Thursday, July 18, 2013



ஒத்தறிதல் - ஒத்ததறிதல்

 
எல்லார்க்கும் பொதுவில் இயங்குகின்ற – எல்லாப் பொருளிலும் பொதுவில் நடமிடுகின்ற அறிவுக்கறிவாகச் சிவணிநிற்கும் சிவம் ஒன்று இருக்க, அதன் இயற்கை இயல்புகளை உணரப் புறத்திலும் அகத்திலும் இயற்கை அமைப்பு நிலைகள் ஒருமையுற்று விளங்கியிருக்க, அவற்றிடையே வெறுப்பு மிகுத்துத் தோன்றுமாறு கருத்தியல் வகுப்பதும் செகுப்பதும் இயற்கைக்கு முரண்படுதல் – இயற்கையை முரண்படுத்துதல் ஆகும்.

முன்னர் உரைத்தவாறு ஆறாதாரத்திற்கு அடுத்து, அடிப்படை நாடிகளான ஞாயிற்று நாடி (பின்கலை > பிங்கலை), திங்கள் நாடி (இடைகலை), தீ நாடி (முன்கலை எனும் சுழுமுனை) என்பவற்றோடு பின்னிப் பிணைந்த நிலையில்தான் தொண்ணூற்றாறு கலைகளும் இயங்குகின்றன. முன்னைய இயலில் உள்ள விளக்கப்படத்தில் அவற்றைக் கூர்ந்து நோக்கி உணர்க.  

[குறிப்பு:- பின்கலை, முன்கலை, இடைகலை என்பன தூய தமிழ்ச் சொற்கள். இவற்றுள் பின்கலையைப் பிங்கலை எனவும், இடைகலையை இடகலை எனவும் ஐகாரம் அகரமாக திரிந்த நிலையில் ஆள்வதும் நம் நூல்களில் வழக்கமாகியிருக்கின்றது. இவற்றை வடசொற்கள் எனக் கூறுவது பித்தலாட்டம். காண்க:

பேருசொன்னேன் ஊர்சொன்னேன், இடமும் சொன்னேன்,
              பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்!
                                                    – அகத்திய சித்தர் : 34]

உடம்பார் அழியாமல், திடம்பட மெய்ஞானமுற்று வாழ்வதற்கு இவை வாயில்களாக உள்ளன. உடம்பகத்தே மதிமண்டலத்தில் அமைந்திருக்கும் மலர்மிசையில் அமுதம் ஊற்றெடுத்துப் பெருகிட, அங்குக் கதிர்க்கலை, மதிக்கலை, அழற்கலை, சிவகலை (நாதம்), சத்திகலை (விந்து) என்னும் ஐந்தும் ஒரே ஒளிநிலையாக இயைந்துநிற்க, முதுகந்தண்டு வழியாக உடல் முழுவதும் பரவப்பெறுபவர்க்கு நமன் இல்லை (அதாவது, இறப்புநிலை இல்லை); நரக (இருள்சேர் இருவினைகளால் நரங்கும்) வாழ்க்கை இல்லை, வாழ்நாள் எல்லை அடைபடுதல் (அறுபடுதல்) இல்லை (அதாவது, வாழ்நாள் வழியடைக்கும் கல் இல்லை) அதாவது நீடுவாழ்தலுக்கான வழி அடைக்கப்பெறுதல் இல்லை.

ஓகி (யோகி) தனது உச்சந்தலையினிடத்தில் தோன்றும் மலர்மிசையில் காண்பது சிவகலை - சத்திகலை என இரண்டும் சேர்ந்த பேரொளியைத்தான் எனினும், அதற்கு உதவியாக அமைந்திருப்பவை மேற்சொன்ன மூன்று கலைகளே. பேரொளிப் பெருநெறிக்கு வாயில்களாக உள்ள அவற்றைச் சிவகலை, சத்திகலை எனும் இரண்டோடு சேர்த்து ஐஞ்சுடர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழில் கலைச்சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண்டுஓட்டித் தரிக்க-வல் லார்க்கு
நமன்இல்லை நரகுஇல்லை நாள்இல்லை தானே
                                  - திருமந்திரம் 873

