தாமரைக் கோயில்
ஓர்
அடிப்படைத்
தமிழ்மெய்யியல் குறியீடு
மண் இன்றி, நீர் இன்றி, வேர் இன்றி,
அரும்பு தோற்றாமல் தாமரை ஒன்று உச்சந்தலையினிடத்துப் பூக்கும். அது பூத்த தலம் (ஊர்)
என ஒன்றுமில்லை. அறிவுவெளியிலே உயிருணர்வு சேரப்பெறும்போது, உச்சந் தலையில் இத்
தாமரை மலர்ந்திடும். அதனால், அவ்விடத்திற்கு மலர் எனவும், மலர்மிசை எனவும்
பெயருண்டாயிற்று. அப்போது அருள்வெளியில் திகழும் பேரொளி ஆகிய சிவத்தைக் காணலாம்.
இந்த அறிவநிலையினை அடைந்தவர்க்கு முன், பின் எனச் சுட்டிக் குறிப்பிடுவதற்குக்
காலமேதும் இல்லை, எவ்வகை எல்லையும் இல்லை. அவர்கள் மாயைப்
பிணிப்பு நீங்கப்பெற்ற நீத்தார் எனப்படுவர்.
ஆறாதாரத்தால் தாங்கப்படாத ஆதாரமாக ஏழாம்
ஆதாரம் இருக்கின்ற காரணத்தாலும், அவற்றுக்கும்
அப்பாற்பட்டுச் செல்லும் தன்மையுடைதாய் தன்னிலையில் தானே திகழ்ந்திருப்பதாலும்
அதனை அனாதாரம் (வட.நிராதாரம்)
என்பர்.
மேலே, தாமரை என்று உருவகித்துச் சொல்லப்பெற்றதற்கு ஏற்ப, உலகத்தில் புற இயற்கைச்
சூழலில் காணப்படுகின்ற தாமரையின் தன்மைகளோடு பலபல ஆன்மவியல் அமைப்புநிலைகளும்
உண்மைகளும் தமிழ் மெய்யியல் மரபில் ஒப்பநாடி ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றது.
உலகத்தில் எவரும் காணுவது மண் (சேறு), தண்ணீர் என்பவற்றால் தாங்கப்படுகின்ற தாமரைக்கொடி - தாமரைப்பூ. அதற்கு ஒரு வேர் உண்டு, அதனைத் தாங்கித் திகழ்கின்ற தடாகம் (ஊர்) என்ற ஒன்றும் உள்ளது. அதே போல, நுண்ணுடம்பகத்து அறிவுணர்வு
இயக்கமாகிய ஆறாதாரத்திலே மண்
எனும் பூதத்திற்கு இடமாக உள்ள மூலம்
உள்ளது. அதிலிருந்து; மேல்நோக்கி அமைந்துசெல்லும் நீர் முதலான பிற பூதங்களால் ஆன
வேறு ஐந்து ஆதாரங்களும் உள்ளன. அவை நாதவிந்துகளுக்குத் தலமாக உள்ள புருவநடுவிடத்தோடு
நிறைவன. மண் முதலாக நாதம் ஈறாக உள்ள முப்பத்தாறு மெய்களும் இங்கு அப்படியே ஒத்த அமைப்பில்
அமைந்திருப்பதைக் காண்க.
புருவநடுவுக்கு மேலே பூப்பதுதான் ஆயிரத்தெட்டிதழ்த்
தாமரை என்னும் உச்சந்தலைத் தாமரை. அது கீழுள்ள ஆதாரங்களால் தாங்கப்படுவதன்று. அது, புருவநடுவிடத்துக் கூடப்பெற்ற
மதிக்கலை,
கதிர்க்கலை, அழற்கலை எனப்பட்ட மூன்று கலைகள் இயைந்தமைந்து
ஒரேநிலையினால் உந்தப்பெற்று; கீழ்கவிழ்ந்த நிலையிலிருந்து மேல்நிமிர்ந்த நிலையிலே
மலர்ச்சிபெற்று விளங்குவது. இதனைத் திருமூலர், “ஒன்றுண்டு தாமரை; ஒண்மலர்
மூன்றுஉள” என்று மற்றோரிடத்திலும்
குறிப்பிடுவார்.
