Thursday, July 18, 2013



கருமம் கைகூடியபின்
கருவிகள் பயனற்றுவிடும்


       முப்பத்தாறு (36) மெய்களால் அமையப்பெற்றதாக விளங்குகின்ற உடம்பும் அதன் பிறபிற அகப்புற உறுப்புகளும் உட்கூறுகளும் என எல்லாமும் ஒரு காடாக உருவகித்துக் கூறப்படுவது மெய்யியல் மரபு.

     காடு சுடுதல் அல்லது காடு கெடுத்து நாடு ஆக்குதல் என்பது ஒரு நாட்டு உருவாக்கச் செயலாகும். அவ்வாறு காடு சுட்ட பின்னர், குளம்தொட்டு வளம்படுத்தல் என்பது அடுத்த வினையாகும். இதனைப் பட்டினப் பாலையில் உருத்திரங்கண்ணனார்,

           காடுகொன்று நாடுஆக்கி
                குளம்தொட்டு வளம்பெருக்கி
                பிறங்குநிலை மாடத்து உறந்தைபோக்கி
                கோயிலொடு குடிநிறீஇ
                ... ... ... ...                 - பட்டினப்பாலை : வரி : 283 - 284

என்று அழகாக இலக்கியப்படுத்தி இருப்பதைக் கொண்டு தெளியலாகும்.
    
அவ்வகையில், உடம்பு என்னும் முப்பத்தாறு மெய்களால் ஆக்கப்பட்டுள்ள மாயைக் காட்டினையும் சுட்டெரித்தல் என்பது மெய்யியல் உருவகம். அதற்கு இறைவனை அல்லாமல் உதவ வல்லவர் வேறு யாருமிலர்.

மாயை ஆக்கத்தினை முடித்துவைத்து; மாயை நீக்கத்தினை அருளும் இறைத்திருவருள் செயலினையே காட்டைச் சுட்டெரித்தல்காடு சுடுதல் என்பர். அப்படிச் சுட்ட காடு – சுடுகின்ற காடு – சுடும் காடு சுடுகாடு எனக் கூறப்படும். அதனைச் சுடலை எனச் சருங்கச் சொல்வர். அந்த மாயைக் காடு அழிந்தொழியுமாறு சுட்டெரிக்கும் துணையும், அங்குத் தோன்றிப் பிறங்கும் தூய்மையின் சுடரொளியும் இறைவனேயாவார்.

     அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
          தொடர்ந்து தொடர்ந்துவெட் டிச்சுடுவதுஇனி எக்காலம்?
                                     - பத்திரகிரயார் புலம்பல் : 83

     மாயைக் காட்டினைச் சுட்டெரித்து அங்கும் ஆடல்தரும் அருள்விளக்கமாக – அருட்சுடராக இறைவன் இருப்பதனைக் குறிப்பிடுவதற்கு உருவகமாகவே, சுடலையாடி எனப்பட்டது.

சுடலையில் எரிந்தொழிந்த மாயைச் சாம்பலினைச் சுடலைப் பொடி என்பர். அது முப்பத்தாறு மெய்க் காட்டின் பொடி என்பதால், காடுடைய சுடலைப் பொடி எனப்பட்டது. அந்தப் பொடியினைப் பூசியருள்பவர் இறைவன் என்று உருவகமாக அவர்தம் அருளிச்செயல் உரைக்கப்பட்டுள்ளது. அதனையே திருஞானசம்பந்தர், “காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்” என்று உணர்ந்து உருவகித்துப் பாடியருளினார்.

