Thursday, July 18, 2013



உயிரோடு உயிர்க்குயிர்
இயைந்துநிற்கும் வழிமுறை

 
கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே
                          - திருமந்திரம் 1965

 குடந்தோறும் நீர்நிரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், வானத்தே தெரிகின்ற சூரியன் அவை அத்தனையிலும் ஒன்றேயாய் – ஒருபடித்தாய் தோன்றுவன். அவ்வாறு பல குடங்களில் தோற்றம் தருகின்ற அச் சூரியன் ஒன்றுதான். அவன் தனித்தனியான பலவேறு சூரியன்கள் ஆகாததைப் போல, பலதிறப்பட்ட உடம்புகளைப் பெற்றுள்ள உயிர்தோறும் காணப்படுகின்ற – உணரப்படுகின்ற இறைவனும் ஒருவனே அன்றிப் பலர் அல்லர்.

 அச் சூரியனை அவரவரும் கண்டவாறே தத்தம் குடங்களில் அடக்கிவிட வேண்டும் என்று குடத்தை மூடினால் அச் சூரியன் அக் குடங்களுள் அடங்குவது இல்லை. அதுபோல, திருநீலகண்டத்தையுடைய முழுமுதற் பொருளாகிய பரம்பொருள் எல்லா உயிருடனும் இயைந்திருந்தாலும் தனித்தனி வெவ்வேறாகக் காணப்படுவதில்லை.

எனவே, உடம்புதோறும் உயிர் தனித்தனி வெவ்வேறு. ஆனால், அவ்வுடம்பகத்துக் பொருந்தியுள்ளனவாகக் காணப்படும் உயிர்தோறும் இயைந்துநிற்கும் இறைப்பொருள் ஒன்றுதான். அவ்விறை குடத்தினில் அடங்கிவிடாத சூரியனைப்போல், எந்த உயிரின் உடம்பிலும் அடங்கிவிடமாட்டாது. அஃது அகத்திலும் புறத்திலும் என யாங்ஙணும் நீக்கமற ஒருபடித்தாக விரவிநிற்குமேயன்றி, அடங்கிநிற்காது.

     இறைநிலைக்கு அணுகிய உச்சநிலையிலிருந்து முப்பத்தாறு மெய்களின் கூட்டமைப்புக்கு உரிய படிநிலையிறக்கம் அல்லது படிநிலையாக்கம் அமைந்திருக்கின்றது.

   விந்து என்று சொல்லப்படும் தூமாயை தோற்றத்தில் சிறந்த குண்டலியும், பெருவெளியில் மாயைச் செயலாகிய விந்தவம் (வட.வைந்தவம்) ஒன்பதும், அவற்றின் வைப்புமுறையால் அயன் (பிறமன்) முதலிய ஒன்பதின்மரும், திருவருள் வைப்புமுறையாகக் கரணங்கள் நான்கும், கலைகள் ஐந்தும் (நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல்), நுண்ணோசை (வட. வைகரி) முதலிய ஓசைகள் நான்கும் ஆகிய எல்லா ஆக்கப்பாடுகளும் தோன்றும்.

  விந்து எனும் தூமாயை இருவகைப்படும். இதுவே முப்பத்தாறு மெய்களுக்கும் அகம் – புறம் என்பர். ஒன்று மேல்நிலைவிந்து (பரவிந்து) மற்றது கீழ்நிலைவிந்து (அபரவிந்து) எனப்படும். பரம், அபரம் என்பவை உயிர்களின் நிலையினைச் சார்ந்து அமைந்துவருபவை. பரவிந்துவானது பரநாதமாகத் தோன்றிடும். இவற்றிலிருந்து திருவருள் ஐவகைக் கலையாக – அறிவியக்கமாக உயிர்க்கு அமைந்து அதனைக் கடைத்தேற வழிகூட்டும்.

