Saturday, July 13, 2013


தொன்றுதொட்டு
வருவது ஒளிநெறியே
என்றும் தொடரத் தகுவதும் அதுவே


இந்த நூலின் தலைப்பாக அமைந்துள்ளதும் கருவாக அமைந்துள்ளதும் ஒளிநெறி என்பதே. இந்த ஒளிநெறியே எல்லாவற்றிலும் ஊடாக இழைந்தோடி நிற்கின்ற உட்சமயம் என்பதாகும். அதுவே கடவுட் சமயம் எனப்படுகிறது [கடவுள்நிலை அறிந்து அம் மயம் ஆதல் என்பதற்கு ஆற்றுப்படுத்துவது எனும் பொருளில் கடவுட் சமயம் எனப்படுகின்றது.]

அந்த உண்மையினைத் தாயுமானவப் பெருமானார்தம் திருவாய் மொழியிலிருந்து தேர்ந்து தெளிந்துகொள்ள வாய்த்த திருவருளுக்கு என்ன கைமாறு கொடுக்கவல்லேன்! அதனை என்னொத்த ஏனையோர்க்கெல்லாம் தமிழ்தந்த உறவினோடும் உரிமையோடும் ஒருமையோடும் ஒத்துணர்ந்து உளமார நினைவுப்படுத்துவதில் நெகிழ்கின்றேன்! மகிழ்கின்றேன்!

    தாயுமானவப் பெருமானார் தந்தருளிய திருவருட் செய்தியாக இதனை இங்கு அவர்தம் மொழியிலேயே தருகின்றேன். அது புதுவதன்று; தொன்மையறியாத இயற்கைத் தொன்மையுடையது.

நல்லார் நால்வர் எனப்படும் முன்னை நால்வர் என்று பொய்த்திறம் நீக்கி; மெய்யிலே மெய்த்திறம் கண்டவர்கள் கொண்டாடும் நல்லாதர் (சனாதர்), நல்லாதன்குமரர் (சனாதகுமாரன்-சனற்குமாரர்), நன்னாகர் (சன்நாகர் > சனாகர்), நன்நந்தர் (சன்நந்தர் > சனந்தர்) என்போர்க்குச் சிவபிரான் அருளிச்செய்த நெறி என்பது ஒளிநெறி என்பதைத் தாயுமானவர் ஐயந்திரிபற உரைக்கின்றார். அதனை வருமாறு காண்க:


     அன்றுநால் வருக்கும் ஒளிநெறி காட்டும்
                அன்புடைச் சோதியே செம்பொன்

        மன்றுமுக் கண்ணும் காளகண் டமுமாய்
                வயங்கிய வானமே என்உள்

        துன்றுகூர் இருளைத் துரந்திடும் மதியே
                துன்பமும் இன்பமும் ஆகி

        நின்றவா தனையைக் கடந்தவர் நினைவே
                நேசமே நின்பரம் யானே!
-          தாயுமானவர் திருப்பாடல்கள்
சிவன்செயல் : 9



பொருளைப் பூவைப் பூவையரைப்
        பொருளென்று எண்ணும் ஒருபாவி

இருளைத் துரந்திட்டு ஒளிநெறியை
        என்னுட் பதிப்பது என்றுகொலோ

தெருளத் தெருள அன்பர்நெஞ்சம்
        தித்தித் துருகத் தெவிட்டாத

அருளைப் பொழியும் குணமுகிலே
        அறிவா னந்தத்து ஆரமுதே!
-          தாயுமானவர் திருப்பாடல்கள்
ஆசையெனும் : 9



யானெனல் காணேன் பூரண நிறைவினில்
        யாதினும் இருந்தபே ரொளிநீ

தானென நிற்கும் சமத்துஉற என்னைத்
        தன்னவன் ஆக்கவும் தகும்காண்

வானென வயங்கி ஒன்றிரண்டு என்னா
மார்க்கமா நெறிதந்து மாறத்

        தேனென ருசித்துஉள் அன்பரைக் கலந்த
                செல்வமே சிற்பர சிவமே!
-          தாயுமானவர் திருப்பாடல்கள்
சிவன்செயல் : 10


‘யாதினும் இருந்த பேரொளி நீ’ என்று அவர் இறையினைக் குறித்து ஓதுகின்ற உட்கிடை யாதென்பது விளக்கம் ஏதும் இல்லாமலே நேரே விளங்கவில்லையா? அதற்கான நெறியை ஒருமையினால் கொண்டுணர்ந்து வாழும் நெறி என்பதை ‘மாநெறி’ என்று குறிப்பதையும் ஆழ்ந்து ஓர்க!

மும்மலத்துள் முதல் மலமாகிய ஆணவ மலத்தின் ஓயாத வஞ்சக வடிவாக கற்றுவல்ல பேர்களுக்கும் உலகிற் கண்டுபிடித்துக் கொள்வதற்கு அரிதாகிய போலிமைத்திறம் மிக்க ஆரிய மாயையோடு திராவிட மாயையையும் மற்றுள்ள எந்தவகை மாயையையும் விலக்கி விளங்குக! இயற்கையுண்மைச் சிறப்பியல் செம்மொழிச் செம்பொருள் தெளிக!

என்றும் உன்னை இதய வெளிக்குளே
துன்ற வைத்தன னேஅருட் சோதிநீ
நின்ற தன்மை நிலைக்குஎன்னை நேர்மையாம்
நன்று தீதுஅற வைத்த நடுவதே!
-          தாயுமானவர் திருப்பாடல்கள்
பொன்னைமாதரை : 9


செய்யுஞ் செய்கையுஞ் சிந்திக்குஞ் சிந்தையும்
ஐய நின்னதுஎன்று எண்ணும் அறிவின்றி
வெய்ய காம வெகுளி மயக்கமாம்
பொய்யி லேசுழன் றேன்என்ன புன்மையே!
-          தாயுமானவர் திருப்பாடல்கள்
பொன்னைமாதரை : 12


ஆறுஒத்து இலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய்
வீறிப் பரந்த பரமான ஆனந்த வெள்ளம்ஒன்று
தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர் சித்தத்திலே
ஊறிப் பரந்துஅண்ட கோடிஎல் லாம்நின்று உலாவியதே!
-          தாயுமானவர் திருப்பாடல்கள்
பாயப்புலி : 12



No comments:

Post a Comment