Saturday, July 13, 2013


இறையின்
இயற்கையுண்மை நிலை


      சிவன்அரு உருவும் அல்லன்
                சித்தினோடு அசித்தும் அல்லன்

         பவமுதல் தொழில்கள் ஒன்றும்
                பண்ணிடு வானும் அல்லன்

         தவமுதல் இயோக போகம்
                தரிப்பவன் அல்லன் தானே

         இவைபெற இயைந்தும் ஒன்றும்
                இயைந்திடா இயல்பி னானே!
                                  - சிவஞானசித்தியார்


‘இவைபெற இயைந்தும், ஒன்றும் இயைந்திடா இயல்பினானே’ என்பதே இவ்விடத்து நாம் பொறுப்பாக நின்று அறிந்துகொள்ளத்தக்க அடிப்படையான இறையியல் அறிவாகும். இதனை அறியாமல், கருதாமல், தெளியாமல் சும்மா வாயளப்பதெல்லாம் ஆர்வக் கோளாறுகளேயன்றி, வேறன்று.

சித்தர் பட்டினத்தடிகள் அருளிச்செய்துள்ள பூரண மாலை என்னும் நூற்றிரண்டு கண்ணிகளைக் கொண்டமைந்துள்ள திருப்பனுவல்,   இறைக்கும் உயிர்க்கும் இடைநிற்கும் மாயைக்குமான இயைபு வியைபுகளையெல்லாம் தெற்றென அடுக்கிக்கூறிச் செல்கின்றது. அடிகளார் அதனை ஆறாதார அறிவறிதலோடு தொடங்குகின்றார்.

பட்டினத்தடிகள் தமிழர் கண்ட மெய்யியலைக் கோவைபடக் கூறிச்செல்கின்ற திறம் வியந்து மகிழ்ந்து பற்றியுணரத் தக்கதாக இருக்கிறது. அவற்றுள் ஒருசிலவற்றை எடுத்துக்கூறுவது சாலும். விளக்கவுரை இல்லாமலே விளங்கிக்கொள்ளக் கூடிய நிலையில் அவர்தம் பாட்டுத்திறம் இருக்கிறது. ஆயினும், மேலே இதுகாறும் கூறிவந்த முப்பத்தாறு மெய் பற்றிய விளக்கம் பெறாதவர்க்கு அது விளங்குவது கடினமே. இறைநிலையும் உயிர்நிலையும் இயைந்துநிற்கின்ற இயல்பினை அடிகளார் எடுத்துக்கூறியவற்றுள் இதோ ஒருசில.

§        ஐந்தொழில் திருக்கூத்து நிலை:-

மூலவித்தாய் நின்று முளைத்து உடல்தோறும்
காலன்என அழிக்கும் கணக்குஅறியேன் பூரணமே

§        மெய்வகைப் பயனிலை:-

கருவிகள் தொண்ணூற்றாறில் விளையாடினதை
இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே

§        பிறப்புவகை:-

எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடியதைப்
பழுதறவே பாராமல் பயன்இழந்தேன் பூரணமே

§        இறையுயிர் இயைபுநிலை:-

அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய்நீ
கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே

§        மும்மலம் அறுத்து ஆறாதார அறிவறிதல்:

சகத்திரத்தின் மேல்இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே

§        இறைத்திருவருள் இயக்கநிலை:-

குருவாய் பரமாகிக் குடிலைசத்தி நாதவிந்தாய்
அருவாய் உருவானது அறியேன் பூரணமே
 
§        ஐந்தொழில் திருக்கூத்துப் பயனிழப்பு:-

என்னைத் திருக்கூத்தால் இப்படிநீ ஆட்டுவித்தாய்
உன்னை அறியாது உடல்அழிந்தேன் பூரணமே

§        அறிவறிந்தோர் கருத்து ஒன்றுதான்:-

எத்தனை பேரோ எடுத்தெடுத்துத் தான்உரைத்தார்
அத்தனை பேர்க்குஒன்றானது அறிகிலேன் பூரணமே

§        மெத்தக் கற்றும் அறிவறியார் நிலை:-

வான்என்பார் அண்டம்என்பார் வாய்ஞான மேபேசித்
தான்என்பார் வீணர் தனைஅறியார் பூரணமே

§        மெய்களை ஆராய்ந்து பயன்பெறுதல்:-

தத்துவத்தைப் பார்த்துமிகத் தன்னை அறிந்தறிவால்
உய்த்துஉனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே

இவ்வாறு படைப்பியல் மெய்மத்தினைத் தொடக்கமாக வைத்துப் பாடுகின்ற இலக்கிய மரபு பல சித்தர்களிடத்திலும் காணப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இறையொடு இசைந்திருத்தல் என்பதைக் குறித்துப் பாம்பாட்டிச் சித்தர் பெருமான் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார்.