இதனையே அகப்பேய்ச் சித்தர்பெருமான்,

நாத வேதமடி அகப்பேய்
நன்னடம் கண்டாயோ!
        பாதம் சத்தியடி அகப்பேய்
பரவிந்து நாதமடி!      - அகப்பேய்ச் சித்தர் 3
    
என்றும்,
     விந்து நாதமடி அகப்பேய்
மெய்யாக வந்ததடி!
        ஐந்து பெரும்பூதம் அகப்பேய்
அதனிடம் ஆனதடி!           
என்றும்,                         - அகப்பேய்ச் சித்தர் 4

வாக்காதி ஐந்தடியோ அகப்பேய்
வந்த வகைகேளாய்! 
ஓக்கம் அதானதடி அகப்பேய்
உண்மையது அல்லவடி!     
                                - அகப்பேய்ச் சித்தர் 6

என்றும் பாடியிருக்கின்றார். இவர் உண்மையில் தம் அருள் ஓதுவத்தைப் படைப்பியல் அமைப்புநிலையிலிருந்து தொடங்கியருளுகின்றார். அவர் போலவே ஔவை முதலிய ஏனைய பல சித்தர்பெருமக்களும் படைப்பியல் உண்மையிலிருந்தே தம் அருளிப்பாடுகளை நமக்கு அளித்துள்ளனர் என்பது கூர்ந்து கவனித்து ஆராய்ந்து புரிந்துகொள்ளத்தக்கது. அது நேரே இயற்கையை இயல்பறிந்து உணர்வதிலிருந்து தொடங்கிநிற்கின்றது. இந்த உண்மையை மறந்து விட்டவர்களாகவே நாம் அறிந்தும் அறியாதவர்களாக அலைக்கழிப்புற்று நிற்கின்றோம்.

தமிழப் படைப்பியல் விளக்கம் பத்தி நெறியிலும் சித்த நெறியிலும் ஒன்றாக
ஓதப்பட்டுள்ள இந்த கருத்தியல் ஒருமைப்பாட்டு உறவினை, எல்லோரும் உணர்வது நலம் என்னும் கருத்தால் இதனை இவ்விடத்து ஒப்புமை காட்டுகின்றேன்.

எனவே, இவற்றை வாயிலாகக் கொண்டே இறை உயிர்களைத் தூண்டித் தொழிற்படுத்துகின்றது – ஒன்பது நிலைகளில் அமைந்து உய்க்கின்றது - இயக்குகின்றது. இவ்வாறு உள்ளிருந்து உய்க்கின்ற நிலையில்தான் இறை சிவஞாயிறு – சிவாதித்தன் எனப்படுகிறது. [காண்க: திருமந்திரம் : 1956]

     தொடர்ந்து, விந்துவைக் காரண மாயை எனவும் கூறுவர். இவ் விந்துவிலிருந்தே அகண்டமும் அண்டமும் ஆகிய அனைத்து ஆக்கப்பாடுகளும் உண்டாகின்றன. ஆகாயம் முதலிய ஐம்பூதம் உள்ளிட்ட முப்பத்தொரு மெய்களும் தூவா மாயை (காரிய மாயை) ஆகிய கீழ்நிலை விந்துவின் வழிசார்ந்தவை. இவற்றின் திரிவாக்கம் (Evolution) என்பது பால் தயிரானாது போன்ற ஒரு திரிவாக்கமாகும் என்பர். விந்து ஆகிய தூமாயையின் திரிவாக்க நிலைதான் தூவா மாயை (அசுத்த மாயை). அது தூமாயையின் கீழ்ப்பகுதி. விந்து ஆகிய தூமாயை (சுத்த மாயை) திருவருளாற்றல் ஆகிய நிலைக்களத்தின்கண் அடங்கி அவ்வாற்றலால் தொழிற்படும்.

பிறப்பு வருகின்ற நிலையினை இவ்வாறு வந்த வகையறிகின்ற போது; செவ்வி பெற்ற செவ்வுயிர்க்கு, ஊழ்வழி நடக்கின்ற பிறப்பினை அறுத்துக் கடைதேறும் வண்ணமாகத் தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகப் பெறுகின்றது. அந்த நிலைக்கு வந்த உயிர்க்கு மீண்டும் முப்பத்தாறு மெய்களின் கீழ்நிலையிருந்து உச்சமாகிய நாத நிலை வரைக்கும் திருப்பநிலை ஏற்படுகின்றது. இவ்வாறு முப்பத்தாறு மெய்களின் பயன்கண்ட பின்னர் தொடர்பு நீங்கப்பெறும் நிலையில் அமைவது ‘வட. தத்துவ செயம்’ என்னும் மெய்வெல்வி அல்லது மெய்வென்றி.

