ஒட்டுமொத்தமாகப்
பத்துப் பண்புநலன்
இருவருக்கும் ஒத்தமைய வேண்டும்!
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே
தலைமக்கள் இருவருக்கும் ஒத்த நற்குடும்பத்துப் பிறப்பும், ஒத்த
ஒழுக்கமும், ஒத்த ஆளுமையும், தக்க அகவையும், பொருந்துகின்ற உருவத் தோற்றமும்,
நிலைபெறும் தன்மைபடைத்த ஆழ்ந்த அன்புக் குணமும், ஒத்த நிறையும், ஒத்த அருளும்,
ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்னும் பத்து வகையான பண்புநலன்கள்
அமையப்பெற்றவர்களாக இருக்க வேண்டியது இணக்கமறிந்து இணங்கி வாழ்வதற்கு அடிப்படையான
நற்குண நற்ஞெய்கை நலப்பாடுகள் ஆகும்.
அன்பு நிகழ்வதற்கு
ஆகாத பண்புக் குறைபாடு பத்து
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல்
பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல்
ஏழைமை மறப்போடு ஒப்புமை
என்றுஇவை
இன்மை என்மனார் புலவர்
பொறாமைக்
குணம், அறன் அழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி, தம்மைத் தாமே வியந்துகொள்ளுதல், புறங்கூறுதல்,
கடுஞ்சொல் கூறுதல், மறதி, முயற்சியின்மை, தம்முடைய குடிச்சிறப்பை எண்ணித் தம்மை மிகைபட
மதித்து இன்புறுதல், பேதைமை, மறதி, தன்னால் காதலிக்கப்படுகின்றவரைப் பிறரோடு
ஒப்பிடுதல் (நினைத்தல், கூறுதல்) என்று கூறப்படும் அல்குணங்கள் தலைமக்கள்
இருவருக்குமே இருக்கக்கூடாது என்பர் சான்றோர்.
குணநலன் என்பதே மனம் ஒத்த அன்பு வாழ்க்கைக்கு வாயிலாகும்.
அவற்றுள் உயர்ந்தவற்றையும் அவற்றின் பயனையும் நுகர்ந்து மகிழ்ந்தோர்
ஏனையோருக்கெல்லாம் நலம்பட வகுத்துக் கூறியுள்ளவையே மேற்கண்ட நலப்பாடுகள் அனைத்தும் என்க. அவை உடல், உள்ளம், உரை எனும் மூன்றனோடும் பொருந்தியிருப்பதை
கூர்ந்து நோக்கி உணர்க.
குடும்ப வாழ்க்கையை
எப்படித்
தொடங்கி
எப்படி
நிறைவிக்க வேண்டும்?
விட்டு நீங்குதல் இல்லாத ஆழ்ந்த உள்மனத்து விருப்பத்தோடு ஒருவர் மீது
மற்றொருவர் மாறாத அன்புகொண்டு வாழ வேண்டும். இத்தகைய விருப்புநிலை (காம நிலை)
நிறைவுபெறுகின்ற அகவையில் – பக்குவத்தில் குடும்பத் தலைவனும் தலைவியும் அறம்
– பொருள் - இன்பம் என்ற
மூன்றிலும் நன்கு முற்றி முதிர்ந்த நிலையினைப் பெற்றிருப்பர்.
அறம்
– பொருள் – இன்பம் - வீடு என்னும்
தமிழறம் நான்கனுள் முதல் மூன்றும் சிறக்கப்பெற்று;
இருவருமாகச் சேர்ந்த நிலையிலேயே வீடு எனப்படுகின்ற
விடுதலை
நிலைக்குச் செல்லவேண்டும் –
செல்லவேண்டிய நிலை முறையாக வாழ்பவர்க்களுக்குத் தானே வரும்.
அப்படிச் சென்று; உள்ளம்
அமைதிபட்டிருக்கின்ற நிலையில், தலைவனும் தலைவியும் தாம் பெற்ற பிள்ளைகளுக்கும்
சுற்றத்தார்க்கும் வாழ்க்கைக்குரிய சிறந்த வழிமுறைகளில் திடப்படுமாறு தம் சொல்லாலும்
செயலாலும் பயனாக இயங்குதல் அறமாகும்.