 பாலில்சுவை போலும் எங்கும்பாய்ந்த ஒளியைப்
         பற்றுப்பொன் பற்றவைத்த பான்மை போலவே
...   ...       ...       ...

இதோ நம் பாவலரேறு பெருஞ்சித்திரப் பெருமான் தம் இறைப்பத்து எனும் பாக்களில் இவற்றைத் தொகுத்துரைத்தாற் போலப் பண்ணெடுத்துப் பாடுகின்றார் பாருங்கள்!

  ஊனுயிரை உந்துவதும் உள்ளத்தே பேசுவதும்
  வான்வளிதீ நீர்நிலமாய் வாய்ந்ததுவும் – மேன்மேற்
  புதிராய் அறிவாய்ப் பொருள்களுமாய் நிற்பது
  எதுவோ அதுவே இறை                   1

  எண்ணம் கொளுத்துவதும் எண்ணத் துலங்குவதும்
  பண்ண முனைப்பதுவும் பல்லுயிரும் தோற்றப்
  புதுநெறியால் ஆண்பெண்ணைப் புல்லுவித்தும் நிற்பது
  எதுவோ அதுவே இறை                   2

  முண்டும் பசித்தீயை மூட்டுவதும் மொய்த்தவுணா
  உண்டு செரிப்பித்தும் உள்ளிருந்து – பிண்டப்
  பொதியுடலை ஓய்வுறவே பொன்றுவித்தும் நிற்பது
  எதுவோ அதுவே இறை                   3

  பல்லுயிரை அன்பால் படுப்பித்தும் பல்லுலகை
  வல்லிழுப்பாற் கட்டி வயங்குவித்தும் – மெல்ல
  முதிரும் உயிர்க்கு முடிவாயும் நிற்பது
  எதுவோ அதுவே இறை                   4

  எண்ணற்ற பல்லுயிர்க்கும் ஏற்ற உருக்கொட்டுத்தும்
  வண்ணம் சுவைபண்பு வாய்ப்பித்தும் – உண்ண
  உதவுபொருள் பல்கோடி ஊன்றுவித்தும் நிற்பது
  எதுவோ அதுவே இறை                   5

  நெறிமுறைக்குத் தப்பாமல் நேர்ந்ததுவும் வல்லார்
  அறிவியற்கும் ஆன்றறிவாய் ஆழ்ந்ததுவும் – ஆழ்ந்தார்
  இதுவோ அதுவோ எனவிழைவார்க் கொன்றும்
  எதுவோ அதிவே இறை                   6

  ஒன்றினுள் ஒன்றாக உள்ளடங்கித் தோன்றுவதும்
  துன்றும் அணுவாய்த் துலங்குவதும் – தொன்று
  முதுபொருளாய் வீங்கி முகிழ்ப்பதுமாய் நிற்பது
  எதுவோ அதுவே இறை                   7

  செங்குருதி வெண்பாலாய்ச் செய்வதுவும் வெண்பாலைச்
  செங்குருதி யாய்ப்பின் திரிப்பதுவும் பூவுள்
  மதுமணத்தைக் கூட்டி மயக்குவித்தும் நிற்பது
  எதுவோ அதுவே இறை                   8

  அறியார்க்(கு) அறியாதாய் ஆழ்ந்தார்க்(கு) அறிவாய்ச்
  செறிவாய்ப் பொருள்எல்லாம் சேர்ந்(து)ஒளிர்ந்து நின்றே
  எதுபோழ்தோ வென்றார்க்(கு) இதுபோழ்தே தோற்றும்
  எதுவோ அதுவே இறை                   9

  வித்தாய்க் கருவாய் வெளிரல்குடம்பை யாய்த்தோன்றிப்
  புத்தின் முளைமகவாய்க் குஞ்சாய்ப் புறந்தந்து
  வெஃகின் பெருவிளை வாகி அஃகும்ஒன்று
  எஃதோ அதுவே இறை                   10
            - நன்றி:  கனிச்சாறு தொகுதி 1: பாவலரேறு பெருஞ்சித்திரனார்




No comments:

Post a Comment