இறைவன் மாந்தர்க்கு எய்துவிக்கும் பற்றுநீங்குதல் ஆகிய அகவிடுதலைக்குத் துணையாக ஐம்பாடுகள் (ஐந்தவத்தைகள்) அமைந்திருக்கின்றன. அவற்றில் முறையே விழிப்பு என்ற நிலையில் ஒடுங்கிச்செல்ல, ஏனைய நான்கு மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும். எஞ்சிய நான்கனுள் கனவுநிலை வராமல் நிற்கப் பெறுகையில், மற்றைய மூன்றும் இயங்கியிருக்கும். பிறகு, சுழுத்தி நிலை ஒடுக்கமுற ஏனைய இரண்டு மட்டும் இருக்கும்.

பின்னர், பேருறக்கம் (துரியம்) என்ற நிலையும் ஒடுக்கமுற உயிர்ப்படக்கம் என்று ஒன்று மட்டும் இருக்கும். இவ்வாறு இவை ஒடுங்கிவரும் நிலையில் இறுதியில் ஐம்பொறிகள் தத்தம் புலன்களைப் பற்றுகின்ற நிலையினை விட்டுவிடும் நிலையுண்டாகும். இது பொறிவாயில் ஐந்தவித்தல் எனும் நிலையை அடைந்த நிலையாகும். இதனால், ஆன்மா வியன்நிலை அல்லது வியன்மைநிலை எய்தும். அதன்வழி சிவமாதல் எனும் நிலையினைச் சாரும் தகுதியைப் பெறும் உயிர்க்குப் பரவுயிர் எனப் பெயர் கூறப்பெறும்.

உயிரின் பரநிலை அடைவு என்பது மூன்றாக நிகழ்கின்றது. அவற்றை முப்பரம் என்பர். ஆன்மா தன்னை உணரும் பேருறக்க (துரிய) நிலையும், தன்னை வியன்மனாகக் (வியாபகனாகக்) காணும் உயிர்ப்படக்க (துரியாதீத) நிலையும், இந் நிலைகளில் முதிர்ந்து வந்து; பிறகு மலநீக்கம் பெறுதலும் மூன்று பரநிலைகளுள் முதல் பரநிலையாகும்.

அடுத்து, இவ்வாறாக ஆன்மா தன் கட்டுநிலை (பெத்த நிலை) மாறப்பெற்று; முத்தனாகி; தற்பரன் ஆகி (தானே சிவமாகி) நிற்கும் காலங்கடந்த நிலை (காலாதீத நிலை) இரண்டாவதாய் எய்தும் பரநிலையாகும். அதற்கு அடுத்து, ஆன்மா சிவத்துடன் இரண்டறக் கலந்து; ‘தான்’ என்பதே அற்று நிற்கும் சிவமயமான நிலை மூன்றாவதாய் எய்தும் பரநிலையாகும். இம் மூன்று நிலைகளைக் குறித்தே முப்பரம் எனப் பரநிலை அடைவு கூறப்பெற்றது. இதனைத் தானறப்பெறுதல் (தான் அறப்பெறுதல்) என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

பல்வேறு பாடுகளுள் இருந்த உயிரானது, அதன் கீழ்மையினின்றும் நிலைபெயர்ந்து; மேம்பாடு தருகின்ற தூய பாடுகளில் (சுத்த அவத்தைகளில்) செயல்பட்டு வந்த காலம், ஊழ், கலை, (நினைப்பு)வித்தை, விருப்பு(அராகம்), மைந்தன் (புருடன்), மாயை என்னும் ஏழு உணர்தற்குத் துணை ஆகும் உணர்வுநிகழ்ச்சி மெய்களும் (வித்தியா தத்துவங்களும்), உணர்த்துதற்குத் துணை ஆகும் தூய மெய்கள் ஆகிய சிவமெய்கள் (சுத்த தத்துவங்கள்) ஐந்தும், சிவப் பாடுகளில் (சிவ அவத்தைகளில்) ஆன்மாவை விட்டு நீங்கிவிடும்.

இவ்வாறாக, மெய்களை (தத்துவங்களை) வென்று – அகன்று வரும் நிலையில்தான் ஆன்மா தன்னை உணரும்; ‘நான் நான்’ எனக் குறித்துக் கொண்டிருந்தது இந்த முப்பத்தாறு மெய்கள் (36 தத்துவங்கள்) அல்ல என்பதை நன்றாக வேறுபடுத்தித் தெளியும். இது மாயையையும் மாயை வழிசார்ந்த ஆக்கத்தினையும் நீங்கிய நிலை.

சிவதுரியாதீதத்தில், அந்த உணர்ச்சியும் நீங்க, அந்நிலையிலே அறியவரும் பொருளாகிய சிவத்தோடு கலந்து தானே சிவமாகும். இந் நிலையில், மாயையில் கட்டுண்டு கிடந்த நிலைகளில் பயன்பட்டு வந்துள்ள கட்டுநிலை சார்ந்த அறிவு ஆகிய பாச ஞானம், பசு ஞானம் என்பவை இனியும் பயன்படாத அறிவுகள் ஆகிவிடும். அடுத்த நிலைக்குப் பயன்படாமல் போய்விட்ட பாச ஞானம், பசு ஞானம் ஆகியவற்றை வேண்டாது அவற்றினின்றும் நீத்து – அகன்று – விடுதலை பெற்று நிற்கும் உயிருக்கு, அவற்றினும் மேலான ஞானத்தை விரும்பும் நிலை இருக்கும். அந் நிலையில் அவ் ஆன்மாவுக்குப் பதிஞானமாகவே வாய்ப்பது அகண்ட அறிவே – இறையறிவே - வாலறிவே.

அந்த அறிவு அளவின்றிப் பெருகும் இயல்பினது; அதனால் அகண்டம் வாய்க்கும்; அதற்கு எல்லை இல்லை. இவ்வாறான வியன்மை நிலையினைப் பொதுமாந்தருக்கு உரைக்கையில், “இனி, நான் எல்லா உடம்புகளிலும் புகுந்துகொள்வேன்” என்று வள்ளல் பெருமானார் தம்மை அடிசார்ந்திருந்த ஏதும் அறிவறியாத ஏழை மாந்தருக்கும் ஒருவாறு புரியும்படியாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

மாயை வகைகளுள் பொருந்தி இயங்கும் நிலையில், தான் எனும் உணர்வு நீங்கப்பெறுவதில்லை. மேற்சொன்ன ‘அகண்ட அறிவு’ இந்நிலையில் அமையப் பெறுவதில்லை. மாயையை நீங்கிச் சிவத்தினைச் சாரப்பெறுகையில் மட்டுமே இந்த எல்லை இல்லாத – எல்லைப்படாத அகண்ட நிலையும் வாய்க்கின்றது; அகண்ட அறிவும் வாய்க்கின்றது.

[ குறிப்பு:- இக் கருத்துகளைத் திருமந்திரத்தில் வரும் முப்பரம் என்ற பகுதியிலும் அதற்கு முன்னும் பின்னும் உள்ள பிற பகுதிகளிலும் கண்டறியலாகும். முப்பத்தாறு மெய்களைத் துணைகொண்டு பின்னர் அவற்றையும் கடந்து மேற்சென்று மெய்ப்பொருள் கண்டு; அதனால் பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காணப்படும் அருள்நெறியினை இவ்விடத்து அறிக.]

சத்து சித்து ஆனந்தம் ஆகிய மெய் அறிவு இன்பம் என்பவற்றுள் ஆனந்தம் எனும் இன்பமானது, தன்னையறிந்து விடுதலை எய்திய அறிவர் ஆகிய அருளாளர்களால் வீடுபேறு என்று குறிக்கப்பட்டது. இதனை, “இச்சை அற்றவிடம் அகப்பேய், எம்இறை கண்டாயே” என்று அகப்பேய்ச் சித்தர்பிரான் குறிப்பிடுகின்றார்.

அதைப் பெறுவதற்குக் கருவியான – சாதனமான இடங்கள் நம் உடம்பில் உள்ள ஐம்பூதங்கள் நிலம், நீர், தீ, வளி, விண் என்பன. அவற்றைக் குறிக்கின்ற குறியீடுகளே அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்து குறில் எழுத்துகள். இவை ஐந்தும் நம் உடம்பில் ஐம்பூதங்களின் தலங்களாக இருக்கின்ற நிலம் (மூலம்), நீர் (உந்தி), தீ (நெஞ்சகம்), வளி (கழுத்து), விண் (புருவநடு) ஆகிய ஆதாங்களில் ஓகச் செய்கை ஐந்துமுறை மாறி நடைபெறுவதற்குத் திருவைந்தெழுத்து ஐந்து அடுக்காக அமைந்துநின்று உதவும். [காண்க: திருமந்திரம் 920: முனைவர் சுப. அண்ணாமலை அவர்களின்ஆய்வுப் பதிப்பு]

ஐவகையும் பெற்றுலக அண்டபகி ரண்டம்எலாம்
தெய்வம்என நின்றதிறம் அறியேன் பூரணமே
                            - பூரணமாலை : 57