மூலம் முதல் புருவநடு வரை இருப்பது ஆதாரம்; அவற்றுக்கு மேலே ஏழாவது நிலையாக அமைந்திருப்பது அனாதாரம் (வட. நிராதாரம்). இங்குதான் உயிர்க்கு இறைநிலைப் பேறு – சிவநிலைப் பேறு கூடப்பெறுகின்றது. தண்ணீர் உயர்ந்தால் தாமரை உயரும் என்பது போல, காற்றியக்கம்
மேலுயர்ந்தால் ஆன்மாவின் நிலையும் உயரும் என்பது ஒப்புமை.
புறத்திற் காணும் தாமரைப் பூவிற்குத்
தண்டு உண்டு. மேற்படித் தாமரைப்பூ உருவகத்தின்படிப் பார்த்தால், ஒருசில வடிவியல்
ஒற்றுமைகள் மாந்த உடம்பின் ஆதார அமைப்புகளுக்கும், முதுகந்தண்டுக்கும், மூளைக்கும்
தொடர்புறுத்துக் கூறத்தக்கனவாய் உள்ளன. கீழே உள்ள கிழங்குதான் அதற்கு (தாமரைக்கு) மூலம்.
அதிலிருந்து கிளம்பும் தாமரைக்கொடி – தண்டு – இலை – பூ என எல்லாமும் ஒரே மூலத்தைச் சேர்ந்திருக்கின்றன. அதுபோலத்தான், மூலம்
என்கின்ற முதல் ஆதாரமும் அனைத்துக்கும் அடிமுதலாக இருக்கின்றது.
தண்டுக்கு நடுவே உள்துளை உண்டு.
அதுபோல, முதுகந்தண்டுக்கு உற்றநிலையில் ஒருங்கியைந்து நரம்பு மண்டலமும் அவற்றுக்கு
முதல்களாக ஓடுகின்ற நாடிகளும் அமைந்துள்ளன. தண்டுக்குள்ள உள்துளை முடியுமிடத்துப்
பூவானது நிற்கின்றது. அதுபோல, புருவநடுவிடத்துக்கு முறையே வலப்பக்கம்
(வலக்கண்) –
இடப்பக்கம் (இடக்கண்) என அமைந்துள்ளவை
கதிர்க்கலை,
மதிக்கலை என்னும் இரண்டுமாகும்.
கதிர்க்கலை என்னும்
பிங்கலையுடன் தொடர்புடைய வலக்கண்; மதிக்கலை என்னும் இடகலையுடன் தொடர்புடைய இடக்கண். பின்னந்தலைப் பக்கமுள்ள
பிடரியிடத்து உள்ள பிடரிக்கண் என்பதனோடு
தொடர்புடையது அழற்கலை. இம் மூன்றும் முக்கண் எனப்படும். இம் முன்று கண்ணொளியும் ஒன்று சேர்ந்த பின், உச்சந்தலையில் உள்ள
ஆராயிர
நாடி [ஆர் ஆயிரம்] (வட. சகஸ்ரார நாடி) ‘அருளொளி’ பூக்கின்றது - மலர்கின்றது. இதனைத்தான், ஆயிரவிதழ்த் தாமரை (சகஸ்ராரம் - ஆயிரம் ஆரம் என்ற தாமரை) முதலில்
கவிழ்ந்திருப்பதாகவும் பின்பு நிமிர்வதாகவும் கூறுவர்.
[ ஆரம் + ஆயிரம் > ஆரமாயிரம் அல்லது ஆயிரவாரம் அல்லது ஆயிரத்தாரம். இதே
பொருளில்தான் வடமொழியிலும் சகஸ்ரம் + ஆரம் > சகஸ்ராரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரவிதழ் (ஆயிரம் + இதழ்) எனும் பொருளில்தான் சகஸ்ரம் + தளம் > சகஸ்ரதளம் எனவும் சமற்கிருத மொழியில் மற்றொரு பெயரும் கூறப்படும். சகஸ்ராரம் என்பதைத் தமிழில் வடவெழுத்து நீக்கிய வடிவில் சகத்திராரம் எனவும், சகஸ்ரதளம் என்பதையே சகத்திரதளம்
எனவும், சகஸ்ரம் என்பதைச் சகத்திரம் எனவும் தேவையின்றித் திணித்து வைத்துள்ள வழக்காறு உள்ளது.