கடைக்கோள் அதாவது கடைசியான குறிக்கோளாக அமைகின்ற வீடு எனப்படும் அதுதான், அவர்கள் தம் வாழ்க்கையில்
கடந்து (இறந்து) வந்துள்ள வாழ்க்கை நுகர்ச்சிகளிலிருந்து பெற்ற உயர்ந்த பயனாகும்.
அவற்றைத் தம்மோடு நிறுத்திவிடாமல், தம் வழியில் வருகின்ற தலைமுறைக்குத் தக்கபடி
அவர்களின் உடற்பருவம் – உள்ளப் பருவம் என்பவற்றுக்கு ஏற்பப் பழகுவித்தல்
– பழக்குவித்தல் கடமையாகும்.
காமம் சான்ற கடைக்கள் காலை,
ஏமம்
சான்ற மக்களொடு துவன்றி;
அறம்புரி
சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்,
சிறந்தது
பயிற்றல் இறந்ததன் பயனே!
வாழ்க்கையில்
இணக்கமறிந்து இணங்குவிக்கும்
வழித்துணையாகும் வாயில்கள்
களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் எனப்படுகின்ற இரண்டு
நிலையிலான அகவொழுக்கம் நிகழுகின்ற நிலையில்,
அவற்றால் நுகரப்படுவதாக உள்ள வாழ்க்கையிலே தலைவனுக்கும் தலைவிக்கும் அவ்வப்போது மற்றவர்களின்
உறுதுணையும் வழிகாட்டலும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
அந்த நிலையில்
உண்மையாகவே உதவக்கூடிய இரக்கமும் அருளும் உடையவர்கள் யார் யார் என்று
தொல்காப்பியர் தம் காலத்திய நிலையிலிருந்து நமக்குத் தெரிவிக்கின்றார்.
தோழியே தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப
தோழி, தாய், பார்ப்பார், தோழர், இசைவாணர், அணுக்கவினையாளர்,
விருந்தினர், நாடகவாணர், அறிவர், வழியிற் கண்டு
பழக்கமாவோர், ... எனப்படும் தன்மையினர் ஒரு தலைமகனுக்கும் தலைமகளுக்கும் இடையில்
ஏற்படுகின்ற இன்பதுன்ப நிகழ்ச்சிகளில் (வாழ்க்கையில்) இடம்பெறுவர். இவர்களால்
பிணக்கம் நீங்கி இணக்கமாகும்; இணக்கத்திலும் மென்மேலும் இணக்கம் மிகுந்து
இன்பமாகும்.
நல்ல தலைமகனுக்கு
நல்ல அணுக்க வினையாளர்தம் கடப்பாடு
ஆற்றது பண்பும் கருமத்து வினையும்
ஏவல் முடிபும் வினைவும் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
தோற்றம் சான்ற அன்னவை பிறவும்
இளையோர்க்கு உரிய கிளவி என்ப
தமக்கு மேலான தகுதியில்
- தன்மையில் உள்ள தலைமக்களுக்கு உட்பட்டு – கட்டுப்பட்டு
நடக்கின்ற கடப்பாடு உடைய அணுக்க வினையாளர்கள் (உயர்நிலைப்
பணியாளர்கள்) என்போர் தலைவனின் களவு, கற்பு என்னும் இருநிலை
சார்ந்த வாழ்க்கையிலும்; அவன் மேற்கொள்கின்ற வினைகளின்போதும் அறம்பிறழாத பாங்கில்
நலம் பயக்கின்ற நல்லனவற்றையே எடுத்துக்
காட்டுதல், எடுத்துக் கூறுதல் என்பவற்றின் வாயிலாக உணர்வித்தல் வேண்டும்.
அப்படி
அவர்கள் செய்யத் தகுந்த செயல்நிலைகள் யாவை?
1.