    உலகியலில் சுடுகாட்டில் மாயையால் ஆன உடம்பினை எரித்தழிப்பவர் சாம்பன் அல்லது சாம்பவன் எனக் குறிப்பிடப்படுவார். மாயைப் பிணிப்பிலிருந்து உயிரை விடுவித்து இறைவன் அருள்பெறுதற்கு நிகழ்கின்ற இந்த மெய்ம வெற்றியையும் அதற்கு ஒப்பாகக் கொண்டுதான் இப்படி இறைவனையும் சாம்பன் – சாம்பவன் – சாம்பசிவம் என்றனர். இதனை முப்புரம் எரித்தல் என்பதோடு இயைத்துங் கூறலாம்.

     சம் என்னும் அடியிலிருந்து தோன்றி வந்துள்ள சமை என்பதன் வழியாகச் சமைத்தல், சமையல், சமையல்காரன் முதலான சொற்களெல்லாம் பிறந்துள்ளன. சம் > சாம் என முதல் நீண்ட வடிவிலிருந்துதான் சாம்பு > சாம்பல் என எரிந்த பொருளின் எஞ்சிய தூள் குறிப்பிடப்படுகின்றது.

   மேலும், சம் > சம்பு > சாம்பு என விரிந்துள்ள சொற்போங்கினை எண்ணுக. இரைப்பைக்குள் சென்றிடும் உணவுப்பொருளினை செரிப்பிக்கும் வெப்பம் சார்ந்த அகத்தீ - அகட்டுத்தீ கொண்டு அது கூழ்கூழாய் செரிக்கப்படும் வினையையும் சமித்தல் அல்லது செமித்தல் என்பதையும் உடன்நோக்கி உணர்க.

     அனலிட்டு உணவுப்பொருளைப் பதமாக்குதல் – சமைத்தல் எனப்படுதல் போல, அகட்டுத்தீ எனும் உள்ளனல் இட்டு உண்ட உணவுப்பொருளினைச் செரிப்பதற்குப் பதமாக்கும் வினைக்கும் சமித்தல் எனப் பெயராயிற்று. அகர முதலில் தொடங்கும் சொற்கள் பலவும் எகர வடிவத்தில் திரிபுற்று அமைந்திருப்பதைப் போல, சமித்தல் > செமித்தல் என்றாகியிருக்கிறது. [காண்க: பருத்தல் > பெருத்தல், கவுளி > கெவுளி, வட்கம் > வெட்கம், ...]

     மேற்படி எரிதல் வினைக்கருத்து சார்ந்த சம் > சம்பு – சாம்பு என்பவற்றின் அடியாக இறைவனைச் சம்பு எனவும், சாம்பன் – சாம்பவன் எனவும் குறித்ததெல்லாம் மேற்படி மாயை ஆக்கத்தின் நீக்கத்தினை உளங்கொண்டே என்று அறிதல் வேண்டும். அவ்வகையில் தாய்மைப்படுத்திய பார்வையில் சாம்பவி என்பது அதன் பெண்பால் வடிவம். எரித்த அல்லது எரிந்த பொருளின் எச்சம் சாம்பு + அல் > சாம்பல். திருச்சாம்பல் என்பது திருநீறு.

மேற்படிக் காடு யாராலும் – யாருடைய கைப்பட்டும் அழிக்கப்படாத காடு. அது கைவைக்கப் படாத காடு என்பதால் அதனைக் கன்னி வனம் என்றும் இன்னும் கவிநயத்தோடு புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தக் கன்னி வனத்துக்கு நாதனாக இறைவனை கன்னிவன நாதன் என்றனர்.

   பட்டினத்தார், “கன்னிவன நாதா – கன்னிவன நாதா” எனத் தொடங்கும் தம் முதல்வன் முறையீடு எனும் திருப்பாட்டினை அருளிச்செய்துள்ளார். அதில் விளக்கமாக இந்த மாயை ஆக்கமாகிய மெய்க் காட்டை (தத்துவக் காட்டை) அழிப்பது பற்றி அழகாக விளக்கியருளியிருக்கின்றார். அதிலே கன்னி என இருபொருளில் அச் சொல்லைக் கையாளுகிறார். ஒன்று மாயைக் கட்டு என்னும் ஒருசற்றும் குலையாத கன்னி, மற்றொன்று இறையிடத்து ஒருபாகமாய் அமைந்துள்ள தாய்மைக் கூறினையும் கன்னி எனக் குறிக்கும் திறப்பாடு உணர்ந்து தேறுதற்பாற்று!