அடுத்ததாக, இவற்றுக்கு இடப்பட்டுள்ள அத்தனை பெயர்களும் காரணப் பெயர்களாகும். அந்தக் காரணங்களை ஆராய்ந்து ஆராய்ந்து அகத்துத் தூய்மையினால் திடம்பட்டுத் திடம்பட்டு மெய்ஞ்ஞானம் அடையப்பெற்று இயற்கையுண்மையைத் துலங்கக் காண்பது இதற்கான நெறியாகும்.

முதன்மையான இவை மூன்றையும் முப்பால் நாடி எனவும், முந்நாடி எனவும், முப்புரி எனவும் கூறுவர். இவற்றின் ஏனையவற்றைச் சேர்த்துப் பதின்நாடி (பதினாடி) என்பர். வடமொழியில் இவற்றைத் தசநாடி என்பர்.

முழுமொத்தமாக, உடம்பு முழுவதும் எழுபத்தீராயிரம் (72,000) நாடிகளும் கதிரவனிடத்திலிருந்து வெளிப்பட்டு விரிந்தோடும் கதிர்களைப் போல, ஒரு நடுவத்திலிருந்து பரந்தளாவி இருக்கின்றன. அந் நாடிகளின் ஊடாகப் பரவி இயங்கும் காற்றியக்கம், ஆன்மா தன்னை அறிந்து; சிவத்தினிடமாகச் செறிந்திடத் துணையாக இருக்கவல்லது.

எழுபத்து-ஈ ராயிரம் நாடி அவற்றுள்
முழுப்பத்து நாடி முதல்       - ஔவைக் குறள் 31

ஆதித்தன் தன்கதிர் போலஅந் நாடிகள்
பேதித்துத் தாம் பரந்த வாறு        - ஔவைக் குறள் 35

நாடி வழக்கம் அறிந்து செறிந்துஅடங்கி
நீடுஒளி கண்டது அறிவு      - ஔவைக் குறள் 39


முப்பால் நாடியின் வயமாக்கமுடைமை பற்றியே முப்புரிநூல் எனும் பூணூல் அணியப்பெறுகின்றது. இது பிறப்பறுக்கும் அறுதொழில் உடையவர்க்கே பொருந்துவதாகும். இது குருமாணாக்க நிலையில் கொள்ளப்பெறுகின்ற அகநினைவு கொளுவுதல் குறித்த புறக்குறி; பிறப்பறுத்தல் கடப்பாடு குறித்த நிலைபதிப்புச் செயலாகும்.

முப்புரிநூல் தவத்தோர் ஆகிய பெருமக்களுக்கு இடுதல் என்னும் வழக்கம் பொருளுள்ள ஒன்றேயாயினும், அது தெய்வப் படிமங்களிலும் இடப்பட்டுள்ள நிலையினையும் காண்கின்றோம். அஃது எப்படிப் பொருந்தும்? அத் தெய்வங்கள் பிறப்பறுக்கும் முயற்சி உடையனவோ?

இனி, நாடியில் நடக்கின்ற காற்றியக்கம் பற்றிய அறிவும் தெளிவும் நம்மை நோயற்ற வாழ்வு வாழ ஆற்றுப்படுத்தும். மூச்சியக்கம் இவற்றிலே இயைந்து நிற்கிறது. மூச்சுவழி உள்வாங்கிடும் உயிர்வளி (oxygen) உள்ளியங்கிப் பின்னர் கரிவளி (carbon dioxide) என நிலைமாறி வெளியேறுகிறது. உயிர்வளி ஆக்கம் தருகிறது; உடம்புக்குத் தரத்தக்க ஆக்கப்பயன் முடிந்த நிலையில், அதிலிருந்து கழிந்திடும் மலப்பொருளாக – நீக்கப்பொருளாகக் கரிவளியாகி வெளியேறுகின்றது – நீக்கம் தருகிறது. இது எல்லா உயிர்க்கும் நிகழ்ந்திருக்கும் ஒரு பொதுப்படை.

காற்றின் கணக்கறிதல் என்றொரு கலை மாந்த உயிர்க்கு மட்டும் வகையறிந்து வசங்கொள்ள வாய்த்திருக்கிறது. இதனைத் திருமூலர் தம் திருமந்திரத்துள் நன்கு விளக்குகின்றார். காற்றின் கணக்கறிதல் சார்ந்ததே  உயிர்ப்பு யாமம் என்பதாகும். அதனை வடநூலார் பிராணயாமம் அல்லது பிராணாயாமம் என்பர்.

இஃது உடம்பில் இயக்கமுறும் அடிப்படையான பத்துவகைக் காற்றுகளை நெறிபடக் கொள்ளும் வழிமுறை – கையாளும் நீடுவாழ்தல் பற்றிய கலைமுறை. அவை பலவாக இருப்பினும், அவற்றுள்ளும் மிக அடிப்படையானவையாக இருப்பவற்றைத் தமிழில் பதின்வளி எனவும், வடமொழியில் தசவாயு எனவும் கூறுவர். இவற்றைத் தமிழ்மருத்துவம் செய்வோர் நன்கு தேர்ந்திருப்பர். இவற்றின் வகையறியாதவர்கள் மருத்துவராக முடியாது.


எண்

தமிழ்

சமற்கிருதம்

செயல்விளக்கம்

1.
உயிர்க்காற்று
பிராணன்
நெஞ்சாங்குலை இயங்கி மூச்சியங்க உதவும்.
2.
மலக்காற்று
*அபானன்
மலநீர் வெளியேற்ற உதவுதல் – கீழ்நோக்கிய காற்று.
3.
தொழிற்காற்று
*வியானன்
குருதியோட்டம் உடம்பெங்கும் செல்ல உதவும்.
4.
ஒலிக்காற்று
*உதானன்
மேல்நோக்கிய காற்று, கொப்பூழில் இயங்கும்.
5.
நிரவுக்காற்று
*சமானன்
உண்ட உணவைச் செரிக்க உதவும்.
6.
தும்மற்காற்று
*நாகன்
நீட்டல், முடக்கல், பேசல், விக்கல் – இயங்கவுதவல்.
7.
விழிக்காற்று
கூர்மன்
இமைத்தல், விழித்தல், மயிர்சிலிர்த்தல் – இவற்றைச் செய்வது.
8.
தும்மற்காற்று
கிருகரன்
தும்மல், இருமல், வெம்மை, சினம் – இவற்றை உண்டாக்குவது.
9.
கொட்டாவிக் காற்று
தேவதத்தன்
ஓட்டம், இளைப்பு, வியர்வை, கொட்டாவி – இவற்றை விளைவிப்பது.
10.
வீங்கற்காற்று
தனஞ்செயன்
இறந்தபின் உடம்பினை வீங்குவித்து உச்சிவழி வெடித்து வெளியேறும்.

மேற்படி அவட்டவணையில், *-எனும் உடுக்குறி இடப்பட்ட சொற்கள் தமிழ்வேர்ச்சொல் வழிப் பிறப்பிக்கப் பெற்றுள்ள வடதமிழ்ச் சொற்கள்.

அவற்றுள், அவம் = கீழ் - கீழே. அவம்  > அபம் எனத் திரிந்து; அப + ஆனன் > அபானன் (கீழ்நோக்கிய காற்றியக்கம்) என வந்துள்ளது. விய்வியல் - வியாலித்தல் = பரவுதல், அகலித்தல், பரந்தியங்குதல். விய் + ஆனன் > வியானன். உது = மேல் – மேலே - உயரே. உது + ஆனன் = உதானன் என மேல்நோக்கிய காற்றியக்கம் குறித்து வந்துள்ளது. சமம் = ஒப்பு, நிரவு. சம + ஆனன் > சமானன் (நிரவும் காற்று – சமனிக்கும் காற்று. மற்றொன்று, உண்ணப்படும் பொருள்களை செரிக்கும் அதாவது சமிக்கும் (செமிக்கும்) காற்று எனலும் பொருந்தும்.) நாகன் என்பது நாகு + அன் எனும் அமைப்புள்ளது.

        மூச்சுக் காற்றைச் சுழுமுனை நாடியில் இயங்கச்செய்து; குண்டலி ஆற்றலால் மூலக்கனலை உதரம் ஆகிய வயிற்றினிடத்து (கொப்பூழ் ஆகிய உந்தியினிடத்து)க் கீழ்நோக்கிப் போகா வண்ணமாக மேல்நோக்கிய வண்ணமாக  ஏற்றும் வினைக்கும் உதவும் காற்று உதானன்.

அதாவது, மாந்த உடம்பில் கொப்பூழ் எனப்படும் தொப்புள்தான் நடுவாக உள்ளது. மறைப்பாற்றல் ஆகிய மலவாற்றலை உடைத்து; தொப்புளில் சுருண்டு மூலம் வரை கிடக்கும் குண்டலியாற்றலை, ஓங்கார மந்திரத்தால் முற்றுகையிட்டு (வளைத்திட்டு); அதனை எழுப்பி மூலக்கனலோடு புருவ நடுவிற்கு ஏற்றும் வகைக்கு உதவும்.
  
மகாரம் நடுவே வளைந்திடும் சத்தி
ஒகாரம் வளைத்திட்டு, ‘ம’-பிளந்து ஏற்றி
யகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரம் நற்காலும் நாடுமே
                                - திருமந்திரம் 912

குறிப்பு :- [ ‘மகாரம் நடுவே வளைந்திடும் சத்தி’ என்பது உடம்பின் நடுவிடம் ஆகிய கொப்பூழினிடத்து இருந்து வளைந்திடும் அதாவது மேல்நோக்கித் திரும்பிடும் சத்தி.  திருவைந்தெழுத்தில் உள்ள என்பது மலசத்தி ஆகிய மாயை சார்ந்த மறைப்பாற்றலைக் குறிக்கும். அதுவே, கொப்பூழினிடத்துள்ள குண்டலியாற்றலை ஓங்காரத்தால் எழுப்புகையில், அதனொடு கலந்துநின்ற மல சத்தியை உடைத்துவிட்டு; தூய நிலையில் இருந்து; உயிர்க்குச் சிவமாகும் தன்மையில் விளங்கும். இதனையே, ‘ஒகாரம் வளைத்திட்டு’ அதாவது ஓங்காரத்தால் வளைத்திட்டு; ‘ம’ – பிளந்து ஏற்றி – மலசத்தியை உடைத்து – அதன் மாயைச் செயல் அற்றிடச்செய்து; சிவமாகும் தன்மைபெறுதல் என்று திருமந்திரம் உரைக்கின்றது.]

அதன் வழியாக உயிர் தன் உண்மை நிலையை அறிவதற்கு உரிய திருப்பமாக – திருப்புமுனையாக – கொப்பூழ் வட்டத்திலே அமைகின்ற காற்று உதானன். இவ் வட்டம், உயிர் மாயை நீங்கித் தன் உண்மை நிலையினை அறிவதற்குத் திருப்பமாக அமைகின்ற இடமாக இருப்பதால்தான், வடமொழியில் இவ்விடத்திற்குச் சுவாதிட்டானம் (ஸ்வ + அதிஷ்டானம்) என்று பெயரிட்டுள்ளனர். கண்போன போக்கில் மனத்தைப் போகவிட்டு உலகியல் மயக்கத்தில் வெறித்துக் கிடந்த உயிர்க்குத் தன்னைத் தான் யார் என்று அறிவதற்கு உரிய உள்முகத் திருப்பமாக அமைகின்ற இடம் இதுவாகும்.

எனவே, கீழ்நோக்கிப் போகத் துணையாகி நிற்பது அபானன்; அவ்வாறு கீழ்நோக்கிப் போகாமல் மேல்நோக்கித் திருப்பியது – திரும்பியது உதானன் என்ற காற்று. அஃது இயங்குகின்ற இடம் உதரம் – வயிறு (கொப்பூழ் - உந்தி) அமைந்திருக்கும் பகுதியாகும்.

     மேல் – மேலுறு, மேலெழு, ... எனும் பொருள்குறிப்புள்ள அடிச் சொல்லிலிருந்துதான் (உள்ளிழுத்தல் – வெளிவிடுதல் வினையின் காரணமாக மேல் எழும்பியும் உள் அமுங்கியும் வரும்) மூச்சியக்கத்திற்கு இடமாக இருக்கும் இடத்திற்கு - வயிற்றுக்கு உதரம் என்றொரு பெயரும் வந்துள்ளது. உது > உந்து என விரிந்த வடிவிலிருந்து; உந்து + இ > உந்தி எனும் பெயரும் அங்குப் பொருந்தியுள்ள கொப்பூழுக்கும் உண்டாயிற்று. அதே இடத்தில் பரந்தமைந்து  மூச்சுக்கு உந்துகளமாக இயங்கும் (Diaphram) உதரத் தசைக்கும் வடமொழியில் உதர விதானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை உந்து சவ்வு என்று தற்காலத் தமிழ் அறிவியலார் குறிப்பதும் அதன் வேரமைப்பிலிருந்து விலகவில்லை.

இவ்வுண்மையினை, மெய்நூல் அல்லது மெய்யியல் நூல்களில் உள்ளம் தோய்ந்திருப்பவர்களுக்கு நன்கு புரிந்துகொள்ள முடியும். அவற்றைக் குறித்துக் கனவிலும் கண்டறியாதவர்கள் அம் மெய்யியல்கள் உருவகித்து உரைத்துள்ள கலையுரைத்த கற்பனைகளும், அவை சார்ந்த சடங்கியல்களும் மட்டுமே தெரிந்திருக்கும். மெய்மச் சடங்கியலில் பொதிந்துள்ள கருத்தியல் யாதெனத் தெளிய மாட்டாத அறியாமைதான் நம்மிடையே நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்க்கு அடர்த்துநிற்கின்றது.

தொண்ணூற்றாறு மெய், தொண்ணூற்றாறு கலை என்பவற்றின் இயைபினைக் கூறும் மெய்யியல் பிரிவுகளாகத்தான் அதாவது உடலியக்கம், உயிர்ப்பியக்கம், உணர்வியக்கம், அறிவியக்கம், ஒட்டுமொத்த இயற்கை இயைபியக்கம் என்பவற்றைக் கூறுவனவாகத்தான் சமய நெறியும், சமயங் கடந்த செந்தண் நெறியும் (சித்தர் நெறியும்) திகழ்கின்றன. இதனால் ஊனுடம்பு ஆலயம் என்பதன் செவ்விய கருத்து விளக்கமாகின்றது அல்லவா?

     கருவிகள் தொண்ணூற்றாறில் விளையாடினதை
        இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே!
                                - பூரணமாலை 22

        உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்னும் ஆன்மநெறிக் கலையே – வாழ்வியல் பெருநெறியே தமிழ்நெறி – தமிழர் கண்ட இயற்கைச் செந்நெறி. இந் நெறியினைப் பல்வேறுபட்ட நிலையிலுள்ள மக்களும் தத்தம் அறிவுணர்வு நிலைகள் சார்ந்திருக்கின்ற நிலைவேறுபாட்டால், தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலைமையில் முரணிக்கொள்ளவும் முட்டிக்கொள்ளவுமான ஒரு பொய்த்தோற்றம் - பொய்நிலை தெரிந்து கொண்டிருக்கின்றது. யாரையும் எதையும் வெறுக்காத நிலையில்தான் அந்தப் பொய்த்தோற்றம் - பொய்நிலை தானாக நீங்கப்பெறும்.

எனவே, விருப்புவெறுப்புகள் ஆகிய அவற்றிடையே சார்புகொள்ளாது நடுநிலையில் இருந்துகொண்டு; பொதுவின் உளம்பட நோக்க வல்லார்க்கு, நுணுக்கரிய அதன் நுண்மையும் பருமையும், அவையிரண்டையும் கடந்துநிற்கும் இயற்கையுண்மையும் ஐயந்திரிபறத் தெரியத் தவறுவதில்லை. இந்த நடுநிலையாளர்களால்தான் உலகம் இன்னமும் இருந்து இயங்கிக்கொண்டுள்ளது. ‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்னும் திருவள்ளுவம் இவ்வுண்மையில் நம்மை நடுக்கமறத் தேற்றும்.

இத்தகைய நடுநிலைப் பண்புடைய திறவோர் – அறவோர் தம் புலம்வென்ற புன்மையில் காட்சியில்தான், “யாதும் ஊரே யாவருங் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, ... மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்னும் பூங்குன்றப் பெருமானின் சமயமதங்களைக் கடந்த இயற்கை அறிவியமும் சீர்தருகின்றது.

தமிழரின் உயர்ந்த பேருலகப் பெரும்பண்பாட்டு விளக்கமாக பூங்குன்றப் பெருமானார் அருளிச்செய்துள்ள பதின்மூன்று அடிகளைக் கொண்டுள்ள பாட்டு, அதிலும் குறிப்பாக முதலிரண்டு அடிகள், அதிலும் சிறப்பாக முதல் ஒரு வரியே கலங்கரை விளக்கமாக பன்னிலை சார்ந்த அறிவுக் கலங்களையெல்லாம் ஒருங்கே நின்று கரைக்கு (பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர) அழைக்கின்றது (கரைகின்றது).

        இயற்கைத் திருவாக, இயற்கைக் கருவாக இயற்கை உருவாக முன்னைத் தமிழ்ப்பெருமொழியும் அது தாங்கிநிற்கும் தமிழியம் என்னும் இடையறாத வாழ்வியல் மரபும் எத்தகைய பொதுமை சான்றவை என்பது இதன் வாயிலாக நன்கு தேற்றமாகவில்லையா?       

        அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று;
          செறிவான மாயை சிதைத்துஅரு ளாலே,
          பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி,
          நெறியான அன்பர் நிலைஅறிந் தாரே!
                                                - திருமந்திரம் 597

        திருவருளால் மெய்யுணர்வு கைவந்தவர் அசத்து (பொருளல்லவை) என நிலம் முதல் நாதம் ஈறாகக் கூறப்படும் முப்பத்தாறு அதாவது ஆறாறு ( 6 X 6 = 36) மெய்களும் நிலையான தன்மையுள்ளவை அல்ல என்னும் மெய்ம்மையை உணர்வர். அவ்வாறு உணரப்பெற்றதன் பயனாகப் மாயையினால் மிடைந்துகிடந்த நிலையுதல் இல்லாத அவற்றின்மீது மனம்பதிந்து அலைவுறுகின்ற பற்றினின்றும் விலகுவர்; தம்மைவிட்டு நீங்காத பேரருளில் சாரும் தன்மையை அறிவர்; இறைப்பேரருள் நிலைக்குப் பாத்திரமாகும் நெறியை அதிலிருந்தே தூய அன்பின் வழியாக அடைபவர்கள் நிலைபேறு பெறுவர்.

   ஆகவே, ஆறாறு (6 X 6 = 36) அதாவது முப்பத்தாறு மெய்களும் உயிர் தன்னையறிவதற்கு ஓர் இடைநிலை ஏற்பாடே தவிர – கருவித் தொகுதியே தவிர, அவை நிலைபேறு உடையவை அல்ல – நிலைபேறு தருவனவும் அல்ல. அவற்றை வகையறிந்து பயன்கொள்ள அல்லது பயன்காண அறிவறிவதுவே ஆருயிர்க்கு உள்ள கடனறிந்த காட்சியாகும்.

     நம் வெறுங்கண்ணுக்குப் புலப்படுகின்ற நிலம் எனும் முதல் பூதநிலையில் தொடங்கி; நாதம் எனும் உணர்த்துமெய் நிலை வரையில் செல்வது, பருமை நிலையிலிருந்து நுண்மை நிலைக்குள் மேன்மேல் நோக்கி நுட்பமுறுவதும் - நுட்பமறிவதுமான அறிவறியும் நிலை. நுண்மைநிலை ஆகிய நாதம் எனும் உணர்த்துமெய் தொடங்கி; நிலம் (மண்) எனும் பருமை வடிவான பூதநிலை வரையில் கீழ்நோக்கி வருவது – வந்திருப்பது அறிவறியாத கீழ்நிலை.

        தூய நிலையில் உயிர் இலங்குகையில், மாயை நிலைகளும்கூட நன்றாக விளக்கப்பட்ட – விளக்கமுறுத்திய கண்ணாடியினைப் போல, தூயதாய் அமைந்திருக்கும். இதனை உமாபதி சிவனார் வாய்மொழியால் அறியலாம்.

           மாயைமா மாயை மாயா
                             வரும்இரு வினையின் வாய்மை

                   ஆயஆ ருயிரின் மேவும்
                             மருள்எனின் இருளாய் நிற்கும்

                   மாயைமா மாயை மாயா
                             வரும்இரு வினையின் வாய்மை

                   ஆயஆ ருயிரின் மேவும்
                             அருள்எனில் ஒளியாய் நிற்கும்!
                                     - சிவப்பிரகாசம் : 70

       மேலான ஒளியாய்த் தனிநிற்கும் சிவம், மெய்கள் (தத்துவங்கள்) முப்பத்தாறிலும் ஒன்றாய் இயைந்து நிற்கிறது. அந்த மெய்களுள் நாதமாக உள்ள ஓங்காரத்தை ஊழ்கம் செய்து; ஓகியால் கண்டுதொழப்பெறுகின்ற சோதி வடிவமும் அந்தச் சிவமேயாகும். முற்சொன்ன மெய்களின் செயற்பாட்டுக்கு ஒளியை வழங்குவதும் அதே சிவம்தான். அவற்றை இயக்குவதும் அதுதான். அவ்வாறு அவற்றையெல்லாம் இயக்கித் தான் ஆடுகின்ற திருக்கூத்துக்கும் அச் சிவமே ஆதாரமாக – பற்றுக்கோடாக உள்ளது.
 
     தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
          தானே அகார உகாரம தாய்நிற்கும்
          தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்கு
          தானே தனக்குத் தராதலம் தானே!
                           - திருமந்திரம் 880
    
‘ஓ’ என அருவ ஒலியாக நிறைந்து இருந்து; எல்லா உலகங்களிலும் உள்ளும் புறமுமாக வியாலித்து (பரவி) நின்று; ‘அ’, ‘உ’ என இரண்டு ஒலிகளாக அதாவது உயிரும் சத்தியுமாக நின்று; ‘ஓம்’ என்ற முக்கூட்டு ஒலியால் உடம்பினுள், மலர்மிசையிலும் புருவநடுவிலும் நாதமும் விந்துமாகிய சோதியாய், உயிர் உணர்வுக்குக் காட்சி நல்கிடும் சிவத்தை, மக்கள் ‘ம’ என்ற எழுத்தால் சுட்டப்படும் ஆணவ மலத்தின் மறைப்பினால் – அதாவது மாயையின் மறைப்பினால், தன் உண்மையில் பொய்மை கலந்ததாகிய ஒரு மாய நிலையில் (நிலம்நீர் தீவளி விசும்பொடு கலந்த மயக்கம்), உணராமல் மயங்கிக் கிடக்கின்றனர். ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ என்பதையும் இணைத்தெண்ணுக.
 
      ஓர்எழுத் தாலே உலகுஎங்கும் தான்ஆகி
        ஈர்எழுத் தாலே இசைந்துஅங்(கு) இருவராய்
        மூஎழுத் தாலே முளைக்கின்ற சோதியை
        மாஎழுத் தாலே மயக்கமே உற்றதே!

      மறைமதி (அமாவாசை) மதி தேய்ந்து மறையும் நாள் (தேய்பிறை நாள்); அதுபோல் உடம்பில் விந்து (சுக்கிலம்) நீங்கும் நிலையே மூலத்தில் உள்ள சந்திரன் கெடும் (தேயும்) நாள். ஓகிக்கு ஆசை இல்லாமையால், அவ் விந்து எங்கும் போகாது; மூலத்தின்கண் கட்டுப்பட்டு அனலாய் மேலெழும். மூலத்தில் ஓங்காரத்தை வைத்து உள்கி, அதனை மதிமண்டலத்தில் கொண்டு சேர்த்து, ஒளியைக் கண்டு வாழும் உணர்வு அந்த அனலால் எய்தப் பெறும்.

     ஆம்உவாவில் தேய்மதி நாள்எனல்; விந்து
        போம்வழி எங்கணும் போகாது; யோகிக்குக்
        காமுறவு இன்மையின், கட்டுண்ணும் மூலத்தில்
        ஓம்மதியத்துள் விட்டு; உறைஉணர் வாறே
                                - திருமந்திரம் 869
     
     உடம்பில் மதிக்கலை தேயும்பொழுது, மூலம் ஆற்றல்மிக்கு இருக்கும் [அதாவது, மனம் உலகியல் இன்பத்தை நாடும்]. மதி வளரும் பொழுது, மூலத்தின் ஆற்றல் குறையும் [அதாவது, மனம் அருள்நிலையை நாடும்]. மூலம் சார்ந்துள்ள மண் மெய்யில் (பிருதிவி தத்துவத்தில்) எல்லா உயிர்வகைகளின் பிறவிகளும் உளவாகின்றன. ஓக சாதனையின் முடிவில் இம் மூலம் என்பது உயிரின் அகவொளியில் அடங்கிவிடும் என்பது ஓகநூலார் கூறும் உண்மை.
 
      தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்து
        தாரகை மின்னா சசிவளர் பக்கத்து
        தாரகை பூவில் சகலத்து யோனிகள்
        தாரகை தாரகை தான்ஆம் சொரூபமே!
                              - திருமந்திரம் 853

எனவே, ஆறாதாரத்தின்கண் அமைந்துள்ள ஆறு நிலைகளில் உயிரியக்கத்திற்கு உரிய அனைத்தும் அடங்கியுள்ள உண்மை இதன் வாயிலாக நன்கு தெரியவருகின்றது. உடல் - உயிர் என்ற இரண்டின் இயைபினை ஆராயப் புகுகின்ற அறிவார்ந்த மக்கட்கு, அவர்களிடமே அதற்கான வாயில்களும், வழித் திறவுகளும், அவற்றால் அடையத்தக்க அடைவுநிலைகளும் பொருந்தியிருக்கின்ற இயற்கை உண்மையினை அறிய முடிகின்றது அல்லவா?

      பிண்டத்துள் இயங்கும் பண்பினை, அண்டத்துள் இயங்கும் பண்பினோடு ஒத்துநோக்கப் பாரியதோர் அகப்பொருள் – அகத்தறிவு – அகத்துணர்வு இருக்கின்ற உண்மையினை இதன் வாயிலாக எவரும் ஐயந்திரிபறத் தெளிந்து கொள்ளலாகும் அன்றோ?

     உதயச் சுடர்மூன்றும் உள்வீட்டி லேகொளுத்தி
          இதயத் திருநடனம் காண்பதுஇனி எக்காலம்?
                                - பத்திரகிரியார் : 145

No comments:

Post a Comment