மாண் யாமும்                          கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்                    கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்                           கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே                                                                          -[பரி. 2 : 71 - 76]
இறைவனைப் பாடிப் பரவும் வணக்க வழிபாட்டு நிகழ்ச்சிகளில் இசைக் கருவிகளும் இசைக்கலைஞர்களும் பெற்றிருந்த செல்வாக்கினை, அவ்விசைக் கலைஞர்குழாம் நிலையழிந்துபோன பிற்காலத்திலும்; மக்களால் பொதுவில் தொடர்ச்சியாகப் பின்பற்றிக்கொள்ளப்பட்டதன் எச்சமாகவே மேற்படி அடியார்களின் காலத்திலும் காணப்படுகின்றன. அவ்வாறு கூடித் தொழும் நிலையில் ஒரு காலத்தில் தலைமைகொண்டிருந்தவர்கள், பின்னொரு காலத்தில் பத்தோடு பதினொன்றாக இருந்துள்ள உண்மையினை பிற்காலத்து வரலாற்று எச்சங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.                                                                                                              இன்னிசையோடு கூடித் தொழுகின்ற வழக்கம், பாணர் பெருமக்கள் வழியாக வளர்ந்து நிலைபெற்ற ஒரு மீபண்டைப் பத்திநெறி வழக்காறாகும். இசையறிவு என்பது பொதுவாகப் புலவர் முதலியோர்க்கும் கைவரப்பெற்றிருந்த ஒன்றாக இருந்த போதிலும், இசையினை வாழ்க்கையாகவே கொண்டியங்கியவர்கள் பாணர் பெருமக்களே அன்றோ? எல்லா நிலையிலும் பாடிப் பண்ணிசைத்தவர்கள் இறைவழிபாட்டு நிலையில் மட்டும் பாடாதிருந்தனர் எனக் கூறவியலுமோ? இசையறிந்திருந்த மகளிரும் பிறரும்கூடப் பாடிப் பணிந்துள்ளனர். பொதுவாக, தமிழர்தம் தெய்வ வழிபாடுகள் தமிழ் இசையோடும் தமிழ் இசைப்பாட்டோடும் இயைந்தனவாக நிகழ்ந்து வந்துள்ளன. அதற்குப் பரிபாடல் நல்ல சான்றாக இருக்கின்றது.                                                                                                                 கோயிலில் திருப்பாட்டுத் தொண்டு செய்துவந்த பாணர்கள் மெல்லமெல்ல புறக்கணிப்புக்கு ஆளானார்கள். அவர்கள் அதற்கு முன்பு இறைப்பணிகளில் யாதொரு தடையுமின்றி வழிவழி உரிமையோடு ஈடுபட்டு வந்துள்ளதற்குக் கழக (சங்க) இலக்கியங்களிலிருந்து ஆய்வறிஞர் பெருமக்கள் பற்பல சான்றுகளைக் காட்டியுள்ளனர். பத்தி இலக்கியக் காலமான பல்லவர் காலம் எனும் இடைக்காலத்திற்குப் பிறகு, தமிழிசைவாணர்களின் தலைமையில் நிகழ்கின்ற வழிபாடுகள் அருகிவிட்டன. இஃது இம்மட்டில் நிற்க.                                                                               எனவே, இற்றைய நிலையிலிருந்து பார்க்கையில், எதை எடுத்துக் கொண்டாலும் அதில் நமக்கு ஆரியச் சாயமே மேந்தோன்றித் தெரியும், முன்னைத்தமிழ் மரபியல் கூறுகள் அவற்றினுள்ளே மறைந்திருக்கும் – ஓரொருகால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்கித் தோற்றம்தரும். கூர்ங்கண்ணராக இருப்பவர்களுக்கு அவற்றை வேறுபடுத்தி உண்மையை அறிந்துகொள்ள முடியும் – முடிந்தது – இன்னமும் முடிகின்றது.                                                                               உயிர்க்கொலை வேள்வி செய்துகொண்டிருந்த ஆரிய மறைநூலோர்க்கு, அருந்தமிழர் கண்டறிந்த அகப்பொருள் ஒழுக்கம் ஆகிய பொருள்நெறியின் சிறப்பினை உணர்த்தும் வகையிலே “தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழாய் வந்திலார் கொள்ளார்இக் குன்று பயன்” என்று நல்லந்துவனார் எனும் புலவர்பெருமான் நாடகப் பாங்கில் பாடியிருப்பதை ஆராயும் திறம் படைத்தவர்களுக்கு மேற்படி உண்மை புரியும்.                                                                                              