மேலும், அக் கன்னி ஆகிய சத்தி படைத்தளித்த மாயைக் காடு எனும் பொருளும் அதிலே மூன்றாவதாக நிற்கவும் காண்கிறோம். கன்னியைக் குமரி எனக் கூறலும் மரபே.


உன்னிநின்ற மூலமுதல் ஆறும் பார்த்தே
     உருகிநின்ற சுழுமுனையை அறிந்து பின்பு

மன்னிநின்ற மதிமேல்சாம் பவியைக் கண்டு
     மருவிநின்று மனமுறைந்து சேர்ந்த பின்பு

பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்!
     பகலிரவு அற்றவிடம் ஞான மார்க்கம்!

கன்னிநின்ற இடங்கண்டால் அவனே ஞானி
     காட்டுவான் கேரியைக் காட்டு வானே!
                           - சட்டைமுனி சித்தர் : 10


     காணிந்த உலகத்தில் மாயக் கூத்தும்
          கண்மூக்குச் செவியோடிந் திரியக் கூத்தும்
    
பூணந்த வாசியினால் வறுமைக் கூத்தும்
          புகழான செனனமொடு மானக் கூத்தும்
    
ஆணிந்த அண்டமெல்லாம் படைத்த கூத்தும்
          ஆங்காரம் மனம்புத்தி யான கூத்தும்
    
தோணிந்தப் படிபடைத்த பரமே ஐயா
          சொற்பெரிய பூரணமே என்று கூவே!
                        - சட்டைமுனி சித்தர் : 33



கூவையிலே ஆத்தாளைத் தொழுது கூவக்
     குறையாத கருணையினால் திரும்பிப் பார்த்து

தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று
     சார்வாக எடுத்ததுபோல் உன்னை மைந்தா

தேவையிலே எடுத்தணைத்தே உயிரை வைப்பாள்
     செகசாலம் ஆடுகிற திருட்டுத் தாய்தான்

பாவையிலே மனஞ்சென்று பரவா விட்டால்
     பாராது போல்இருப்பாள் பாரு பாரே!
   - சட்டைமுனி சித்தர் : 34



பாரப்பா செகமனைத்தும் அண்ட மெல்லாம்
     பாங்கான சூழ்ச்சியில்வைத் திருந்த கன்னி

நேரப்பா இவளைவிட்டு யோகம் பார்த்தேன்
     நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன்

சேரப்பா சுத்தவிழல் மனமோ பேயாம்
     செகசாகலக் கூத்தைவிட்டுத் தெளி மாட்டார்

ஆரப்பா அவளைவிட்டு ஞானங் கண்டோர்
     அலைக்கழிக்கும் ஆசையென்ற பாம்பு தானே!
                        - சட்டைமுனி சித்தர் : 34


     பாம்பையல்லோ ஆபரணம் பூண்ட ஈசன்
          பரிவாக மதியோடு கொன்றை சூடிப்
    
பாம்பையல்லோ முந்நூலாய்ப் போட்ட கூத்தன்
          பாங்கான கரியுரித்த பாணி பாணி
    

பாம்பையல்லோ கங்கணமாய்த் தரித்துக் கொண்டு
          பரியுழுவைத் தோலுடுத்துப் பாதந் தூக்கி
    
பாம்பையல்லோ மனைக்குமோ திரமாய்ப் போட்டு
          பாரென்ற அகண்டத்தில் ஆடி னாரே!
- சட்டைமுனி சித்தர் : 35
    

ஆடினதோர் கூத்தெல்லாம் ஆத்தாள் மெச்சி
          அண்டையிலே அழைத்தானை இருத்திக் கொண்டாள்
    
நாடினதோர் அவளருகில் அரனும் எய்வான்
          நாமறியோம் அவன்அவளும் ஒன்றே என்றே
    
ஊடினதோர் இடம்எங்கே? ஒலிகேட் பெங்கே?
          ஒன்றாகக் கூணுகிற நடனம் எங்கே?
    
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே?
          கூசாமல் மவுனத்திற் கூடிக் காணே!
                             - சட்டைமுனி சித்தர் : 36


     மேற்படிக் காணும் சட்டைமுனிச் சித்தர் பாட்டினிலே, கன்னி என்பது மாயையோடுங் கூடி நிற்கும் திருவருள்நிலைக்கு உள்ள பெயர் என்பது தெரிகின்றது அல்லவா? அந்த மாயையினோடும் உயிர்களைப் பொருத்துவித்து அவற்றிற்கு அறிவுவிளக்கம்  (அறிவுத் துலக்கம்) உண்டாகுமாறு அவ்வுயிர்களொடும் பொருந்தியின்று உய்விக்கும் செயலே கூத்து – நடனம் என்பதும் நன்கு தேற்றமாகிறது.

அம் மாயையோடு கலந்துநின்று தாய்மை அன்போடு உயிர்களைக் கடைத்தேற்றும் இறைக் கருணையை உணரப்பெறும் உயிர்களுக்கு இவ்வுண்மைநிலை புரியவருகிறது. அவன் அருளாலே அவன்தாள் வணங்கி என்பதற்கு ஒப்ப, இறைத் திருவருளைக் கன்னி எனக் குறித்தபடிப் பார்க்கையில், அத் தாய் தன் சேயைத் தெருட்டும் வகையில்தான் நாடகம் ஆடுகின்றாள் – ஆட்டுவிக்கின்றாள். அதனை உயிர்கள் ஆகிய சேய்கள் அறிவதில்லை.

அவ்வாறு அவை அறியாதவண்ணாமக ஆடுகின்ற நாடகத் திருச்செயலை உடைய அந்தத் தாயைத் திருட்டுத் தாய் என்று சட்டைமுனிச் சித்தர் குறியீட்டு முறையில் குறிப்பிடுகின்றார். மறையநின்று ஆட்டுவிக்கும் திருவருளை இதனால் மறைப்பாற்றல், திரையி, ... என்று உரைப்பது தமிழ மெய்யியல் வழக்கு. அது உயிரின் நலத்திற்கென்றே நிகழ்வதாக இருப்பதைப் பத்திரகிரியாரும்,

     நட்ட நடுவில்நின்று நல்-திரோ தாயிஅருள்
        கிட்டவழி காட்டிக் கிருபைசெய்வது எக்காலம்?
                                - பத்திரகிரியார் புலம்பல் : 81
என்று குறிப்பிடுவதைக் கண்டு தெளிக.

       குறியீடு, குழூஉக்குறி, உருவகம், தொன்மம், ... எனப் பலபல உத்திமுறைகளைக் கொண்டு பக்குவமறிந்து பயிற்றுவித்து வந்துள்ள நெட்ட நெடிய மரபினை உடைய தூய மரபுதான் தமிழ மெய்யியல் மரபு.

அந்த மரபுவழியில்தான் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாட்டு மேற்படி நாடகத் திருச்செயலை இசைமிடைந்த நாடகப் பாங்கோடு நயம்பெற நவில்கின்றது. அதற்குப் புலியூர் கேசிகனார் வரைந்துள்ள விளக்கவுரை மிகத் தெளிவாக எளிய முறையில் இவ்வுண்மையினை முத்தமிழ் இயைபோடு அழகாக மேற்சொன்ன உத்திவகையால் மெய்ப்பொருள் விளக்கி நிற்கின்றது.

இம்முறையினைப் பின்பற்றித் அவரவர்தம் அருள்நிலைத் திளைப்புக்கு ஏற்ப நாயன்மார்கள் அனைவரும் இந்த நாடகத்த திருச்செயலை – திருக்கூத்தை – திருநடத்தைப் பாடியுள்ளனர். அதிலே அவரவர்தம் இசையறிவும் நாடக அறிவும் சிவ மெய்யியல் அறிவும் கலந்துநிற்கும் ஒரு கலவைநிலையினைக் காண முடியும்.

சிவ செந்துணிபு அறிவு பெற்றவர்களுக்கு அஃது முற்றும் முழுதும் தெற்றென விளக்கமாகும். அவ்விளக்கம் குன்றிப்போய்விட்ட நிலையில், அவற்றின் உட்பொருளைத் தேறமாட்டாத மாட்டாமையினால் உண்மையைத் தேறமுடியாமல் தேறித் தெளியமுடியாமல் இக்காலத்தவர் நிலைமை திரிந்துபோய்க் கிடக்கின்றது. இதுபற்றிக் கூறினால் கேட்பாரும் இல்லை, கேட்டாலும் மேல்நடவடிக்கை ஏதும் கொள்வாரும் இல்லை. சொல்லுங் கடமைக்கு இதனைச் சொல்லி வைக்கின்றேன்.

        இனி, இதுபற்றிய உண்மையான மெய்யியல் செய்திகளை வெளிப்படையாகவும் கவிநயத்தோடும் பட்டினத்தார் அருளிச்செய்துள்ள அருட்புலம்பல் எனும் திருப்பனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கொண்டு ஒட்டுமொத்தமாக எரித்தல் - சுடுதல் பற்றிய உண்மைக் கருத்தினைத் தெளிந்துகொள்ளலாம்.


     ஆதாரம் ஒராறும் ஐம்பத்தோர் அட்சரமும்
        சூதான கோட்டையெல்லாம் சுட்டான் துரிசறவே!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 3

     மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
        தத்துவங்கள் எல்லாம் தலைகெட்டு வெந்ததடி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 4

     மண்முதலாம் ஐம்பூதம் மாண்டுவிழக் கண்டேண்டி!
        விண்முதலாம் ஐம்பொறிகள் வெந்துவிழக் கண்டேண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 7

     நீங்காப் புலன்கள்ஐந்தும் நீறாக வெந்ததடி!
        வாக்காதி ஐவரையும் மாண்டிவிழக் கண்டேண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 8

     மனக்கரணம் அத்தனையும் வகைவகையே பட்டழிய
        இனக்கரணத் தோடே எரிந்துவிழக் கண்டேண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 9

     ஆத்துமத் தத்துவங்கள் அடுக்குஅழிய வெந்ததடி!
        போற்றும் வகைஎப்படியோ போதம் இழந்தானை  
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 10

     வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி!
        சுத்தவித்தை ஐந்தினையும் சுட்டான் துரிசறவே!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 11

     மூன்று வகைக்கிளையும் முப்பத் தறுவரையும்
        கான்றுவிழச் சுட்டுக் கருவேர் அறுத்தாண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 12


     ஒக்க மடிந்ததடி! ஊடுருவ வெந்ததடி!
        கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 17

     தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசறவே
        கண்ணேறு பட்டதணி! கருவேர் அறுத்தாண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 18

     ஓங்காரம் கெட்டதடி! உள்ளதெல்லாம் போச்சுதடி!
        ஆங்காரம் கெட்டதடி! அடியோடு அறுத்தாண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 19

     இவற்றைப் பொறுத்துப் படித்துணர வல்லார்க்கு, முப்பத்தாறு (36) மெய்களும் அவற்றின் விரிவாகிய அறுபது மெய்களையும் சேர்க்க வருகின்ற தொண்ணூற்றாறு (96) மெய்களையும் கடந்து மேற்செல்லும் அகத்தூய்மையால் வரும் உயிர்த்தூய்மை குறித்த நிலையில் பட்டினத்தடிகளின் அருட்புலம்பல் விளக்கம் வழங்குகின்றது.

     அதிலே ஆன்மா ஆகிய உயிரைப் பெண்ணாக உருவகித்து; அவ்வுயிரினை ஆட்கொண்டருளுகின்ற இறையினை ஆணாக உருவகித்துப் பாடுதல் செந்தண்ணெறி மரபு (சன்மார்க்க மரபு). அது காமக் கசடு அற்ற அகந்தூய தலைவன் தலைவி அல்லது நாயக நாயகிப் பாங்காகும். இஃது ஒவ்வோஓர் உயிரின் தூய அக அன்பினால் மட்டுமே அமையக்கூடிய அருள் நிலை.

தன்னோடு பொருந்தி இயங்கியிருந்து இப்போது இல்லையாகிவிட்ட மேற்படி முப்பத்தாறு மெய்களையும் கடந்தேறிவிட்ட நிலை – மாயையினைக் கடந்து மேற்சென்றுவிட்ட தூயநிலை. இப்போது அம் மெய்கள் ஏதும் இல்லாத நிலை என்பது உயிருக்கு அதைப் பொருத்தமட்டில் ஒரு தனிமைநிலையும் ஆகும். இதனை,

     முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி!
        தன்னை அறியவேதான் ஒருத்தி ஆனேண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 21

என்று விளங்கவைப்பதை ஆய்ந்து உணர்க.

இவ்வாறு வினைக்கும் அதனால் பிறப்புக்கும் காரணமாக இருந்தவையும் அதற்குக் கருவியாக இருந்தவையும் நீங்கிவிட்ட நிலையில் உள்ள உயிருக்கு ஒரு குமரி அல்லது கன்னிப் பெண்ணின் நிலைமையோடு ஒப்பிட்டுக் கூறுவதைக் காண்க! அதனை,

     தன்னை அறிந்தேண்டி! தனிக்குமரி ஆனேண்டி!
        தன்னம் தனியே தனிஇருக்கும் பக்குவமோ!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 23

வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி ஆனேண்டி!
காட்டுக்கு எரித்தநிலா  கனவாச்சே கண்டதெல்லாம்!
                           - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 24

    
சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான்அறியேன்!
அம்மா பொருள்-இதுஎன அடைய விழுங்கினண்டி!
                                - பட்டினத்தடிகள் அருட்புலம்பல் : 41

     ஓங்காரம் ஆகிய ஓசையினைக் குறித்து முன்னர் கண்டோம். இனி, அதன்கண் பொருந்தியதான நாதம் என்பதன் அளாவலும் குலாவலும் உலாவலும் குறித்து ஆன்றோர் பகர்ந்தருளிச் செய்துள்ள அருள்மொழிகளைக் காண்போம்.

     ஒலிபடரும் குண்டலியை உன்னிஉணர் வால்எழுப்பிச்
        சுழிமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்?
                                - பத்திரகிரியார் புலம்பல் 93

     ஆசைகொண்ட மாதர் அடைகனவு நீக்கிஉன்மேல்
        ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது எக்காலம்?
                                - பத்திரகிரியார் புலம்பல் 207

      ஆசைவலைப் பாசத்து அஅகப்பட்டு மாயாமல்
        ஓசைமணித் தீபத்தில் ஒன்றிநிற்பது எக்காலம்?
                                    - பத்திரகிரியார் புலம்பல் 126

     ஓசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்றுண்டு
        வாசமலர் நாற்றம்போல் வந்து
- ஔவைக் குறள் 150

சத்தம் பிறந்தஇடம் தன்மயமாய் நின்றஇடம்
சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம்?
                                - பத்திரகிரியார் புலம்பல் 207

ஓசை ஒடுங்கும்இடம் ஓங்காரத்து உள்ஒளிகாண்
பேசாது இருக்கும் பிரமம்இது என்றாண்டி!
                          - பட்டினத்தார் அருட்புலம்பல் : 105

ஓசை ஒடுங்கும் இடம் என்பது ஓசை முடிந்த இடம் என்று ஆன்றோர் கூறுவது நாதநிலையின் தூய மேனிலை. இது ஓங்காரத்துள் அடங்கிய நிலையே. மேலே, ஓங்காரம் கெட்டதடி; உள்ளதெல்லாம் போச்சுதடி என்பது ஓங்காரத்திலிருந்து விரிந்து இருந்து; பின்னர் அதன் பயனிலை மாறிய நிலையில் மீண்டும் அந்த ஓங்காரத்துக்குள் ஒடுக்கமுற்ற அதன் கீழ்நிலை மாயையின் ஒடுக்கமே என்பதை அறிக.

     இவ்வாறாக, மாயை நிலைகளைக் கடந்து மேற்செல்லும் உயிரின் தன்மையினைக் குறித்துத்தான், அந்த மாயையினைப் பாழ் என்று ஆன்றோர் குறித்தனர். அதன் மூன்றுநிலை பற்றி அதனை முப்பாழ் என்றனர். அதனை உள்ளவாறு உள்ளுணர்ந்து தெளிந்த மெய்யறிவர்களை முப்பாழும் கற்றுணர்ந்தோர் என்று பட்டினத்தடிகள் தமது அருட்புலம்பலின் இறுதியில் குறிப்பிடுகின்றார். அவரிடத்து ஆசிரியம் கொண்டிருந்த பத்திரகிரியாரும்,

     முப்பாழும் பாழாய்; முதற்பாழும் சூனியமாய்
        அப்பாழும் பாழாய் அன்புசெய்வது எக்காலம்?
                                - பத்திரகிரியார் புலம்பல் : 112

என்று பாடி விளக்குகின்றார். அவருக்கு அவர்தம் ஆசிரியபிரானார் அறிவுறுத்தியது திருப்பாட்டு வருமாறு:-

     முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும்பாழாய்
        அப்பாழுக்கு அப்பால்நின்றா டும்அதைப் போற்றாமல்
        இப்பாழாம் வாழ்வைநம்பி ஏற்றவர்க்கு ஒன்றுஈயாமல்
        துப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே!
                                     - நெஞ்சொடு புலம்பல் : 3

      இவ்விருவருக்கும் பிற்பட்டு வந்துள்ள சித்தர் பலரும் இவ்வுண்மையை த் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஞானக் கும்மி பாடியருளிய வாலைச்சாமி எனப்படும் வாலைச்சித்தர் கூறுவதைக் காண்க.

பாழாகிவிடும் இயல்புடைய இம் மாயையால் உருத்தோற்றமாகிக் காட்சிதந்து கொண்டுள்ள பாழினைக் கொண்டு அறிவறிந்து கொண்டிருக்கின்ற நிலையில், இறைப்பொருளை உண்டு எனவும், இல்லை எனவும் ஒருவருக்கொருவர் நிறுவிக் காட்ட முயன்றுகொண்டுள்ள நாடகச் செயலினைக் குறித்து கருத்தாடல் செய்து வாருங்கள் – அது பின்னர் உங்களை அவ்விரண்டுக்கும் உட்படாத இயற்கை உண்மைக்கு மெல்ல வழிதிறந்துவிடும் என்கிறார்.

     அண்டமும் பிண்டமும் பாழாச்சே அதற்
                கப்பாலும் பெரும் பாழாச்சே
        உண்டில்லை என்று பராபரப் பிரமத்தை
                உவந்து கும்மி அடியுங்கடி
                           - வாலைச்சாமி : ஞானக் கும்மி : 181


No comments:

Post a Comment