குய்
- கோய் – கோயம் - கோசம்
குய் என்பது ஒரு கிளைவேர்ச்சொல். அது
குத்துதல், குத்தித் துளைத்தல், துளைசெய்தல் என்னும் கருத்தீடுகளை உள்ளிட்டது.
அதன் வழியில் பிறந்த சொற்களே குயவன், குயவு, குயத்தி,... போன்றவை என்க.
குய் + இல்
> குயில் = துளை, துளையுடைப்பொருள், இசைக்குழல், பொன்
போன்றவற்றில்
பதியுமாறு அதாவது குழியுமாறு
மணி
முதலியவற்றைப் பதித்தல்.
குயிலாயம் = சுவர் அறை (சுவரில் குழித்து
உண்டாக்கிய அறை-சிற்றறை),
உட்குழித்தத் தோற்றமுடைய
பறவைக் கூடு, மண்ணைக்
குழித்து மட்கலம் செய்யும்
இடம்.)
குயில் >
குயில்தல்(குயிலுதல்) = பதியுமாறு உள் அழுத்துதல்-புகுத்துதல்.
குய் + இறு
> குயிறு
குயிறல்
= துளைத்தல், பதித்தல்.
குய் + இனர்
> குயினர் = இரத்தினம்
துளையிடுவோர், தையற்காரர்.
குயிலெழுத்து = ஒருபொருளின் மீது குயிற்றிய – அழுத்திப்
பதித்த எழுத்து.
குய் + அம்
> குயம் = உட்துளைப்புடைய
நாணற்புல், தருப்பைப் புல்.
ஆய்வுக் குறிப்பு : குயம் எனும்
உட்டுளைப்புடைய புல்வகை குசம் என்றும் இடைத்திரிபு பெற்றுள்ளது.
அதிலிருந்தே, வால்மீகி முனிவர் சீதையின் பிள்ளையைக் காணவில்லை என்னும்
கலக்கத்தில் அவர்தம் வேள்விக் குண்டத்தில் குசம் (குச) என்னும் புல்லை
எடுத்துப் போட்டுக் குழந்தையுருவில் மாற்றினார் என்பதன் காரணமாக, அக்குழந்தைக்குக்
‘குச’ எனும் பெயர் இடப்பட்டது என்பது கருதத்தக்கது.
துளைத்தலின்
அடுத்த, தொடர்வினைகளுள் ஒன்றாக வருவது உட்குழிப்பான தோற்றம். வெளியேயிருந்து
பார்க்கையில் உருவப்பொருளாகவும் அதன் உள்ளே பார்க்கையில் ஏதுமற்ற வெற்றான
உட்குழிவு கொண்டதாக உள்ள பொருள்களுக்கும் இதே குய் என்னும் வேர்வடிவிலிருந்து
பெயர்கள் பிறப்பிக்கப்பெற்றுள்ளன.
அவ்வகையில்,
உட்குழிப்பு-உட்குழிவு ஆகிய உட்துளைப்புடைய பொருள்களும், கருவிகளும்
உறுப்புக்களும் ஒட்டுமொத்தமாக ‘குய்யம்’ என்ற ஒரே சொல்லால் அவற்றின்
அமைப்புநிலை காரணமாகக் குறிக்கப்படுகிறது.
குய்யம் = மலவாயில்,
ஆண்குறி, பெண்குறி, ஆமை, பொய், வஞ்சகம்,
மறைவு, கபடம்.
இதற்கு
ஒத்ததாகவே கோயம் > கோசம் என்ற சொல்லுக்கும் முறையே ஆண்குறி, உறை,
கருகூலம் (கருவூலம்), கருப்பை, பண்டாரம், மேற்போர்வை, கவசம்... எனும்
உள்துனைப்புக் கருத்துக்கு உறவுள்ள சொற்பொருள்களும் வளர்ந்துள்ளன.
இனி, இந்தக் குய்
என்ற வேர்வடிவமே கோய் எனத் திரிந்த நிலையில், உறை எனும்
பொருளையும் கொண்டது. உறை என்பது பிற பொருளுக்கு அதனுள்ளே இடம்தரும்
அமைப்பில் உட்குழிவுபெற்ற வடிவில் இருக்கிறது.
இந்த
அமைப்பியல் நிலையைக் காரணமாக வைத்து பருவுடம்புக்கு உள்ளும் புறமுமாகச்
சூழ்ந்துள்ள நுண்ணிய உடம்பு வகைகளைக் குறிக்கக் கோசம் என்ற பெயர் உருவானது.
குய் >
கோய் > கோயம் > கோசம் என்பதிலிருந்து உறையிட்டது போன்ற
உடம்புகளின் மேற்போர்ப்பு குறித்த சொல்லும் பிறந்திருப்பதைக் காணமுடிகிறது. நாம்
காணுகின்ற பருவுடலின் சார்ந்த அடுக்குகளாக – படலங்களாக உள்ளேயும் வெளியேயும்
உடுக்கப்பெற்றுள்ள உடம்புகள் உள்ளன என்று மெய்யியல் நூலார் கூறுப. அவை ஒன்றன்மேல்
ஒன்றாக உறைபோல ஒன்றையொன்று உள்ளிட்டுக் கொண்டு சூழ அமைந்துள்ள காரணம்பற்றிக் கோசம்
என்று பெயரிடப்பட்டுள்ளன.
அன்னமய கோசம்,
பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பவற்றை
வடநூலோர் பஞ்சகோசம் என்பர். இவற்றை முறைமுறையே உணவுடம்பு, வளியுடம்பு,
மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்று தமிழில் ஐயுடம்பு என்பர். அவற்றை உணவுக்கோசம்,
வளிக்கோசம், மனக்கோசம், அறிவுக்கோசம், இன்பக்கோசம் என்றும் கூறலாம். கோசம்
என்பது தூய தமிழ் மெய்யியல் வழக்குச்சொல்.
No comments:
Post a Comment