ஆரியப் புலவர்களுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் நிகழ்ந்திருந்த ஒரு பண்பாட்டுக் கருத்தியல் போராட்டம் நிகழ்ந்திருந்தது என்கின்ற ஒரு வரலாற்றுப் பதிவும்  இதன் வழியாக நமக்குத் தெரியவருகின்றது. காலப்போக்கில், தமிழ் மண்ணிலே களப்பிரரும் பல்லவரும் போன்ற அயலவர் ஆட்சிக்குள் அகப்பட்டுக் கிடந்ததால், மெல்லெனத் தமிழின் தலைமை ஆரியத்திற்கு முதற்கட்டத்தில் ஒத்தும், பின்னர் போகப்போகத் தாழ்ந்தும் போய்விட்டது. தாழ்ந்த நிலையிலிருந்து பின்னர் தன்னிலை இழந்து ஆரியத்திற்குள் அடங்கியும் அடங்காமலும்; ஏதோ எப்படியோ என்கின்ற நிலையில் ஒருவாறு இன்னமும் தன் உயிர்நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதை வரலாறு தெளிவாகக் காட்டிக் கொடுக்கின்றது. இவ்வகையில், உண்மை உணர்ந்த தமிழர்களின் குரல் சற்றே ஓங்கி ஒலிக்கின்ற வேளைகளில் அதனை அடக்குகின்ற வகையில் அறிவறியாத தமிழர்களின் கைகள் உண்மைத் தமிழர்களின் குரல்வளையை நெறிப்பதற்கு ஆரியப் பக்கத்தவர்க்கு உதவுகின்ற நிலைமை இன்றளவும் காணக்கூடியதாக இருந்துவருகின்றது.                                                                                  எனவே, இப்படி இருவேறு இனவியல் கூறுகளைக் கொண்டதாக இருக்கின்ற அந்தக் கலவையியத்துக்குத்தான் வெள்ளைக்கார அறிவாளிகள் இந்துவியம் (Hinduism) என்று ஒரே பெயரில் அடக்கிப்போட்டு ஒரு புதிய பெயரை முத்திரையாகக் குத்திவிட்டனர்.                                                                                                 அந்தப் புதிய பெயரீட்டில் வடநாட்டவர்கள் இந்தி - இந்தியா (இந்துஸ்தானம்) – இந்து - இந்துத்துவா என்கின்ற புதிய மேற்பூச்சுகளைப் பூசி நம்மையும் பிறரையும் மூளைச்சலவை செய்துகொண்டுள்ளனர். அதில் நம் இரண்டுங்கெட்டத் தமிழினத்தவர் சிக்கிக்கொண்டுள்ளனர்.                                                                                    இந்தியா – இந்துத்துவா என்பவை இன்றைக்குக் கண்ணுக்குக் கண்ணாக மிக வெளிப்படையாகத் தன் தமிழப் புறக்கணிப்புக் கொள்கையை வெளிப்படுத்தி நிற்கின்றது. அதற்கு அந்த இந்துவியத்துள் உறுப்புப்பெற்றவர்களாக இருக்கின்ற ஈழத் தமிழர்க்கு, அவர்கள் தமிழ்ப் பகைத்தன்மை அல்லது தமிழ்ப்பகைப் போக்கினால் தொடர்ந்து செய்துவருகின்ற வன்கொடுமைச் செயல்களும் பிறவும் மிகத் திறப்பாக ஒவ்வொரு நாளும் நமக்குக் கண்திறப்பு மருத்துவம் செய்து கொண்டிருந்தாலும், அதனை உணர்ந்து தெளிந்து மீட்சிகொள்ளும் மனநிலை பெரும்பான்மைத் தமிழர்க்கு இன்னும் வரவில்லை. 
தமிழியத்தைப் பின்பற்றி வாழ்ந்தால் அன்றி, தமிழர்க்கு உய்வில்லை. தமிழக் கூறுகளை உருமாற்றி வைத்துக்கொண்டு; தனக்கேற்றவாறு தன்மயம் ஆக்கிவைத்துக் கொண்டு; அதேவேளையில் அதனை நம்போல் – நம்முடையது போல் ஒரு பொய்த்தோற்றத்தை நமக்கும் கொடுத்துக்கொண்டுள்ள இந்துவியத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் எல்லோருமே தமக்குள் ஒத்த ஒருநிகரான உரிமையும் உறவும், அன்பும் அரவணைப்பும், மதிப்பும் உடையவர்களாக இல்லை.
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மையும் – மதிக்கும் தன்மையும் உள்ளவர்களால் தமிழியத்தைத்தான் ஏற்கமுடியும். பிறரைக் கீழ்மைப்படுத்தி – சிறுமைப்படுத்தி – கொடுமைப்படுத்தி மக்கள் சமத்திறத்தை அழித்து அகமகிழ்கின்ற தன்மையுள்ளவர்களுக்கு இந்துவியத்தைத்தான் பிடிக்கும், அதனைத்தான் அவர்களால் ஏற்க முடியும்.
தமிழியத்திற் பெரியர் – பெரியார் – பெரியோர் - உயர்ந்தோர் எனப் போற்றப்படும் சான்றோர் எவராக இருந்தாலும் அவர்களையும் அவர்கள் உலகுக்குப் பொதுமையுற அருளிச்செய்த கருத்துகளையும் தம் மயமாக்கிக் காட்டுவதற்கு மிகத் திறம்பட்ட சூழ்ச்சி மொழிகளால் மாய வலைபின்ன வல்லவர்கள் கொஞ்சங்கூட அச்சமோ தயக்கமோ இன்றிக் காலங் காலமாக அதனைச் செய்துவந்துள்ளனர் – செய்துவருகின்றனர் என்பது இன்றைக்கு மட்டுமன்று நாளைக்குங்கூட உண்மையிலும் உண்மை. அவர்களுக்கு அவர்களின் அருமை நன்றாகத் தெரிந்திருக்கின்றது – தெரிகின்றது.
திருமூலர் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது ஆய்வறிஞர் கண்ட முடிபு. அவர் உரைத்துள்ள ஓகநெறிக் (யோகமார்க்கக்) கருத்தியல் என்பது அவர் கண்டது அன்று என்று கூற முற்படுவதற்காக அதே நூற்றாண்டைச் சேர்ந்த வடவரான பதஞ்சலி முனிவரை முன்னிறுத்துகின்றனர். பதஞ்சலியார் செய்துள்ள ஓக சூத்திரம் (யோக சூத்திரம்) எனும் நூல் இருக்கிறது. அதைப் பார்த்துப் பழகித்தான் திருமூலர் திருமந்திரத்தில் ஓகியல் செய்திகளைக் கூறியுள்ளார் என்று கூறுவது அத்தகைய கருத்துகளுள் ஒன்றாகும்.
ஏன், திருமூலர் செய்த திருமந்திரத்தைக் கற்றுப் பதஞ்சலியார் தமது ஓக சூத்திரம் என்ற நூலை எழுதியிருக்கக் கூடாது? திருமூலருக்கும் பதஞ்சலியாருக்கும் முற்பட ஓக உண்மைகளை உள்ளிட்டுக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ள திருவள்ளுவர் யாரைப் பார்த்துப் பின்பற்றியுள்ளார் என்று சொல்லுவார்கள்?
கடவுள் வாழ்த்து மட்டுமன்று; மற்றுள்ள பல உயரிய ஓகியல் உண்மைகளைச் சுருக்கமாக உரைத்தருளிச்செய்துள்ள அவர்தம் அருட்டிறத்தினைக் கண்டு; தம் அறியாமையின் ஆணிவேர் ஆட்டங் கண்டதால் தானே திருவள்ளுவர் காலத்தில் இருந்த ஆரிய வேதமதத்துப் பெருமந்திரத்தவர்கள் எல்லாம் அவரை எந்த ஆரிய மாந்தனோடும் முனிவனோடும் கூட ஒப்பிடாமல் நேரடியாகப் படைத்தற் தேவு ஆகிய பிரமனுக்கு நிகர்ப்படுத்தி, பிரமனே மறுபடி திருவள்ளுவராக வந்து ஆரியவழி நால்வேதத்தைத் திருக்குறளாகத் தந்தார் என்று கூறிவிட்டனர்.
குறிப்பு:- [அவர்களுள் உள்ளத் தூய்மையுடைய ஒருசிறுபான்மையினர் மட்டும் திருவள்ளுவர் செய்தருளிய திருக்குறளின் முழுமுதன்மை நிலைநாட்டிப் பேசியிருக்கின்றனர். ஆரிய வழியினர் அனைவருமே அறம்பிறழ்ந்தவர்கள் என்று சொல்ல முடியாமைக்கு இத்தகையவர்களே ஒரு காரணமாக இருக்கிறார்கள். இது நிற்க.]
இப்படி இன்னம் இன்னும் எத்தனை எத்தனையோ எடுத்து எடுத்துக் கூறிக்கொண்டே போகலாம். அறிவுள்ள ஆராய்ச்சித் திறமுள்ள தமிழர்களும் நடுநிலையுள்ள பிறர்பிறரும் இந்த ஏமாற்று வேலைகளை நன்றாகப் புரிந்துகொண்டு விழிப்பாக இருந்துவர வேண்டும் என்பதற்காகவே இவற்றை இத்துணை அழுத்தமாக எடுத்துக்காட்ட வேண்டியதாயிற்று.
இதுபற்றித் திருமூலர்தம் வரலாற்றை ஆய்கின்ற இயல்களில் விரிவாக அறியலாம் என்பதால் இவ்விடத்து இம் மட்டில் நிறுத்துகின்றேன். திருமந்திரத்தில் வருகின்ற அந்தணரொழுக்கம் போன்ற பகுதிகளில் இவ்வுண்மைக்கான காரண மூலங்களையும் கருத்துக் கருமூலங்களையும் சுவடுபற்றி அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment