Saturday, July 13, 2013




தமிழ்மொழியின் அடிப்படையில்தான்
வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும்
குறிப்பிட்டுக்கொள்ளும் வழக்காறு இருந்துவந்துள்ளது

எல்லை தெரியாத ஆதிகாலம் முதலாகத் தமிழ்மொழியின் அடிப்படையில்தான், வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் குறிப்பிட்டுக்கொள்ளும் வழக்காறு இருந்துவந்துள்ளது. சேரர் - சோழர் - பாண்டியர் என வெவ்வேறு குடிப்பெயர் கொண்டவர்களாக இருந்தாலும், மூவரும் தமிழ் மொழியினைத் தாய்மொழியாகவும், அதன் வழிசார்ந்த தமிழ்மரபியத்தை வாழ்க்கை நெறியாகவும் உடையவர்கள் என்ற இனமொழிப் பிறப்பியல் உறவினைக் கொண்டே, மூன்று நாடுகளையும் ஒன்றாகத் தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம், தமிழகம், ... என்று குறிப்பிட்டு; ஒற்றுமையாக ஒரே தேசிய வடிவில் உறவுபாராட்டி வாழ்ந்தனர்.

அப்போது அவர்கள் தம்மை இந்து என்றோ, இந்தியன் என்றோ, தம் நாட்டகத்தை இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவே இல்லை. ஏனெனில், அப்போது அப்படி ஏதும் கிடையாது. ‘இந்து’ என்னும் சமயமத கூட்டமைப்பும், ‘இந்தியம்’ என்னும் பல்கலவைத் தேசிய அரசியல் கூட்டமைப்பும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்பட்ட வரலாற்றில் இல்லை. இவை பார்சி-அரபி-ஆங்கில அன்னியர் கட்டிவைத்த புதிய கட்டமைப்புகள் அல்லது கூட்டிவைத்த புதிய கூட்டமைப்புகள்.

இன்று ஒட்டுமொத்தமாக ‘இந்தியா’ எனப்படுகின்ற பெருநிலப் பரப்பை, தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டு காலமாகத் தமிழ மூவேந்த ஆளுகைக்குக்கீழ் வைத்து; அறத்தகையும் மறத்தகையும் திருத்தகையாக நிலைசெய்து அரசோச்சிய தமிழ அரசிய மாட்சிமையை “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று தொல்காப்பியப் பொருள்மறைப் பேராசான் உவந்து போற்றிக் குறிப்பிட்டுள்ளார். மூவரசையும் ஒருநிகரான ஓரரசாக ஒப்பவைத்துக் கட்டிக்காத்த அறிவுமரபு தமிழச்சான்றோர் மரபு.

நாவலம், நாவலந் தேயம், நாவலந்தீவு - நாவலந்தீவம், நாவலந் தண்பொழில் என்பவை தமிழர்கள், தொல்பழங்காலத்து இந்தியாவுக்கு வைத்து ஆண்டுவந்துள்ள பெருந்தமிழ அரசுமுறைப் பெயராகும். அந்த நாவலந் தண்பொழில் என்பதையும்கூட, வடபொழில், தென்பொழில் என்று திசையால் இரண்டாகப் பகுத்துக் கூறிவந்திருப்பது பெருந்தமிழ அரசியல் வழக்கு. இது பரிபாடல் போன்ற மூன்றாம் தமிழ்க்கழகத்து நூல்களின் வழியாக அறிய வந்துள்ள வரலாற்று விழுப்பமார்ந்த பெரிய செய்தி.

இந்த நிலப்பரப்பு எங்கணும், பரவலாகக் காணப்பட்ட நாவல் மரக்காடு மிகுதி பற்றி அமைந்த நாவலம் தீவம் என்ற இந்தப் பெயரையே பிற்காலத்து ஆரிய நூலாசிரியர்களும் சம்புத் தீவம் (Jambu Dweebam) என்று மொழியாக்கம் செய்திருக்கின்றனர். தமிழ்நூல்வழக்கு மூலம், ஆரியநூல் வழக்கு தமிழத் தழுவலாக்கம்.

நாவலந் தீவத்தைத் தெய்வ மயமாக்கிய காலநிலையில், அதன் காவல் தெய்வமாகச் சம்பாபதி என்று பெயர்கொடுத்து ஒரு நாட்டுத் தெய்வத்தைப் கற்பித்துக் குறிப்பிட்டனர். இற்றைக்கு ‘பாரத மாதா’ என்பதைப் போன்ற ஒரு புனைவைப் போன்றதாக இதனைக் கொள்ளலாம். மணிமேகலைப் பாவியமும் அதனைத் தழுவிப் பாரித்து உரைக்கின்றது. அதனை நல்ல தமிழில் நாவலந்தேவி என்றாவது, நாவலஞ்செல்வி என்றாவது நாவலம்பாவை குறிப்பிட்டிருக்கலாம். வடபுலத்துப் புத்தமதத் தாக்கம் அதற்கு இடந்தரவில்லை போலும்.

இவையெல்லாம் பிற்காலத்திய புனைந்துரைகள்; இவற்றுக்கெல்லாம் மூத்த, அனைத்துக்கும் மூலமான நாட்டு மரபியல் என்பது தமிழ மூவேந்த மரபியலேயாகும்.

தமிழ நாகரிகத்தைத் தழுவிக்கொண்ட ஆரிய மக்களின் உறவு ஏற்பட்டிருந்த பின்னாளிலே, ஆடல்பாடல் முதலிய கலைகளைக் கூடத் தமிழக் கூத்து, ஆரியக் கூத்து என்று தெளிவாக வேறுபிரித்துக் கூறினர். வடதமிழ்மொழி தன் வழிவழி மரபுநிலையில் திரிபடைந்துபோன நிலையில், வடநாவலத்தை மட்டும் ஆரியவர்த்தம்’ என்று பெயர்மாற்றிக் குறித்திருப்பது போன்ற வடவர்தம் நூல்வழக்குகளும் இந்த வேறுபாட்டு நிலையையே மற்றொரு வகையில் வலியுறுத்துகின்றன.

ஆகவே, தமிழம் என்று ஆதி முதலே எல்லாவற்றையும் தமிழ் மரபு நிலையைத் தனியாகவும், ஆரியம், வடுகம், ... என்று தமிழுக்குள் பின்னர் வந்து சேர்ந்தும்கூட முழுதும் சேரமுடியாமல் அயலாக இருப்பவற்றை அவ்வவற்றின் பெயரால் வேறுபிரித்து உணர்ந்தும் உணர்த்தியுமிருந்தனர்.

ஆரிய அரசன் பிரகத்தன் என்பவனுக்குக் கபிலர் தமிழர்தம் அன்பியல் ஒழுக்கத்தை உணர்த்தியுள்ளதை இவ்விடத்து இணைத்து எண்ணிப் பார்க்க வேண்டும்! அதிகம் வேண்டாம்! மூன்றாங் கழகக் காலத்தைச் சேர்ந்த ஆரியப் படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மாவேந்தர்தம் பெயரிலேயே ‘ஆரியப் படை’ என்ற சொற்றொடர் அரசியல் வழியில் அந்த வட ஆரியத்தைத் தமிழம் வெற்றிகொண்ட செய்தி தெளிவாக இருக்கின்றது. இவை யாவும், தமிழம் - ஆரியம் என்று இருநிலைகள் இருந்து வந்துள்ள வரலாற்று நிலையைத் தெளிவாக உணரச்செய்கின்றன.


No comments:

Post a Comment