இதில் ஆரம் என்ற சொல் தூய தமிழ்ச்சொல். ஆர் + அம் > ஆரம் என்றாயிற்று. வண்டிச் சக்கரத்துக்குப் பொருத்தியுள்ள கம்பிகள் ஆர் எனப்படும். அவ் வழக்கினையும் சக்கரத்து வடிவமைப்பினில் ஆர் பொருந்திக் காணப்படுகின்ற வடிவினிற்கு ஒப்பதாக
வட்டமாய் ஆயிரம் ஒளிக்கதிர் அல்லது ஒளிக்கீற்று
வீசுவதுபோல் இருப்பதுபற்றியே ஆரமாயிரம் என்னும் தமிழ்ப்பெயரிலும், ‘சகஸ்ராரம்’ என்னும் வடமொழிப் பெயரிலும் ஆரம் என்ற
தமிழ்ச்சொல் இடம்பெற்றிள்ளது. (சகஸ்ர + ஆரம் > சகஸ்ராரம் என அமைந்துள்ளது.)
சில இடங்களில் ஆர் ஆயிரம் என்பதற்கு மாற்றாக ஆயிரத்தெட்டு வட்டம் எனவும், ஆயிரத்தெண்வட்டம் எனவும்
கூறப்படும். வட்டம் என்பது சக்கரம் அல்லவா? இதேபோல், ஆயிரத்தெட்டிதழ்த் தாமரை எனவும் கூறப்படும். அமைப்புநிலை, வினைநிலை ஒப்புமைபார்த்துப் பெயர்கள்
பலவாகப் புறப்பட்டுள்ளன.]
மேற்சொல்லி வந்த ஆரம் என்பது மிகப் பெரிதும் வட்டமாய் அமைந்துநிற்கும் இதழ்களைக் கொண்டதாகப் புறவுலகத்திற்
காணப்படுகின்ற தாமரைத் தண்டினோடு பொருந்தி நிற்கின்ற தாமரைப் பூவிற்கு ஒப்பாக
இருக்கின்றது. இனி, புறவுலகத்துத் தாமரைப்பூ தண்டுடன்
பொருந்தியதாக இருக்கின்றது. அகவுலகத்துத் தாமரைப்பூ என்பது தண்டுடன் பொருந்தியில்லை என்பதே அவற்றிடையே உள்ள வேறுபாடு. இந்த
அமைப்பியல் ஒப்புமைகளை யெல்லாம் மனத்திற்கொண்டுதான் திருமூலர் மிக அழகாகப் பின்வருமாறு பாடி அருளிச்செய்துள்ளார்.
பாரில்லை நீரில்லை பங்கயம்
ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை
பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது
ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற்
பூவே
-
திருமந்திரம் 837
தாமரைப் பூவைத் தாங்கிநிற்கின்ற
தண்டுக்கு உள்துளை இருக்கின்றதைப் போல, மாந்த உடம்பு நிற்பதற்கு முகுகுப்புறத்து
ஊடுசெல்கின்ற தண்டுக்கும் உள்துளை உள்ளது. இந்த உள்துளை அமைப்பு ஒற்றுமையைக்
கொண்டு தூபி என்ற பெயரும் அமைந்துள்ளது. தூபி என்பது புறத்தே நிறுத்தப்படுகின்ற புகழ்த்தூண், வெற்றித்தூண் போன்றற்றைக் குறிக்கும். அது நடுவில் துளையுடையதாக இருப்பதுகொண்டு; இவ்வாறு
ஒப்புமைகண்டு தூபி என்ற பெயரும் அமையப்பெற்றுள்ளது.
[தூம்பு
> தூம்பி > தூப்பி > தூபி என உள்துளைப்பு
வினைக்கருத்து உள்ள தமிழ்வேரிலிருந்து பிறந்த தூய தமிழ்ச்சொல் தூபி. அது வடதமிழர் வழிவந்த வடதிரவிடர்
வழக்கில் இன்று பெரிதும் ஆளப்படுதல் பற்றி; அதன்மீது தென்னகம்வாழ் தொல்தமிழர்க்கு
இருந்துவந்த மரபுரிமை இல்லையாகிவிட மாட்டாது. ஆராய்ச்சி இல்லாதார் இதனை வடமொழிக்கு
உரிமைப்படுத்துவர். இது குறித்து சொல் அறிவியல் 4-5 எனும் என் நூலில் விரிவாக அறியலாம்.]
புருவநடுவில் அமைந்திருக்கும் ஆணைச்
சக்கரத்தில், உயிருணர்வை ஆக்கம்பெறச் செய்து; அண்ணாக்குக்கு உட்பகுதியில் அமுது
ஊறச்செய்து; பிடரியின் வழியே தலையை அடையும் மூலக் கனலால், பிடரியில் உள்ள அழல்கலை சார்ந்த அழல்கண் (பிடரிக்கண்
– வட. அக்கினிக் கண்) ஒளிபெறும். அடுத்து அதனைத் தொடர்ந்து முறையே கதிரும்
மதியும் ஆகிய வலக்கண்ணும், இடக்கண்ணும் ஒளிபெறும். இம் மூன்று ஒளியும் இணைந்து
புருவ நடுவில் பேரொளியாக விளங்கும். அதனை உயிருணர்வாலும், கட்புலனாலும் உணரலாகும்.
இவற்றுக்குத் தொடர்புடைய மூச்சு
இயங்கும் தலைமை வழிக்குத்தான் தாமரைக் கொடி எனப் பெயர். அத் தாமரைக் கொடிக்கு அதாவது அதன் தண்டுக்கு உள்துளை
இருப்பதைப்போல, மூச்சு இயங்கும் தலைமை வழியாகிய முதுகந்தண்டுக்கும் உள்துளை
இருப்பதுகொண்டு அதற்குத் தூபி என்ற பெயரும் அமைந்திருக்கின்றது.
பொதுவாகத் தூபியின் மேல் குமிழ்ப்பாக
அமைக்கப்பெறுகின்ற வடிவினைப் போல, பிடரிக்குத் தொடர்புடையதாகவே முதுகந்தண்டும் மூளையும்
அமைந்திருப்பதைக் காணலாம். எனவே, மூச்சுக்காற்றைக் கொண்டு மேலேறிடும் மூலக்கனல் – அதற்கு வழியாக இயங்கும் முச்சுடர் மண்டிலம் எல்லாம் இவ்வாறாக ஒப்புமைகாட்டி உரைப்பதற்கு ஏற்ற வடிவிலே இருப்பதைக்
கொண்டுதான் இப் பெயர்கள் யாவும் அமைக்கப்பெற்றுள்ளன என்பதைப் பொறுத்துச்
சிந்திக்கும் யாருமே நன்கு தெளியலாகும்.
இனி, தாமரை இலையின் மீதும், பூவின்
மீதும் படுகின்ற நீர் அவற்றிடம் ஒட்டுவதில்லை. குறிப்பாக இலையினைக் கொண்டு;
உலகியலில் வேர்கொண்டு தொடங்கப்பெற்றாலும் – அதாவது, மற்றவர்களைப் போல உலகியல்
வாழ்க்கையிலே இருந்துவந்தாலும், உண்மையான ஓகியின் உள்ளம் உலகத்தில் ஒட்டியும்
ஒட்டாது விலகியதாகவே இருக்கும் தன்மைக்குத் தாமரை இலைமேல் தண்ணீர் என்று ஒப்புமை கூறுவது பழந்தமிழ மெய்யில் மரபு.
தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத
தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்
தொழுது தொழுது தொழுது ஆடுபாம்பே!
-
பாம்பாட்டிச் சித்தர் : 70
தாமரையின் பல்வேறு பண்புகள்
உயிருக்கும் பரத்துக்கும் இயைபுகாட்டி உணரவும் – உணர்த்தவும் பயன்படுதல் பற்றியும்,
அதன்கண் பொலிந்திருக்கும் பிற பூக்களுக்கு இல்லாத ஒண்மைநலம் குறித்தும் அது தெய்வத்தன்மை உடைய பூவாகப் போற்றவும் பெறுகின்றது.