செல்லும் வழியின்
நிலையினை தெளிவாக விளக்கிக்கூறுதல்.
2.
செய்யும் செயலால்
விளையும் பயனைக் கூறுதல்.
3.
பணித்தவற்றை முடித்து
வருதல் – முடித்துத் தருதல்.
4.
தலைமகன் கேட்பவற்றுக்கு
உரிய சரியான மறுமொழி கூறுதல்.
5.
தலைமகன்
கேட்காவிட்டாலுங்கூட அவனுக்கு நலம்பயப்பவற்றைக் கூறுதல்.
6.
வழியில்
கண்டறிந்தவற்றில் வெளிப்படையாகத் தெரிபவற்றையும் வெளிப்படத் தோன்றாமல் உள்மறைவாக
இருப்பவற்றையும் தவறுபடாமற் கூறுதல்.
7. அவை அல்லாமல் தமக்குக்
கண்ணிலும் கருத்திலும் தோற்றமாகும் மேற்சொன்னவற்றைப் போன்ற பலபல செய்திகளையும்
வருமுன் – வரும்போது – வந்தபின் என எந்த நிலையிலும் அச்சப்படாமல் கூறுதல்.
இளையோர் குறித்து
மேலும் ஒரு செய்தி:
உழைக்குஉறும் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்
நடக்கை எல்லாம் அவர்கட் படுமே
தலைமக்களுக்கு
எப்போதும் உடனாக அவர்கள் அழைத்த நேரத்துக்கு உடனே பக்கத்தில் இருந்து குற்றேவல் செய்தலும், மெய்காத்தல், ... என அவைபோன்ற
மற்றுள்ள பலபலவும் செய்யும் கடப்பாடு கொண்ட இளையோர்க்கும் அந்தத் தலைமக்கள் ஆகிய
உயர்ந்த தன்மைபடைத்தவர்களுக்கு உரிய ஒழுகலாறு அனைத்தும் உண்டு.
வாழ்க்கையில்
வழிதவறுகின்ற ஒருவரை
யாரெல்லாம் நெறிப்படுத்தலாம்
தொல்காப்பியர்
காலத்தில் குடும்ப வாழ்க்கையில் வழிதவறுகின்றவர்களை வருந்தித் திருந்துமாறு
குடும்பத்துப் பெரியவர்களும், செவிலித் தாயும், தோழன் தோழியரும் உரிமைபெற்றவர்களாக
இருந்துவந்துள்ளனர். அவ்வாறே குடும்பத்துக்கு வெளியே குமுகாய நிலையில் அறிவர் (சித்தர்), கூத்தர்,
பொருநர், பாணர், விறலியர் எனும் கலைஞர் பெருமக்கள்.
குடும்பத்துக்குப் பழி உண்டாகும்
சூழ்நிலையில்தான் மேற்சொன்னவர்களின் அறன்வலியுறுத்தல் என்ற பாங்கிலான அறவழிப்படுத்தல் என்பது நிகழ்ந்து வந்திருக்கின்றது.
அவர்கள் எப்படி
அறவழிப்படுத்தினர் என்றொரு கேள்வி எழுமானால் அதற்குத் தொல்காப்பியர் தரும் விடை
என்ன தெரியுமா?
செவிலித்தாய் உரிமை: (தாய்க்கு உதவியாக
இருக்கும் வளர்ப்புத் தாய்)
கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக்கு உரிய ஆகும் என்ப.
அறிவர் உரிமை:
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய
அறிவர்க்கு
முழுவுரிமை உண்டு:
இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும்
கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்.
கூத்தர் எப்படித்
தேற்றுவர்:
தொல்லவை உரைத்தலும், நுகர்ச்சி
ஏத்தலும்,
பல்லாற் றானும் ஊடலில்
தகைத்தலும்,
உறுதி காட்டலும், அறிவுமெய்ந்
நிறுத்தலும்,
ஏதுவின் உரைத்தலும், துணியக்
காட்டலும்,
அணிநிலை உரைத்தலும் கூத்தர்
மேன.
No comments:
Post a Comment