ஐம்பூதம்

ஐந்தெழுத்து

ஐம்பூதக்
குறியீடு

ஐம்பூத
ஆற்றல்களின்
குறியீடு

உடம்பில் பொருந்தியுள்ள இடம்

விண்
புருவநடு
வளி
கழுத்து
தீ
சி
நெஞ்சகம்
நீர்
உந்தி
நிலம்
மூலம்

அவற்றின்கண் பொருந்தியிருந்து இயங்குகின்ற ஆற்றல்களைக் குறிப்பதற்கு முறையே மேற்குறித்த ஐந்து உயிர்க்குறில் எழுத்துகளின் நெடில்வடிவுகள் ஆகிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்ற ஐந்தும் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆற்றல்களை ஒருங்கே இணைத்தல் வழியாக ஆனந்தம் ஆகும். இவற்றின் பயனாக அடையப்பெறும் இறைமயம் - சிவமயம் என்பதனைக் குறிப்பதாகவே ஐந்தெழுத்து குறியிடப்பட்டுள்ளது.

ஓம் எனும் மந்திரம் ஒன்று, ஐம்பூதங்களின் குறியீடுகள் ஆகிய அ, இ, உ, எ, ஒ ஐந்து; அவற்றை இயக்கும் ஆற்றல்களாகிய ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஐந்து; ந, ம, சி, வ, ய திருவைந்தெழுத்து ஐந்து ஆகிய இந்தப் பதினாறு எழுத்தும் உயிரை உய்விக்கும் நிலைகளாகும். ஓம் என்பதில் முதல் உயிர் எழுத்தாக உள்ள அ’கரத்திலிருந்து மற்ற பதினைந்து (15) உயிர் எழுத்துகளும் தோன்றும்.

ஓகத்தில் மூழ்கிடும் ஓகி; மூலத்தில் ஓங்காரத்தை உள்கி, மூலக்கனலோடு சிவனை எழுந்தருளுவித்து, அக் கனல் புருவநடுவில் அடைந்தபின், மெய்களிலிருந்து (தத்துவங்களிலிருந்து) விலகி; அவை (அந்த மெய்கள்) தான் அல்ல’ [அதாவது, இவ்வுடம்பும் அதன் கூறுகளும் தான் அல்ல, தான் ஆன்மா, உயிர்] என்று வேறுபடுத்தித் தன்னையுணர்ந்து; தன்னை என்றும் உடனாக இருந்து எல்லா நிலையிலும் இயைந்துநின்று தாங்கியருள்கின்ற சிவத்தினை மலர்மிசையில் காணப்பெறும் சோதிவடிவாகத் தொழுதுநிற்பன்.

அதாவது, அழல், கதிர், மதி இவற்றின் கலைகளை மதிமண்டலத்தில் ஒருங்கு இயைக்க வல்லார் அவ்விடத்தே (புருவ நடு) அடையும் நுகர்பவம் (அனுபவம்) விந்து, நாதம் என்ற சத்தியும் சிவமும் ஆகும். இதற்குச் சாதனம் பேசா மந்திரம் (அசபா) என்ற ஓங்கார (உயிர்ப்பக) மந்திரமும் திருவைந்தெழுத்துமேயாகும்.

மேற்படித் திருவைந்தெழுத்தைச் சங்காரத் தாண்டவ முறையில் [ தாண்டவம் யாவும் ஆன்ம நிலையில் வாய்க்கின்ற இறைநிலை இயக்கங்களின் உருவகிப்புக் கூற்றுகளாகும். ஈண்டுச் சங்காரத் தாண்டவம் என்பது உயிர் பிறப்பறுத்தலின் பொருட்டு திருவருளினால் மேற்கொள்ளும் அகப்பாடு.] இந் நுகர்பவம் மலர்மிசையில் உள்ள தாமரை மலரை விரியச்செய்து; அவ்விடத்தே வாய்ப்பது ஆகும். இது அறிவுவெளி நுகர்வபம் ஆதலின் இங்கே ஆன்மாவின் சிறைநிலை நீங்கப்பெற்று அதன் வியன்மைநிலை உணரப்படும்.

ஓகியின் மலர்மிசையில் ஞானசதாசிவத் திருக்கூத்து நடைபெறின், பதி, பசு, பாசம் என வெவ்வேறாகக் கூறப்பெறும் மூன்றும் தூயனவாக விளங்கும். மறைப்பு ஆற்றலாகிய திரையி (திரோதாயி) ஆனந்த சத்தியாகும்.

ஒருவனே சத்தி – சிவம் என இருமை நிலையினனாக உளன். ஆனந்தம் நல்குபவை அ, உ, ம என்ற முக்கூட்டு ஆகிய ஓங்காரம், முதலில் சத்தி, சிவம் ஆக இரண்டாயும், பின்னர்ச் சிவமாக ஒன்றாயும் விளங்கும். அதனையே ‘சிவாய’ என்னும் மந்திரம் புலப்படுத்துகின்றது.


விளக்கக் குறிப்பு:-

சி = இறை; = திருவருள் (சத்தி); = உயிர் (அ, உ, ம எனும் முக்கூட்டு ஒளி (கலை) பொருந்தி உயிரானது விந்து, நாதம் எனும் திருவடி – திருவடிப்பேறு – திருவடி ஞானம் அடைகிறது. அதற்கு உதவியது எனும் மதிக்கலை, எனும் கதிர்க்கலை, எனும் அழற்கலை எனும் மூன்று கலை). அழல், மதி, கதிர் என்ற இம் மூன்று கலைகளும் உச்சந்தலையில் ஒன்றாய்ச் சேர, உடம்பைக் கடந்து விளங்கும் அருட்சத்தியின் ஒளியைக் காணப் பெறலாகும். இதனை அறிவானந்தமாகப் பெற வல்லவர்களுக்கு அவர்களின் அகத்தே, ஆனந்தக் கூத்தாக உணரப்படும். இது ஞான மாத்திரமாக அதாவது அறிவினளவிலே நிகழ்தல் உணரப்படும்.

சத்திசிவம் இரண்டாய்த் தான்முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்றதிறம் அறியேன் பூரணமே
                            - பூரணமாலை 59

என்று பட்டினத்தார் அருளிச்செய்த பூரண மாலையிலும் இது நன்கு தெளிவுறச் சுட்டப்படுதல் கொண்டு தெளியலாகும்.

அடுத்து, தொப்புளில் சுருண்டு மூலம் வரையில் கிடக்கும் நிலையிற் காணப்படும் குண்டலி ஆகிய பாம்பு, கொப்பூழினிடத்துப் பொருந்தி மதிக்கலையை வளரவொட்டாமல் தடுக்கும் - கெடுக்கும் வகையில் விந்தினை நீங்கச்செய்து வருகின்றது. காமம் என்ற தீய பண்பினால், குண்டலி ஆற்றலும் பயனின்றி அதாவது அதன் வழியாக வரத்தக்க ஈடேற்றநிலை ஏற்படாமல் தடைப்பட்டு நிற்கிறது. இவற்றால் கதிர்க்கலையும் வீணாகும்.

ஆதலினால், முதலில் குண்டலிக்கும் மதிக்கலைக்கும் உள்ள மாறுபாட்டினை நீக்கிட வேண்டும். அவ்வாறு தடைநீங்கிடும் நிலையில், ஒக்குறுத்தும் ஓகம் பயின்று, ஓங்காரத்தால் முற்றுகையிட்டு எழுப்பி, மல ஆற்றலை உடைத்துக் குண்டலியையும் மூலக் கனலையும் புருவ நடுவுக்கு ஏற்றினால்; மதிக்கலை வளர்ந்து நிறையொளி அடைந்திடும். மதிமண்டலத்தில் இதனால், சாவா மருந்து ஆகிய அமுதம் விளையும்; உயிர் அதனை நுகர்ந்து நிலைபெறும் - நீடுவாழும்.

இவ்வாறாக, புருவநடுவுக்கு மேலே மன்று – மன்றம் – சவை (சபை) - அம்பலம் (பொன்னம்பலம்) ஆகிய மலர்மிசையில் ஆன்ம உணர்வு மேம்பட்டு வந்து விளக்கமுற்று நிற்கும். 