பற்றற்ற பற்றினைப் பற்றுதற்கும் –
அவ்வண்ணமாக வாழ்தற்கும் தாமரைப்பூ மிகப் பெரிதும் ஒத்தமையும் பான்மையினால் தமிழ் இறையியல் மரபில் அதற்கெனத் தனித்ததோர் மாண்பார்ந்த இடமும் தரப்பெற்றுள்ளது.
இத்துணைச் சிறந்த ஞானச்
சிறப்புடைமைபற்றி அதனை ஆன்றோர் ஞானமலர் – அறிவுமலர் என்றும் பாராட்டுவாராயினர். தாமரையின் பண்பு உயிருக்கு மட்டுமன்று,
பரம்பொருளுக்கும் ஒப்புமைகூறப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவவாக்கிய பெருமானார் மிக
அழகாக அதனைக் கையாண்டுள்ளார், பாருங்கள்!
நீரிலே முளைத்தெழுந்த
தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத
வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப்
பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு
இருப்பிரே
-
சிவவாக்கியம் 300
தவளத்
தாமரை தாதார் கோயில்
அவளைப் போற்றுதும்
அருந்தமிழ் குறித்தே
-
புறப்பொருள் வெண்பா மாலை
முத்துபோன்ற
ஒளிபொலிந்திருக்கும் ஒண்டாமரைப் பூவில் வீற்றிருக்கும் அறிவு வடிவாக அறியவரும்
அறிவுத்தெய்வத்தை, அருமைசான்றதாகிய தமிழைப் பெறுதவதற்காக போற்றித் தொழுகின்றேன்
என்பது இத் திருப்பாட்டின் சாரம்.
இஃது ஐயனாரிதனார், தம்
புலமையின் வளமையெல்லாம் பொதுளித் ததும்பச் தண்டமிழ்ச் சொற்சுவையும் ஒண்டமிழ்ப்
பொருட்சுவையும் பயில்தொறும் பயில்தொறும் அகத்தினிற் சுரக்கப் படைத்த புறப்பொருள் வெண்மாலை என்னும் புறப்பொருள்
இலக்கண நூலுக்கு யாத்துள்ள கலைமகள் வணக்கப் பாட்டும்
மேற்சொல்லி வந்த தொல்தமிழ் அறிவு மரபினுக்கு ஒத்து நிற்பதைக் காணுங்கள்.
‘தவளத் தாமரை தாதார் கோயில்’ என்பது எத்தகைய சீர்த்த
அறிவான செறிவான அழகான அருந்தமிழ்த் திருத்தொடர். சொல்லிய திறத்தினை உணர்ந்து
உணர்ந்து உள்க உள்க உள்ளம் உருகவில்லையா?
ஊத்தைச் சடலமென்
றெண்ணா தேஇதை
உப்பிட்ட பாண்டமென்
றெண்ணாதே
பார்த்த பேருக்கு ஊத்தையில்
லை–இதைப்
பார்த்துக்கொள்
உன்றன் உடலுக்குள்ளே!
-
கொங்கணச் சித்தர்: 24
உச்சிக்கு நேராய் உண்ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
*அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாமல் எரியுது வாலைப் பெண்ணே!
- கொங்கணச்
சித்தர்: 25
*அச்சு
= மூலம். மூலம் முதலாக உச்சி வரையுள்ள இறை இயைபினைக் கண்டுதெளிந்து உய்யுமாறு
அறிவுறுத்துகின்றது இந்தத் திருப்பாடல்.
இந்த
விதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக் கறிக்கையினால்
சாகிற தேதடி வாலைப்பெண்ணே!
-
கொங்கணச் சித்தர்: 39
பற்றற்று நீரில் படர்தா
மரைஇலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம்
தூரநிற்பது எக்காலம்?
-
பத்திரகரியார் புலம்பல் : 54
அந்தரத்தில் நீர்பூத்து
அலர்ந்தெழுந்த தாமரைமேல்
சிந்தைவைத்துக் கண்டு
தெரிசிப்பது எக்காலம்?
- பத்திரகரியார் புலம்பல் :
204
செந்தா மரைத்தாளைத்
தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு
அலைந்தேன்நான் பூரணமே
-
பூரணமாலை : 86
No comments:
Post a Comment