அறிவுவெளியில் ( சிவவிசும்பில் - சிதாகாய வெளியில்) சத்தி, சிவம் ஆகிய இரண்டும் இயைந்து விளங்க; அதற்கு முன்னர், சத்தி முதலிலும், சிவம் அடுத்தும் உயிருணர்விலே நடமாடித் தோன்ற – விளங்க; அதற்கு முன்னர் மதிமண்டலம் ஆகிய ஒன்றினிடத்தே (நெற்றி, தலை) மதி, கதிர், அழல் எனும் மூன்று ஒளிகளும் முக்கூட்டு ஒளியாக விளங்க; மூலம் முதல் மலர்மிசை வரை ஏழு ஆதாரங்களும் (ஆதாரம் ஆறும் நிராதாரம் ஒன்றும்) ஒருங்கே ஒளிபெற (உயிர் புதுமலர்ச்சி பெற) உயிருணர்வின் காட்சியில் சிவம் என்ற ஒன்றிலேயே சிவம், சத்தி, நாதம், விந்து என்ற நான்கு மெய்களும் (தத்துவங்களும்) விளங்க; [ இவற்றுள் சிவம் பரநாதம் ஆகும்; சத்தி பரவிந்து ஆகும். அவ்விரண்டும் மெய்(தத்துவம்) கடந்தவை ] இந்நான்குடன் சதாசிவன், மாயீசன், உருத்திரன், திருமால், பிரமன் என்ற ஐந்தும் சேர்ந்து ஒன்பது நிலைகளும் விளங்க; இறைவன் இரத்தின மேனியனாகத் திருக்கூத்தினை நிகழ்த்தினான். இஃது உயிரின் பக்குவமுறுகின்ற நிலையினை உச்சியிலிருந்து கீழ்நோக்கிய நிலையில் கூறியதாகும்.

[ சிறப்புக் குறிப்பு:-  இவ்வுண்மையினை உணர்த்தும் வகையிலே சிதம்பரத் திருக்கோயிலில் மாணிக்கக் கல்லில் நடவரச வடிவம் இருப்பது அறிக. மலர்மிசையில் மலர்ந்திடும் - நடனமாடும் இறையொளி செவ்வண்ணமாக இருந்தமையால் இவ்வாறு (மாணிக்கக் கூத்தன்) எனக் குறியீடு செய்து கூறப் பெற்றது. இதனையே பத்திரகிரிப் பெருமானும், “ நீடும் புவனம்எல்லாம் நிறைந்து-சிந் தூரமதாய், ஆடும் திருக்கூத்தை அறிவதுஇனி எக்காலம்?” (192) என்று பாடுவார். மாணிக்கம் என்பது செந்நிறம் குறித்து நிற்பது போல, சிந்தூரம் அதாவது செந்தூரம் என்பதும் செந்நிறக் குறிப்போடேயே நிற்பதை ஒப்பிட்டு உணர்க.]

[ நன்றிக் குறிப்பு:- இப்பகுதி பேரா. முனைவர் சுப. அண்ணாமலை அவர்களின் திருமந்திர விளக்கத்தினை அடியொற்றி எழுதப்பெற்றது. இதில் முற்றிலும் ஊனுடம்பாகிய ஆலயத்தில், மலர்மிசை எனும் பெருங்கோயிலில் தன்னை அறிந்து தன் தலைவனை அறியும் மெய்யியல் நெறி விளக்கப் பட்டுள்ளதை ஆழ்ந்து நினைந்து தெளிக.]


சகத்திரத்தின் மேல்இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே
                                      - பூரணமாலை 38


ஓர் ஆய்வுக் குறிப்பு:-  


சாதனம் எனும் சொல்லுக்குக் கைகூடப் பழகப்பெறும் பயில்வழி – பயில்கருவி என்று பொருள். சாதனை செய்தல், சாதகம் செய்தல் என்பவை முறையே ஒன்றனை அடைதற்காகக் கைகொள்ளப்பெறும் பயில்நிலை. சாத்து என்பதற்குக் கூடி அமையப்பெற்றதாகிய கூட்டம், திரள் என்ற பொருள்குறிப்பு மிக மேலோட்டமானது. அதன் ஆழோட்டமான பொருள் இன்னும் ஆழ ஆய்ந்து செல்வார்க்குப் புரிவதாகும்.

சாத்து என்பதற்குப் பொருத்து – பொருந்து; கூடு – கூட்டு – கூட்டுதல் அல்லது சேர் – சேர்த்து – சேர்த்துதல் என்று பொருள்படும் பழந்தமிழ்ச் சொல்லாகும். சாத்து > சாது எனத் தொகுத்தல் திரிபு (சொல் சுருங்குதல் – சொல்லில் இருந்த எழுத்து மறைதல்) பெற்றுள்ள வடிவத்திலிருந்தும் சாதனம், சாதனை, சாதகம் எனப் பல சொற்கள் இதே போக்கில் பிறந்துள்ளன.

சாது என்பதிலிருந்தே ஒன்றைச் (கை)சேரப்பெறுதலுக்கு - கைவரப்பெறுதலுக்கு என மேற்கொள்ளும் பயிற்சிக்கு (பொருந்திப் பழகலுக்கு)ச் சாதகம் எனவும், அவ்வாறு பொருந்திப் பழகலுக்கு உதவுவது சாதனம் (கருவி, செயல்முறை, செயல்வகை) எனவும் கூறப்பெற்றது. இதனை ஓகம் (யோகம்) என்ற சொல்லை மீட்டமைத்துக்கொண்டதைப் போல ஒரு மீட்பாக்கச் சொல்லாகக் கொள்ளவேண்டும். இதன் தொடர்ச்சியாக உள்ள சாத்து + இயம் > சாத்தியம் என்னும் சொல்லையும் உடன்மீட்டுத் தமிழ்ச்சொற் களஞ்சியத்தில் சேர்த்தல் காலத்தால் வாய்த்திருக்கும் மெய்வாய்ப்பு.

சாத்து என்னும் கூட்டுவிக்கும் – பொருத்துவிக்கும் கருத்துக் குறிப்புள்ள சொல்லினின்றே மெய்யியல் வழக்கில் பரவலாகப் பயிலப்பெறுகின்ற சத்தி என்னும் திருவருள் குறித்த சொல்லையும் இனங்காணலாம்.

உயிர்களுக்கு இறைமயம் ஆகும் வழியினைக் கூட்டுவிப்பதாக அமைந்த அருள்நிலைப் படிகளைச் சத்தி – சத்தி வகை என்று குறிப்பது கொண்டு இவ்வுண்மையினை உணரலாகும். சாத்து > சத்து (கூட்டு, சேர், ஒன்றுவி) என்பதிலிருந்தே சந்து (கூட்டு – கூடு, சேர் - சேர்த்து) > சந்தி – சந்தித்தில் முதலான சொற்களும் தோன்றியுள்ளன. அதுவே சந்து > சந்தை என்ற சொல்லுக்கும் பிறப்புத் தடம் தந்திருக்கிறது.

சாத்து என்னும் கூட்டுவிக்கும் கருத்துக் குறிப்புள்ள சொல்லினின்றே பரிச்சாத்து (குதிரைக் கூட்டம்), வணிகச் சாத்து (வணிகக் கூட்டம்), ... முதலான தமிழ்ச் சொற்குழாம் தோன்றியிருக்கின்ற வரலாறும் இதற்கு நல்ல சான்று கூறுகின்றது. சாத்தன் – சாத்தவர், சாத்துவான் (மாசாத்துவான்), சாத்துவன் - சாதுவன், என்பவை வணிகம் செய்யும் கூட்டத்தாரையும், அக் கூட்டத்தவர்க்குத் தலைவராக இருப்பவர்களையும், அன்னவருள் எல்லாம் தனிசிறந்தோங்கியவர்களையும் ஒருசேரக் குறித்தலைக் காண்க.

சாத்து > சாது எனத் தொகுத்தல் திரிபுபெற்ற வடிவிலிருந்து சாதித்தல், சாதனை, சாதகம் போன்ற சொற்களெல்லாம் பிறந்துள்ளன. சாதித்தல் என்பது ஒன்றில் பொருந்திப் பழகி; அதனை நன்கு அடையப்பெறுதல் - கைகூடப்பெறுதல் என்று பொருள்படும். சாதனம் பண்ணல் என்பது பழகல், உறுதிசெய்தல். சாதகம் பண்ணல் என்பதும் பழகுதல், கைவரப்பண்ணல் என்றே பொருள்தருதலைக் காண்க.

பொருந்துதல் வினைக்கருத்து வழியாகப் பிறந்து கிளர்ந்துள்ள இவை யாவும் ஒரே கருத்துப் போக்கில் நிற்பதைக் கண்ணுறுக. எனவே, சாத்து, சாதனம், சாதகம், சாதித்தல், சத்தி, ... முதலான சொற்கள் யாவும் தமிழ்ச்சொற்கள் என்று அறிக. இவற்றை நெட்டநெடிய வழக்காற்றினால் வடவரும் தென்னவரும் பொதுச்சொற்கள் எனக் கொள்வது நன்று. வடவர் தமக்கேயுரிய ஒலிமயங்கியல் மரபுப்படி எப்படியேனும் எழுதிக்கொள்ளட்டும். அவர்களைத் தமிழர் பின்பற்றிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை. தமிழை அதன் தடத்திலிருந்து பயின்று புழங்குவது தமிழர்க்குக் கடனே!

1 comment: